“அரசு துறையின் உயர் பதவிகளுக்கு நேரடி நியமனங்கள் செய்வதற்கான நடவடிக்கைகளை காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. ஆனால், இதுபோன்ற நேரடி நியமன கருத்துருவாக்கத்தை அறிமுகப்படுத்தியதே, காங்., தலைமையிலான முந்தைய ஐ.மு., கூட்டணி அரசால், 2005ல் அமைக்கப்பட்ட வீரப்ப மொய்லி தலைமையிலான நிர்வாக சீர்திருத்த குழு தான்,” என, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சூடாக பதிலடி கொடுத்துள்ளார்.கடந்த 2018ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, மத்திய அரசு துறைகளில் உள்ள உயர் பதவிகளுக்கு அந்தந்த துறைச்சார்ந்த நிபுணர்களை நேரடியாக நியமிக்கும் நடவடிக்கையை துவக்கியது. இதன் அடிப்படையில், இது வரையில் 63 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இதே அடிப்படையில், 45 இணை செயலர்கள், இயக்குனர்கள், துணை செயலர்கள் பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நிபுணர்களை பணி நியமனம் செய்ய கடந்த வாரம் மத்திய அரசு அழைப்பு விடுத்தது.குற்றச்சாட்டுஇந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிஉள்ளது.லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று கூறியதாவது:நேரடி நியமனம் தொடர்பான விஷயத்தில் காங்கிரஸ் கட்சியின் கபட நாடகம் அம்பலமாகி உள்ளது. உயர் பதவிகளுக்கு நேரடி நியமனம் என்ற விஷயத்தை முதல் முதலில் அறிமுகப்படுத்தியதே, முந்தைய காங்கிரஸ் ஆட்சி தான்.கடந்த 2005ல் காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், வீரப்ப மொய்லி தலைமையில் அமைக்கப்பட்ட நிர்வாகத்துக்கான இரண்டாவது சீர்திருத்த கமிட்டி தான், இந்த முறையை பரிந்துரைத்தது.'அரசின் குறிப்பிட்ட அலுவல்களுக்கு நிபுணத்துவம் வாய்ந்த அறிவு மற்றும் ஆலோசனைகள் தேவைப்படுகின்றன.தனியார் துறை பொதுத்துறை உட்பட மற்ற துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த தலைமை பண்புள்ளவர்கள், அறிவுஜீவிகள் ஆகியோரை கொண்டு இந்த தேவையை பூர்த்தி செய்யலாம்' என, அந்த குழு பரிந்துரை செய்திருந்தது.இந்த பரிந்துரையை தான், வெளிப்படைத் தன்மையுடனும், நேர்மையாகவும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக அரசு செயல்படுத்துகிறது.இவ்வாறு அவர் கூறினார்.முதல் குழு எது?இந்திய ஆட்சிப்பணி துறை சார்ந்த நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்பதற்காக நிர்வாக சீரமைப்பு குழு அமைக்கப்பட்டது. இதன் முதல் குழு, 1966ல், மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைக்கப்பட்டது. பின், அனுமந்தய்யா இந்த குழுவுக்கு தலைவராக இருந்தார்.சிவில் சர்வீஸ் துறையான ஐ.ஏ.எஸ்., எனப்படும், இந்திய ஆட்சிப் பணிக்குள் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து விரிவான ஆலோசனைகளும், விவாதங்களும் நடந்தன. ஆனால், இந்த குழு எந்த பரிந்துரையையும் அளிக்கவில்லை.இதற்கிடையே, மத்திய அமைச்சரும், பா.ஜ., கூட்டணி கட்சியான லோக் ஜன சக்தி கட்சி தலைவருமான சிராக் பஸ்வான் கூறுகையில், ''நேரடி நியமனம் தொடர்பான விஷயத்தில் எங்கள் கட்சிக்கு உடன்பாடில்லை. அரசு பணிகளில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும். இந்த விஷயத்தில் எங்கள் கவலையை அரசிடம் தெரிவிப்போம்,'' என்றார்.
வீரப்ப மொய்லி குழுவின்
பரிந்துரைகள் என்ன? இந்திய ஆட்சிப்பணி நிர்வாக சீரமைப்புக்கான இரண்டாவது குழு, 2005ல் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு., கூட்டணி ஆட்சியின்போது காங்., மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தலைமையில் அமைக்கப்பட்டது. அந்த ஆலோசனைகளின் முடிவாக பல அறிக்கைகள் வழங்கப்பட்டன.அவ்வாறு வழங்கப்பட்டதில், 'ரிபர்பிஷிங் ஆப், பர்சனல் அட்மினிஸ்ட்ரேஷன் - ஸ்கேலிங் நியூ ஹைட்ஸ்' என்ற தலைப்பில் அமைந்த, 10வது அறிக்கை முக்கியமானது. அதில் வழங்கப்பட்ட முக்கிய பரிந்துரைகளில் ஒன்றுதான், அரசு துறை உயர் பதவிகளுக்கு, குறிப்பிட்ட துறை சார்ந்த நிபுணத்துவம் வாய்ந்தவர்களை நேரடியாக நியமிக்கலாம் என்பது.1அரசின் குறிப்பிட்ட அலுவல்களுக்கும், அது சார்ந்த சிக்கல்களுக்கும், நிபுணத்துவம் வாய்ந்த அறிவு மற்றும் ஆலோசனைகள் தேவைப்படுகின்றன. இவை, வழக்கமான சிவில் சர்வீஸ் வாயிலாக தேர்வாகும் அதிகாரிகளிடம் கிடைப்பதில்லை2தனியார் துறை, பொதுத்துறை உட்பட மற்ற துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த தலைமை பண்புள்ளவர்கள், அறிவுஜீவிகள் ஆகியோரை கொண்டு இந்த தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம்3நிபுணர்களை குறுகியகால அடிப்படையிலோ, ஒப்பந்த அடிப்படையிலோ, பொருளாதாரம், நிதி தொழில்நுட்பம், மற்றும் பொதுத்துறை கொள்கை ஆகிய அரசு துறைகளுக்கு நியமிக்கலாம்4நிபுணர்களை தேர்வு செய்யும் முறை மெரிட் அடிப்படையிலும், வெளிப்படைத்தன்மையில் முக்கியத்துவம் கொண்டதாகவும் இருக்க வேண்டும். இந்த தேர்வு முறையை கண்காணிப்பதற்கென்றே தனி ஆணையம் ஒன்றை நியமிக்க வேண்டும்.இவ்வாறு அந்த பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.