உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மாயாவதி, உத்தவ், தேஜஸ்வி - பா.ஜ., தலையெழுத்தை தீர்மானிக்கும் சக்திகள்!

மாயாவதி, உத்தவ், தேஜஸ்வி - பா.ஜ., தலையெழுத்தை தீர்மானிக்கும் சக்திகள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை, கடந்த 2014, 2019ல் பா.ஜ.,வுக்கு பெரும் வெற்றியைத் தந்த உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பீஹார் ஆகிய, மூன்று மாநிலங்களும் இந்த முறை அக்கட்சிக்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.லோக்சபா தேர்தலில் ஆறு கட்ட ஓட்டுப் பதிவு, அதாவது 486 தொகுதிகளில் ஓட்டுப் பதிவு நடந்து முடிந்துள்ளது. வரும் ஜூன் 1ம் தேதி இறுதி கட்டமாக, 57 தொகுதிகளுக்கு ஓட்டுப் பதிவு நடக்கவுள்ளது. 370க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறுவோம் என, பா.ஜ., தலைவர்கள் நம்பிக்கையுடன் கூறி வருகின்றனர். ஆனால், பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை கிடைக்காது. உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா. பீஹாரில் பா.ஜ., பெரும் பின்னடைவைச் சந்திக்கும் என, காங்கிரஸ் உள்ளிட்ட, 'இண்டியா' கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூறி வருகின்றனர்.கடந்த 2014ல் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிட்டு, பா.ஜ.,வுக்கு எதிரான ஓட்டுகளை குறிப்பாக பட்டியலின ஓட்டுகளை பிரித்ததால், பா.ஜ., 73 இடங்களில் வென்றது. 2019ல் சமாஜ்வாதி -- பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்த போதிலும், பா.ஜ., கூட்டணி 64 இடங்களில் வென்றது. சமாஜ்வாதியுடன் மாயாவதி கூட்டணி அமைத்ததை, பட்டியலின மக்கள் ஏற்கவில்லை.இந்த தேர்தலில், பா.ஜ., காங்கிரஸ்,- சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் என, மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. 2014ல் மாயாவதிக்கு ஓரிடம்கூட கிடைக்காவிட்டாலும் 19.77 சதவீதம் அதாவது 1.59 கோடி ஓட்டுகளைப் பெற்றார். இந்த தேர்தலில் மாயாவதி கட்சி தன் 20 சதவீத ஓட்டு வங்கியை தக்க வைத்தால், 2014 போல பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெறலாம். மாறாக, மாயாவதி கட்சியின் ஓட்டுகள், சமாஜ்வாடி,- காங்கிரஸ் கூட்டணிக்கு சென்றால், பா.ஜ.,வுக்கு பின்னடைவு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. மாயாவதி எந்த அளவுக்கு ஓட்டுகளைப் பெறுகிறாரோ, அதைப் பொறுத்தே உ.பி.,யில் தேர்தல் முடியும் அமையும் என்கின்றனர். ஆனால், 'நாட்டிலேயே உ.பி.,யில் மட்டும்தான் மோடி, யோகி ஆதித்யநாத் என, இரு செல்வாக்கான தலைவர்கள் உள்ளனர். எனவே, 70க்கும் அதிகமான இடங்களைப் பெறுவோம்' என, பா.ஜ.,வினர் தெரிவிக்கின்றனர்.அதுபோல, கடந்த இரு தேர்தல்களிலும் பா.ஜ.,வுக்கு பெரிய அளவில் கை கொடுத்த மகாராஷ்டிராவில், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா தன் ஓட்டு வங்கியை தக்கவைத்தால், பா.ஜ.,வுக்கு சிக்கல் ஏற்படும் என்கின்றனர். கடந்த 2019ல் பா.ஜ., 25ல் போட்டியிட்டு, 23ல் வென்றது; இப்போது 28ல் போட்டியிடுகிறது. இதுவரை சிவசேனாவுக்கு ஓட்டளித்த ஹிந்துத்துவ வாக்காளர்கள், இப்போது பா.ஜ.,வுக்கு ஓட்டளித்துள்ளனர். எனவே, 28ல் 20க்கும் குறையாமல் வெற்றி பெறுவோம் என்கின்றனர் பா.ஜ.,வினர். நாற்பது தொகுதிகளைக் கொண்ட பீஹாரில், முதல்வர் நிதீஷ்குமார் செல்வாக்கு குறைந்துள்ளதால், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் செல்வாக்கான தலைவராக உருவெடுத்துள்ளதாக, இண்டியா கூட்டணியினர் தெரிவிக்கின்றனர். ராம்விலாஸ் பாஸ்வான் ஆதரவுடன் தேர்தலை சந்தித்ததால், 2014, 2019ல் பட்டியல் இனத்தோரின் ஓட்டுக்கள் பா.ஜ.,வுக்கு கிடைத்தன. தேஜஸ்வியின் எழுச்சியால் யாதவ் அல்லாத ஓ.பி.சி., ஓட்டுகளும், பட்டியலின ஓட்டுகளும் இண்டியா கூட்டணிக்குச் சென்றால் பா.ஜ.,வுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்கிறார்கள்.உ.பி.,யில் மாயாவதியும், மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவும், பீஹாரில் தேஜஸ்வி யாதவும் பெறப்போகும் ஓட்டு சதவீதமே, இந்த மாநிலங்களில் பா.ஜ.,வின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் என்றும், அதனால்தான், மேற்கு வங்கம், ஒடிசா, தெலுங்கானாவில் பா.ஜ., அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

S. Gopalakrishnan
மே 26, 2024 19:40

மூன்று மாஸங்களாக தேர்தல் ஹேஷ்யங்களை படித்து பைத்தியம் பிடிக்கும் நிலை வந்து விட்டது.


N Sasikumar Yadhav
மே 26, 2024 18:07

இவர்கள் எல்லாம் ஒரு பொருட்டேயில்லை நாட்டுமக்களுக்கு செய்திருக்கிற நன்மைகளால் பாஜக பெரிய வெற்றியடையும்


Syed ghouse basha
மே 26, 2024 12:48

மிகுந்த சிரமத்தின் மத்தியில் பெரும்பாலான தொகுதிகளில் தேர்தல் முடிந்த நிலையில் பஜக. அடைய போகும் தோல்வியை ஒத்து கொண்டதற்கு நன்றி


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை