காஞ்சிபுரம், காஞ்சிபுரம் லோக்சபா தனி தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டசபை தொகுதிகளில், கடந்த 10 ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில், தி.மு.க., - அ.தி.மு.க., இடையே கடுமையான போட்டி நிலவியுள்ளது. இருப்பினும், அ.தி.மு.க.,வை காட்டிலும், தி.மு.க., அதிக ஓட்டுகள் பெற்றுள்ளன.லோக்சபா தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. காஞ்சிபுரம் தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் ராஜசேகர், தி.மு.க., வேட்பாளர் செல்வம், பா.ம.க., வேட்பாளர் ஜோதி, நாம் தமிழர் வேட்பாளர் சந்தோஷ்குமார் ஆகியோர், நகர்ப்புறம், கிராமப்புறங்களில் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.இரண்டாவது முறையாக, இம்முறை வெற்றி பெற வேண்டும் என, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர்.அதேபோல, அ.தி.மு.க., கூட்டணி கட்சியினரும் பகுதி, வார்டு வாரியாக பிரசார பணிகளில் தீவிரம் காட்டியுள்ளனர். பா.ம.க., வேட்பாளர் ஜோதிக்கு, பா.ஜ.,வினர் முழு ஆதரவோடு, தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர். இருப்பினும், காஞ்சிபுரம் தொகுதியில், கடந்த கால தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது, தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இரு பிரதான கட்சிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியுள்ளது.காஞ்சிபுரம் லோக்சபா தொகுதிக்குட்பட்ட செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம், செய்யூர், காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகிய ஆறு சட்டசபை தொகுதியிலும், தி.மு.க., - அ.தி.மு.க., என, இரு பிரதான கட்சியினரும் மாறி, மாறி போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.செய்யூர், செங்கல்பட்டு, உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளில், கடந்த 2016, 2021 ஆகிய இரு சட்டசபை தேர்தல்களிலும், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினரே இரு முறை வெற்றி பெற்றுள்ளனர்.இடையே 2019ல் நடந்த லோக்சபா தேர்தலிலும், தி.மு.க., வேட்பாளர் செல்வம் வெற்றி பெற்றுள்ளார்.அ.தி.மு.க.,வை பொறுத்தவரையில், 2014ல், ஜெயலலிதா இருந்தபோது, காஞ்சிபுரம் லோக்சபா தேர்தலில் மரகதம் வெற்றி பெற்றார்.அதைத் தொடர்ந்து நடந்த 2016 சட்டசபை தேர்தலில், திருப்போரூரில் மட்டுமே அ.தி.மு.க., வெற்றி பெற்றது. மற்ற அனைத்து இடங்களிலும் தி.மு.க.,வினரே வெற்றி பெற்றிருந்தனர். 2021ல் நடந்த தேர்தலில், மதுராந்தகத்தில் மட்டுமே அ.தி.மு.க., வெற்றி பெற்றது.கடந்த 10 ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில், காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில், 2014ல், 4.99 லட்சம் ஓட்டுகள் பெற்று, தி.மு.க.,வை காட்டிலும் அ.தி.மு.க, அதிக ஓட்டுகள் பெற்றிருந்தது.ஆனால், அதையடுத்து வந்த 2016 சட்டசபை தேர்தல், 2019 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபை தேர்தல் ஆகிய தேர்தல்களில், அ.தி.மு.க.,வை காட்டிலும், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சியினரே அதிக ஓட்டுகள் பெற்றிருக்கின்றனர்.குறிப்பாக, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகளிலும், தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களான சுந்தர், வரலட்சுமி, எழிலரசன் ஆகிய மூவர், இரண்டாவது முறை தொடர் வெற்றி பெற்றுள்ளனர்.இந்த மூன்று தொகுதிகளும், தி.மு.க.,வுக்கு பெரிய பலமாக இருப்பதாக, தி.மு.க.,வினர் தெரிவிக்கின்றனர். லோக்சபா தொகுதிக்குள் இருக்கும் ஆறு சட்டசபை தொகுதிகளில், 5 சட்டசபை தொகுதிகள் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் வசம் இருப்பதால், இம்முறை வெற்றி நிச்சயம் என்ற எண்ணத்தில், தி.மு.க., நிர்வாகிகள் பிரசாரம் செய்து வருகின்றனர்.அ.தி.மு.க.,வின் மாவட்ட செயலர் சோமசுந்தரம், ஆறுமுகம் ஆகிய இருவர் தலைமையில், செங்கல்பட்டு, உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய தொகுதிகளில், கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.கடந்த கால தேர்தல்களில், தி.மு.க., - அ.தி.மு.க., இடையே, சராசரியாக 50,000 - 60,000 ஓட்டுகள் மட்டுமே, வித்தியாசம் இருப்பதால், இம்முறை கூடுதல் ஓட்டு பெற்று வெற்றி பெற இரு கட்சியினரும் போட்டி போட்டு களத்தில் இறங்கி பிரசாரம் செய்கின்றனர்.
1.37 லட்சம் ஓட்டுகள்!
2021ல் நடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் பா.ம.க., கூட்டணியில் இருந்த போதும், காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில், 6ல் 5 சட்டசபை தொகுதிகள் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் வசம் சென்றன.இம்முறை, அ.தி.மு.க.,வில் இருந்து பா.ம.க., விலகி, பா.ஜ., கூட்டணியில் போட்டியிடும் சூழலில், பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., எத்தனை ஓட்டு பெறும் என்பதில், பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.கடந்த 2016ல் சட்டசபை தேர்தலில் தனியாக போட்டியிட்ட பா.ம.க., செங்கல்பட்டு தொகுதியில், 20,899 ஓட்டுகளும், திருப்போரூர் தொகுதியில் 28,125, செய்யூரில் 17,892 ஓட்டுகளும், மதுராந்தகத்தில் 16,081, உத்திரமேரூரில் 24,221 ஓட்டுகளும், காஞ்சிபுரத்தில் 30,102 ஓட்டுகளும் என, ஆறு சட்டசபை தொகுதிகளிலும், 1 லட்சத்து 37 ஆயிரத்து 320 ஓட்டுகள் பெற்றுள்ளது.அதே 2016ல் தனித்து போட்டியிட்ட பா.ஜ., ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளிலும், 10,000த்துக்கும் குறைவான ஓட்டுகளே பெற்றிருந்தது.இந்நிலையில், இரு கட்சியினரும் கூட்டணியில் உள்ள தற்போது, அ.தி.மு.க., - தி.மு.க., கட்சியினருக்கு எந்த அளவு சவாலாக இருப்பர் என்பது தேர்தல் முடிவில் தெரியவரும்.