உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஆரணியில் பராமரிப்பின்றி அழியும் அரண்மனை; புதுப்பித்து பாரம்பரிய சின்னமாக்குமா அரசு?

ஆரணியில் பராமரிப்பின்றி அழியும் அரண்மனை; புதுப்பித்து பாரம்பரிய சின்னமாக்குமா அரசு?

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த எஸ்.வி.நகரத்தில், பராமரிப்பின்றி அழிந்து வரும் அரண்மனையை பாதுகாக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் சோழர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக, இன்றைய திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார், வேலுார் மாவட்டங்கள் இருந்தன. சோழர்கள் ஆட்சிக்கு உட்பட்ட கடம்பூர் சம்புவராயர்கள், சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின், பாலாற்றின் தென்கரையில் படைவீட்டை தலைநகராக வைத்து, புதிய அரசாட்சியை துவக்கினர்.

ஆரணி ஜாகீர்

அவர்களுக்கு பின், சாளுவர், விஜயநகர மன்னர்கள், முகலாயர் பிடியில் படைவீடு பகுதி சிக்கியது. பின், செஞ்சியை ஆண்ட மராட்டியர்களின் கீழ், ஆரணி ஜாகீர் பகுதி வந்தது. மராட்டிய மன்னர் சிவாஜியின் ஒன்றுவிட்ட சகோதரன் வெங்கோஜி என்பவரால் வெற்றி கொள்ளப்பட்டு, அதன்பின், வேதாஜி பாஸ்கர் பந்த் என்ற மராட்டிய தலைவர் பொறுப்பில், ஆரணி ஜாகிர் இருந்தது.இதையடுத்து, அவுரங்கசீப் இப்பகுதியை வென்று, ஆற்காடு நவாப் என்ற கவர்னரின் கீழ் கொண்டு வந்தாலும், ஆரணி ஜாகீர்தாரர் அவர்களுடன் இணக்கமாக இருந்து, தன் ஆளுமை பகுதியை தக்க வைத்துக்கொண்டார். ஆரணி ஜாகீர்தாரராக இருந்த வேதாஜி பாஸ்கர் பந்த், தனக்காகவும், தன் மனைவிக்காகவும், அரண்மனை கட்ட திட்டமிட்டார். இதற்காக, அவர் தேர்வு செய்த பகுதி, சத்திய விஜயநகரம். இன்று, எஸ்.வி., நகரம் என அழைக்கப்படுகிறது. இப்பகுதியில், 18ம் நுாற்றாண்டில், 35 ஏக்கர் பரப்பளவில், மிகப்பெரிய அரண்மனையை கட்டினார். அவருக்காக ஒரு அரண்மனையும், மனைவிக்காக ஒரு அரண்மனையும் கட்டப்பட்டது. இவை, ராஜா அரண்மனை, ராணி மாளிகை என்று அழைக்கப்படுகிறது.ராஜா அரண்மனையில், தர்பார் மண்டபம், ஆட்சிக்கூடம், விருந்தினர் அறை, ஊழியர்கள் குடியிருப்பு என, அனைத்து அம்சங்களும் இடம் பெற்றிருந்தன. ராணி மாளிகையில், குளியல் குளங்கள், நீராழி கிணறு, அந்தப்புரம் போன்றவை இடம் பெற்றன. இந்த இரு அரண்மனைகளும் தற்போது பராமரிப்பின்றி சீரழிந்த நிலையில் உள்ளன.

கோரிக்கை

கடந்த தி.மு.க., ஆட்சியின் போது, 2009ம் ஆண்டு, அண்ணா பொறியியல் கல்லுாரிக்காக, அண்ணா பல்கலை உதவி யுடன், ராணி மாளிகை புதுப்பிக்கப்பட்டது. அதன்பின், அதுவும் பராமரிக்கப்படவில்லை. பொதுப்பணித்துறை சார்பில், அரண்மனையை புதுப்பிக்க, திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு பல முறை அனுப்பப்பட்டுள்ளது. இருந்தும், நிதி ஒதுக்கப்படாததால், அரண்மனை புதுப்பிக்கப்படாமல் உள்ளது.தமிழக அரசு போதிய நிதி ஒதுக்கி, பாழடைந்து கிடக்கும் அரண்மனையை புதுப்பித்து, அதை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sree
ஜூன் 24, 2024 18:59

மாற்றி விட்டாலே தமிழர்கள் என அடையாளம் தெரியும் பின்பு எப்படி நாங்க திராவிடன் என சொல்லுவது தமிழன் கலாச்சாரத்தை திராவிடன் மது இலவசமூலமாக அழிக்கிறான் என்பதுதான் உண்மை


N Sasikumar Yadhav
ஜூன் 24, 2024 08:26

இந்த இடங்களை பாதுகாப்பாக மாற்றி பள்ளிக்கூடங்களுக்காக புணரமைக்க வேண்டும்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி