உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் முன்னேற தடைகளை உடைப்போம்: ஸ்டாலின்

சென்னை: ''மாணவர்கள் படித்து முன்னேற எது தடையாக இருந்தாலும், அதை உடைப்போம்,'' என பள்ளி விழாவில் முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார்.அரசு பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம், ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம், கீழச்சேரியில் உள்ள அன்னாள் துவக்கப் பள்ளியில், இத்திட்டத்தை நேற்று முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.அவர் பேசியதாவது:அரசுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை; ஒரு குழந்தை கூட பசியோடு பள்ளியில் தவிக்கக் கூடாது என்ற எண்ணத்தில், இந்த திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. இதன் கீழ், தினமும் 20.73 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள், சத்தான, சுவையான காலை உணவை சாப்பிடுவர்.அரசின் முதலீடுதிட்டம் பற்றி அதிகாரிகளுடன் விவாதித்தபோது, 'இதை அரசின் செலவு என்று சொல்லாதீர்கள். வருங்கால தலைமுறையை உருவாக்குகிற அரசின் முதலீடு என சொல்லுங்கள்' என்றேன். இத்திட்டம் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கிறது. பெற்றோரின் பொருளாதார சுமையை குறைக்கிறது. மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கிறது; இடைநிற்றலை குறைக்கிறது.அரசின் திட்டங்களை பத்திரிகைகள் பாராட்டுகிறதோ, இல்லையோ, பயன் பெறும் மக்கள் பாராட்டிக் கொண்டு தான் இருக்கின்றனர். சிலருக்கு பாராட்ட மனமில்லை. அதை பற்றி நமக்கு கவலையும் இல்லை.பொய் செய்திகள் வழியாக, சில கருத்துருக்களை உருவாக்கி, அதில் குளிர் காயலாம் என நினைக்கிற, மக்கள் விரோத சக்திகளுடைய அஜென்டா எந்த காலத்திலும் பலன் தராது. மாணவர்கள் படிப்புக்கு எதுவும் தடையாக இருக்கக் கூடாது. பசி, நீட் தேர்வு, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை என எந்த ரூபத்தில் தடை வந்தாலும் அதை உடைத்தெறிவோம். 'நீட்' தேர்வு, புதிய கல்விக் கொள்கை தேவையற்றது என்பதால் எதிர்க்கிறோம்.கவனம்அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்களை நடத்துகிறோம். இன்னொரு பக்கம் மாணவர்களின் நலனுக்காக திட்டங்களை தீட்டுகிறோம். மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்துங்கள். ஏனென்றால் கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து. அந்த சொத்தை தமிழக மாணவர்கள் பெற்றாக வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.விழாவில், திருவள்ளூர் எம்.பி., சசிகாந்த் செந்தில், தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா, பள்ளி கல்வித் துறை செயலர் குமரகுருபரன், சமூக நலத் துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன், பள்ளி கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன், தொடக்கப் பள்ளி துறை இயக்குனர் சேதுராம வர்மா, திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் கலந்து கொண்டனர்.காமராஜருக்கு மரியாதைமுன்னதாக, பள்ளி வளாகத்தில், காமராஜர் படத்துக்கு மலர் துாவி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். மாணவர்களுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டார். 'தினமும் நேரம் தவறாமல், சரியான நேரத்தில் காலை உணவு சாப்பிட வேண்டும்' என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.'தாத்தா இல்லை, ஸ்டாலின்!'கீழச்சேரி பள்ளியில் குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்தி கொண்டிருந்தபோது, அருகில் இருந்த சிறுமியிடம், ''நான் யார் தெரிகிறதா?'' என்று முதல்வர் கேட்டார். அந்த சிறுமி, ''நீங்க ஸ்டாலின் தாத்தா,'' என்று பதிலளித்தாள். அதை கேட்டு சிரித்த முதல்வர், ''தாத்தா இல்லை; நான் ஸ்டாலின்,'' என்றார்.நன்றி சொல்லுங்க... சிறுமி உருக்கம்பெரம்பலுார் மாவட்டம், பெரிய வெண்மணி மேற்கு ஊராட்சியில் உள்ள சிதம்பரம் நடுநிலைப் பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டத்தை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார். அவரும் கலெக்டர் கற்பகமும் குழந்தைகளுடன் உணவருந்தினர். அமைச்சர் அருகில் இருந்த சிறுமி சுவிதா, ''எங்க அப்பா இறந்துட்டார். அம்மா காலையிலேயே கூலி வேலைக்கு போயிடுவாங்க. சில நாள் வீட்ல பழைய சோறு இருக்கும். மற்ற நாள் எல்லாம் சாப்பிடாம தான் பள்ளிக்கு வருவேன். மதியம் சத்துணவு சாப்பிடுவேன்,'' என்றாள்.உடனே அமைச்சர், ''அதுக்கு தான் காலைலயும் சாப்பாடு போடுறாரு முதல்வர்...'' என்றார். சிறுமி, ''நான் நன்றி சொன்னேன்னு அவர்கிட்ட சொல்லிடுங்க...'' என்றாள்.புன்னகைத்த அமைச்சர், ''நிச்சயம் சொல்றேன்மா...'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்