7.5 சதவீத மருத்துவ ஒதுக்கீட்டுக்கு மத்திய அரசால் ஆபத்து: அழகிரி
சென்னை: தமிழக மாணவர்களின் 7.5 சதவீத மருத்துவ ஒதுக்கீட்டுக்கும் மத்திய அரசால் ஆபத்து ஏற்பட்டுள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:புதுச்சேரியில் மருத்துவ கல்லுாரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. அத்துடன் தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ள 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதையே நீதிமன்றத்தில் பா.ஜ. அரசு அளித்துள்ள பதில் நமக்கு உணர்த்துகிறது.சென்னை உயர்நீதிமன்றத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பா.ஜ. அரசு தெரிவித்துள்ள கருத்து தமிழக மாணவர்கள் மீது நடத்திய நேரடித் தாக்குதல். இது சமூக நீதிக்கும் இட ஒதுக்கீட்டிற்கும் எதிரானது. தேர்தலை கருத்தில் கொண்டே அ.தி.மு.க. அரசும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளது தெளிவாகிறது.தேர்தலுக்கு பின் 7.5 சதவீத இட ஒதுக்கீடு ஆபத்து ஏற்படும் என பயந்தது உண்மையாகி விட்டது.நான் அடிக்கிறது போல் அடிக்கிறேன்; நீ அழுவது போல் நடி என்பது போல தமிழக அரசு பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தோடு பா.ஜ. - அ.தி.மு.க. அரசுகள் விளையாடி கொண்டு இருக்கின்றன. இவர்களின் தமிழர் விரோதப் போக்குக்கு தமிழக வாக்காளர்கள் முடிவு கட்ட வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. இவ்வாறு அழகிரி கூறியுள்ளார்.