உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தவணை முறை வீடு விற்பனை நிறுத்தம்: குறைந்த வருவாய் பிரிவினர் அதிர்ச்சி

தவணை முறை வீடு விற்பனை நிறுத்தம்: குறைந்த வருவாய் பிரிவினர் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினருக்கு, வீடு, மனைகளை தவணை முறையில் வழங்கும் நடைமுறையை மொத்தமாக கைவிட, வீட்டு வசதி வாரியம் முடிவு செய்துள்ளது.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், வீட்டு வசதி வாரியம் சார்பில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், குறைந்த, நடுத்தர, உயர் வருவாய் என, பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு, வீடு, மனைகள் ஒதுக்கப்பட்டு வந்தன.

சுயநிதி முறை

சில ஆண்டுகளாக, வீடு, மனைகள் விற்பனையில் வாரிய அதிகாரிகளால் தொய்வு ஏற்பட்டது. அதனால், சுயநிதி முறையில் குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்துவது அதிகரித்தது. தவணை முறையில் வீடு விற்கும் முறை படிப்படியாக நிறுத்தப்பட்டது. இது, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர், குறைந்த, நடுத்தர வருவாய் பிரிவினர் வீடு வாங்குவதில் கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியது. எனவே, தவணை முறையை மீண்டும் அமல்படுத்த கோரிக்கை எழுந்தது. இதன்படி, 2021 - 22ம் நிதி ஆண்டுக்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்ட துறை அமைச்சர் முத்துசாமி, 'குறைந்த, நடுத்தர வருவாய் பிரிவினரின் பொருளாதார அழுத்தத்தை குறைக்க, மீண்டும் தவணை முறை அறிமுகம் செய்யப்படும்' என்றார். இதற்கான வழிமுறைகளை உருவாக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை செயலராக இருந்த அபூர்வா, 'முதலில் வருவோருக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில் வீடு, மனைகளை விற்பனை செய்ய உத்தரவிட்டார். அதன்பின், துறை செயலராக பொறுப்பேற்ற சமயமூர்த்தி, இதில் சில மாற்றங்கள் செய்து, புதிய அரசாணை பிறப்பித்தார். வாரியத்தின் இந்த முடிவால், தவணை முறையை துவங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, வீட்டு வசதி வாரிய உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: குறைந்த, நடுத்தர வருவாய் பிரிவினரிடம், தவணை முறையில் வீட்டுக்கான தொகையை வசூலிப்பதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இத்தகைய பிரிவினருக்கு, நகர்ப்புற வாழ்விட வாரியம் வழங்கும் வீடுகளிலும் தவணை வசூல் முறையாக நடக்கவில்லை.

தவணை தொகை

மக்களிடம் இருந்து தவணை தொகையை வசூலிப்பதில், வாரியத்துக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. இதனால், வீடுகளின் விலையை, 20 சதவீதம் உயர்த்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, குறைந்த, நடுத்தர வருவாய் பிரிவினருக்கான வீடு, மனைகளை தவணை முறைக்கு பதிலாக, முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் விற்க முடிவு செய்துள்ளோம். இதனால், துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நோக்கம் நிறைவேறும்தவணை முறையை கைவிடும் வாரியத்தின் முடிவால், 'வாங்கக்கூடிய விலையில் அனைவருக்கும் வீடு' என்ற அடிப்படை நோக்கத்தை விட்டு, வீட்டு வசதி வாரியம் விலகி செல்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வங்கிகள் வணிக ரீதியாக வழங்கும் வீட்டுக்கடன் வாயிலாக தான், வீடு வாங்க வேண்டும் என்றால், மக்கள் தனியார் கட்டுமான நிறுவனங்களை அணுகலாம். தவணை முறை திட்டத்தை மீண்டும் செயல்படுத்த, வீட்டு வசதி வாரியத்துக்கு உரிய உத்தரவுகளை அரசு பிறப்பிக்க வேண்டும். அப்போது தான், இந்த வாரியத்தை துவங்கியதன் நோக்கம் நிறைவேறும். - சமூக ஆர்வலர்கள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

gopi
ஆக 19, 2024 19:11

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் இப்போது ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் வீடு வாங்கும் விலையில் வீடு வழங்குவதில்லை. பணம் படைத்தவர்கள் வாங்கும் நிலையில் உள்ளது. அதனால்தான் ஆயிரக்கணக்கான வீடுகள் விற்பனை ஆகாமல் பாழாகி வருகின்றன. ஆகவேதான் தனியார் வீடு விற்பனை கொடிகட்டி பறக்கிறது. அரசு வீடுகளை வாங்க ஆள் இல்லை. விலையை குறைத்து நடுத்தர மக்கள் வாங்கும் விலையில் வீடுகளை வழங்கினால் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பழைய மரியாதையை பெறும். இல்லையேல் கஷ்டம்தான்.


Dharmavaan
ஆக 19, 2024 07:40

இது சமூக சேவை வியாபாரம் அல்ல தவணை கட்டவில்லை என்றால் அபாரதத்தோடு வாங்கலாம் .நிறுத்தக்கூடாது .திருட்டு திமுகவின் கேவலமான செயல்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ