உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 10 லோடு மண் கேட்டு அரசு அதிகாரி மீது தாக்குதல்: பள்ளிக்கரணை தி.மு.க., கவுன்சிலர் அடாவடி

10 லோடு மண் கேட்டு அரசு அதிகாரி மீது தாக்குதல்: பள்ளிக்கரணை தி.மு.க., கவுன்சிலர் அடாவடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பத்து லோடு மண் கேட்டு, நெடுஞ்சாலை துறை அதிகாரி மீது, பள்ளிக்கரணை தி.மு.க., கவுன்சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னை, வடபழனி, மன்னார் தெருவைச் சேர்ந்தவர் தேவேந்திரன், 58; தமிழக நெடுஞ்சாலைத் துறை சாலை ஆய்வாளர். இவர், கடந்த 3ம் தேதி இரவு, பள்ளிக்கரணை ரேடியல் சாலை, தனியார் மருத்துவமனை எதிரே, ஊழியர்களுடன், சாலை விரிவாக்க பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது, வார்டு 189க்கு உட்பட்ட பள்ளிக்கரணை தி.மு.க., கவுன்சிலர் பாபு, தன் காரில் சிலருடன் வந்து, 10 லோடு மண் தேவைப்படுவதாகவும், தான் சொல்லும் இடத்தில் அதை கொட்டி வைக்கும்படியும், தேவேந்திரனிடம் கூறி உள்ளார். இதற்கு தேவேந்திரன் மறுத்துள்ளார்.

ரத்தம் கொட்டியது

இதில் ஆத்திரமடைந்த கவுன்சிலர் பாபு, தன் ஆட்களுடன் சேர்ந்து, அதிகாரி தேவேந்திரன் மற்றும் ஊழியர்களை தாக்கியுள்ளார். இதில், தேவேந்திரன் காலில் காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டியது. குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.தேவேந்திரன் அளித்த புகாரில், பள்ளிக்கரணை போலீசார் விசாரிக்கின்றனர்.இச்சம்பவம் குறித்து, கவுன்சிலர் பாபு நிருபர்களிடம் கூறியதாவது:

கால்வாய் இல்லை

பல்லாவரம், கீழ்க்கட்டளை, நன்மங்கலம் உள்ளிட்ட ஏரிகளிலிருந்து வெளியேறும் உபரிநீர், நாராயணபுரம் ஏரியை வந்தடைந்த பின், சதுப்பு நிலம் நோக்கி செல்லும். ஆனால், நாராயணபுரம் ஏரியில், உபரிநீரை விரைவாக வெளியேற்றும் அளவிற்கு ஏற்ப போக்கு கால்வாய் இல்லை. கால்வாய் சிறியதாக இருப்பதால், 'மிக்ஜாம்' கனமழையில், நாராயணபுரம் ஏரி நிரம்பி வெளியேறிய உபரி நீர் பள்ளிக்கரணையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.அடுத்த மழைக்கு இப்படியான பிரச்னை வராமல் இருக்க, 42 கோடி ரூபாயில் அகலமான புதிய கால்வாய்க்கு பூஜை போடப்பட்டது. கால்வாய் கட்டுமான பணிகள் துவங்க உள்ள நிலையில், கால்வாய் செல்லும் வழித்தடத்தில், சாலை விரிவாக்கம் என்ற பெயரில், நெடுஞ்சாலைத் துறையினர், புதிதாக சாலை அமைக்கின்றனர். இது வீண் செலவு. சாலை அமைத்தாலும், அதே சாலையைப் பெயர்த்து கால்வாய் கட்ட வேண்டிய நிலை வரும் என, அந்த அதிகாரியிடம் தெரிவித்தேன்.

பொய்யான புகார்

தவிர, சாலை விரிவாக்கத்திற்காக எடுக்கப்படும் மணலை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கள்ளச்சந்தையில் பல லட்சம் ரூபாய்க்கு விற்கின்றனர். கள்ளச்சந்தையில் விற்கும் மணலை, பள்ளிக்கரணையில் உள்ள 13 பூங்காக்களில் தலா 10 லோடு கொட்டினால், அந்த பூங்காக்களில் நிறைய மரங்கள் வளர்க்கலாம் என்பதையும், அவர்களிடம் சுட்டிக்காட்டினேன். அவர்கள் செய்யும் மணல் ஊழலை தட்டிக்கேட்டதால், என்மீது பொய்யான புகார் அளித்துள்ளனர்.இவ்வாறு பாபு கூறினார்.சில தினங்களுக்கு முன், சென்னை மாநகராட்சியின் 188 வார்டுக்கு உட்பட்ட மடிப்பாக்கம் தி.மு.க., கவுன்சிலர் சமீனா, தன் வார்டுக்குட்பட்ட பகுதியில் அபார்ட்மென்ட் கட்டிவரும் மண்ணு ரமணய்யா, 74, என்பவரை மிரட்டினார். இரண்டு லட்சம் ரூபாய் கேட்டு, அடியாட்களை வைத்து தாக்கிய சம்பவம் முடிவதற்குள், பள்ளிக்கரணை கவுன்சிலர் செய்த அடாவடி, பூதாரமாக மாறி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

subramanian
மே 06, 2024 16:45

இவர் மேல் பாய வேண்டும் இவர்களுக்கு கடுங்காவல் தண்டனை அளித்து சிறையில் அடைக்க வேண்டும்


Jai
மே 06, 2024 13:41

தேர்தல் முடிந்து விட்டது இனி அடுத்து இரண்டரை வருடங்களுக்கு தேர்தல் இல்லை. அடுத்த ஒன்றரை வருடங்களுக்கு எடுக்க வேண்டியதை எடுத்துக் கொள்ள வேண்டும். கடைசி ஒரு வருடம் அடுத்த எலக்சனுக்காக கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டும். தற்போது மேல் இடத்தில் இருந்து கட்டுப்பாடுகள் இருக்காது வருமானம் பார்க்க சரியான தருணம்.


krishna
மே 06, 2024 10:40

IDHUDHAAN DRAVIDA MODEL.


கணேஷ்
மே 06, 2024 08:04

இப்படிப்பட்ட அடாவடிகள், திமுக கவுன்சிலர்களுக்கு வாடிக்கை. அடையாறில், ஒரு பெண் கவுன்சிலரின் சகோதரன் செய்யும் ரவுசு தாங்கமுடியாது.


மேலும் செய்திகள்