95 வயது முதியவருக்கு வெற்றிகரமான இதய சிகிச்சை
சென்னை: சென்னையைச் சேர்ந்த புரோமெட் மருத்துவமனை, 95 வயதான நோயாளி ஒருவருக்கு ஆசிய அளவில் அரிதாகக் காணப்படும் பாதுகாப்பான ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. கடுமையான மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம், ரத்தசோகை, பக்கவாதம் போன்ற சிக்கல்களுடன் இருந்த நோயாளிக்கு, மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் தலைமையிலான குழு பிசிஐ முறையிலும் இம்பெல்லா இதய பம்ப், இன்ட்ரா வாஸ்குலர் அல்ட்ரா சவுண்ட் போன்ற அதிநவீன கருவிகளையும் பயன்படுத்தி சிகிச்சையளித்தனர். சிகிச்சை எந்த சிக்கலுமின்றி வெற்றிகரமாக முடிந்தது, நோயாளி தற்போது முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.புரோமெட் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் கூறுகையில், “வயது வேறுபாடு இல்லாமல் எல்லோருக்கும் மேம்பட்ட இதய சிகிச்சை வழங்குவதே எங்கள் நோக்கம்,” என்றார். இதேபோல், டாக்டர் அருண் கல்யாணசுந்தரம் கூறுகையில், “95 வயதான நோயாளிக்கு சிகிச்சையளிப்பது தொழில்நுட்பத்துடன் திட்டமிடப்பட்ட துல்லியமும் குழுப்பணியும் தேவைப்படுகிறது,” என்றார். நோயாளி எஸ் நன்றியுடன் கூறுகையில், “அவர்கள் என் இதயத்துக்கு சிகிச்சை அளித்ததோடு என் உயிரையும் திருப்பித் தந்தார்கள்,” என்று தெரிவித்தார். இந்த வெற்றி, இந்திய மருத்துவ துறையின் தொழில்நுட்ப திறனையும் உலகத் தரத்திலான இதய சிகிச்சை வளர்ச்சியையும் வெளிப்படுத்துகிறது.