உள்ளூர் செய்திகள்

தினமலர் பட்டம் வினாடி-வினா போட்டி ஆர்வமாக பதிலளித்த மாணவர்கள்

கோவை: 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் மற்றும் ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரி சார்பில், 'பதில் சொல்; பரிசை வெல்' எனும் மெகா வினாடி-வினா போட்டி, மலுமிச்சம்பட்டி, சாய் சக்தி வித்யாலயா பள்ளியில் நடந்தது.மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தையும், பொது அறிவுத் தேடலையும் ஊக்குவிக்கும் வகையில், 'பட்டம்' இதழில் பல்வேறு துறைகள் சார்ந்த தகவல்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, மாணவர்களின் அறிவுத்திறனை வெளிப்படுத்தவும், சிந்திக்கும் திறனை மேம்படுத்தவும் 2018ம் ஆண்டு முதல் வினாடி-வினா போட்டி நடத்தப்படுகிறது.கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பள்ளிகள் இப்போட்டியில் பங்கேற்று வருகின்றன. பள்ளி அளவிலான சுற்றில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிக்கும், அதிலிருந்து தேர்வு செய்யப்படும் எட்டு அணிகள் இறுதிப்போட்டிக்கும் தகுதி பெறுகின்றன. இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.இதன் ஒரு பகுதியாக, சாய் சக்தி வித்யாலயா பள்ளியில் நடந்த தகுதிச்சுற்றுப் போட்டியில், 65 மாணவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து நடந்த வாய்மொழி வினாடி-வினா சுற்றில், 'பி' அணியைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவியர் தனுஸ்ரீ, அஷ்லிஷா ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர்.போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்களை பள்ளித் தாளாளர்கள் வளர்மதி, வேலுச்சாமி ஆகியோர் வழங்கி பாராட்டினர். நிகழ்வில், தலைமை ஆசிரியை சரிதா, ஒருங்கிணைப்பாளர் சுகப்பிரியா, ஆங்கில ஆசிரியை சரண்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இப்போட்டிக்கு சத்யா நிறுவனம் இணை ஆதரவாளராகவும், ஸ்போர்ட்ஸ் ஹப் பரிசுப் பொருட்கள் வழங்கும் நிறுவனமாகவும் இணைந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்