ஏ.ஐ., வேலைகளை பறிக்காது
நியூயார்க்: “ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், வேலைகளை பறிக்காது. அது, வேலையை சுறுசுறுப்பாக்க உதவும். இதனால், வேலை நாட்கள் வாரத்திற்கு நான்காக குறையும்,” என, 'என்விடியா' என்ற ஏ.ஐ., நிறுவனத்தின் சி.இ.ஓ., எனப்படும் தலைமை நிர்வாகி அதிகாரி ஜென்சன் ஹுவாங் தெரிவித்தார்.இன்று பல்வேறு துறைகளில், ஏ.ஐ., தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதை விரிவுபடுத்தும் ஆய்வு பணிகளும், ஏ.ஐ., தொழில்நுட்பத்துக்கு பயிற்றுவிக்கும் பணிகளும் நடக்கின்றன. இந்த ஆய்வு பணிகளுக்கு தேவையான மென்பொருளை, அமெரிக்காவைச் சேர்ந்த, 'என்விடியா' நிறுவனம் வழங்கி வருகிறது.இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங், நேற்று அளித்த பேட்டி:நேரத்தை எடுத்துக் கொள்ளும் பணிகளை, சில நிமிடங்களில் முடிக்கும் அசாத்திய திறன் ஏ.ஐ., தொழில்நுட்பத்துக்கு உள்ளது. இது, மக்களை ஓய்வெடுக்க விடாது.அவர்களை இன்னும் அதிகமாக வேலை செய்ய வைக்கும். நாம் எவ்வளவு விரைவில் ஒரு பணியை முடிக்கிறோமோ, அவ்வளவு விரைவாக புதிய யோசனைகளை ஆராயவும், மேலும் வேலை செய்யவும் வாய்ப்புகளை ஏ.ஐ., உருவாக்கும்.ஏ.ஐ.,யால் ஒவ்வொரு வேலையின் வடிவமும் மாறும்; வாழ்க்கைத்தரம் மேம்படும். ஒவ்வொரு தொழில் துறை புரட்சியும் சமூக நடத்தையில் ஏதோவொரு மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.ஏழு நாள் உழைப்பு ஆறு நாளாகவும், பின், ஐந்து நாளாகவும் மாறியது. இப்போது ஏ.ஐ., புரட்சி, வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற மாற்றத்தை கொண்டு வரலாம். இது பிரிட்டன், அமெரிக்காவில் சோதனை முயற்சியாக செயல்படுத்தப்படுகிறது. நல்ல பலனும் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.