உள்ளூர் செய்திகள்

7.29 லட்சம் மாணவர்கள் தமிழ், ஆங்கிலத்தில் பெயில்: சிறப்பு வகுப்புக்கு ஏற்பாடு

தமிழகத்தில், 6 முதல் 9ம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலம் எழுதுதல், படித்தல் மற்றும் அடிப்படை கணிதத் திறன் குறித்த தேர்வில், அரசு பள்ளி மாணவ - மாணவியர், 7.29 லட்சம் பேர் தேர்ச்சி பெறவில்லை. அவர்களுக்கு அடிப்படை கல்வி கற்பிக்கும் சிறப்பு வகுப்பு தற்போது நடக்கிறது.தமிழகத்தில், 38 மாவட்டங்களில் அரசு பள்ளிகளில், 6 முதல், 9ம் வகுப்பு வரை, 16 லட்சத்து 7,995 பேர் படிக்கின்றனர். அதில் , அடிப்படை கல்வி தெரியாதவர்கள் என கண்டறியப்பட்ட, 8 லட்சத்து 2,214 மாணவ - மாண வியருக்கு திறன் தேர்வு நடத்தப்பட்டது.கட்டாய தேர்ச்சி கடந்த ஜூலை 8 முதல், 10 வரை தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களின் மதிப்பெண்​அடிப்படையில் தேர்வு நடந்தது. இதன் முடிவுகள், ஜூலை 25ல் வெளியாகின. அதில், 7 லட்சத்து 29,683 பேர் தேர்ச்சி பெறவில்லை .இதன் மூலம் தமிழகத்தில், 6 முதல் 9ம் வகுப்பு படிக்கும் மொத்த மாணவ - மாணவியர் எண்ணிக்கையில், 45.38 சதவீதம் பேருக்கு அடிப்படை கல்வி கூட தெரியவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.அதிலும் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில், 6,322 பேர் தேர்ச்சி பெறவில்லை, இது, 67.41 சதவீதம்.பெரம்பலுார் மாவட்டத்தில், 10,741 பேர் தேர்ச்சி பெறவில்லை; இது, 65.85 சதவீதம். திருச்சி மாவட்டத்தில், 29,806 பேர் தேர்ச்சி பெறவில்லை, இது, 55.34 சதவீதம். சென்னை மாவட்டத்தில், 31,233 பேர் தேர்ச்சி பெறவில்லை, இது, 54.47 சதவீதம்.இது குறித்து, பள்ளி கல்வி அதிகாரிகள் கூறியதாவது:அரசு பள்ளிகளில் படிக்கும் உயர்நிலை வகுப்பு மாணவர்கள் பலர், 1 முதல், 5ம் வகுப்பு வரையுள்ள பாடங்களை கூட படிக்க முடியாமல் தடுமாறுகின்றனர். கணிதத்திலும் திண்டாடுகின்றனர் என, பல ஆய்வுகளில் தகவல் வெளியாகி உள்ளன.இதை, தமிழக அரசு மறுத்து வந்தது. பள்ளி கல்வித்துறை நடத்திய தேர்விலேயே, அடிப்படை கல்வியில் கூட தேர்ச்சி பெற முடியவில்லை.எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்பதால், கல்வியில் கவனம் செலுத்துவதில்லை. கற்றாலும், கற்காவிட்டாலும் தேர்ச்சி என்பது சரியான நடைமுறை அல்ல என்பதற்கு, இந்த தேர்வே சான்றாக உள்ளது.சிறப்பு பயிற்சி மேலும், திறன் தேர்வில் தோல்வியுற்றவர்களுக்கு ஆக., 1 முதல், 30 நாட்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது. இதற்காக, ஆசிரியர்களுக்கு பயிற்சி மற்றும் கையேடு வழங்கப் பட்டுள்ளது.வெளிப்படையாக கூறினால், 1 முதல், 5ம் வகுப்பு வரை கற்க வேண்டிய அடிப்படை பாடத்தை, மீண்டும் சொல்லி கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஐந்தாண்டுகளில் கற்க முடியாத மாணவ - மாணவியருக்கு, 30 நாட்களில் எப்படி சொல்லி கொடுக்க முடியும்?இவர்களை ரெகுலர் மாணவர்களில் இருந்து பிரித்து, சிறப்பு வகுப்புக்கு ஏற்பாடு செய்யும் போது, உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். இந்த சூழ்நிலைக்கு, மாணவ - மாணவியர் மட்டுமின்றி, தொடக்க கல்வி ஆசிரியர்களும் முக்கிய காரணம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்