தீவனத்தயாரிப்புக்கு, மக்காச்சோளத்தை இறக்குமதி செய்வதற்கு, மத்திய அரசு அனுமதியளித்த பின், முதல் முறையாக துாத்துக்குடி துறைமுகத்துக்கு, மூன்று கப்பல்களில் மக்காச்சோளம் வந்துள்ளது.இந்தியாவில் கறிக்கோழிகளின் உற்பத்தி, ஆண்டுக்கு 10 சதவீதம் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப கோழித்தீவனம் தயாரிப்பையும் அதிகப்படுத்த வேண்டியுள்ளது. அதற்கு முக்கிய மூலப்பொருளான மக்காச்சோளத்தின் தேவையும் உயர்ந்து கொண்டிருக்கிறது. கோழித்தீவனத்துக்கு மட்டுமின்றி, மாட்டுத்தீவனம், குளுக்கோஸ் மற்றும் ஸ்டார்ச் உற்பத்திக்கு, மக்காச்சோளம் பயன்படுகிறது. இவற்றுக்கு மட்டுமே, ஆண்டுக்கு 18 லிருந்து 20 லட்சம் டன் மக்காச்சோளம் தேவைப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் 34 லட்சம் டன் மக்காச்சோளத்தில் 62 சதவீதம், தீவனத்தயாரிப்புக்குப் பயன் படுத்தப்படுகிறது. மீதமுள்ளவை, பிற தேவைகளுக்கு உபயோகமாகின்றன. இந்நிலையில், வரும் 2025 லிருந்து பெட்ரோலில் 20 சத வீதம் எத்தனால் கலப்பது கட்டாயமாக்கப்படவுள்ளது. தேவை அதிகரிப்பு
எத்தனால் தயாரிப்புக்கும் மக்காச்சோளம் தேவைப்படுவதால், ஒட்டு மொத்தமாக இதன் தேவை அதிகமாகிக் கொண்டிருக்கிறது. தேவை அதிகரித்து, உற்பத்தி குறைவாகவுள்ளதால், தீவனத் தயாரிப்புக்கான மக்காச்சோளத்தை இறக்குமதி செய்து கொள்வதற்கு, மத்திய அரசிடம் தீவன உற்பத்தியாளர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.அதனை ஏற்று, தீவன உற்பத்திக்கான மக்காச்சோளத்தை மட்டும் இறக்குமதி செய்து கொள்வதற்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி, முதல் முறையாக வெளிநாட்டிலிருந்து மக்காச்சோளம் இறக்குமதியாகியுள்ளது. முதற்கட்டமாக, மியான்மரிலிருந்து இரண்டரை லட்சம் டன் மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதி பெறப்பட்டுள்ளது. 10 கப்பல்களில் வருகிறது
ஒரு கப்பலுக்கு 25 ஆயிரம் டன் வீதமாக, மொத்தம் 10 கப்பல்களில் இவை கொண்டு வரப்படவுள்ளன. இவற்றில், துாத்துக்குடி துறைமுகத்தில் இதுவரை மூன்று கப்பல்களில் மக்காச்சோளம் வந்து இறக்கப்பட்டுள்ளது. மியான்மரில் ஜூனிலிருந்து மழை துவங்கிவிடும் என்பதால், மே மாத இறுதிக்குள் மீதமுள்ள ஏழு கப்பல்களும் வந்து சேரும் என்று, கொள்முதல் நிறுவன நிர்வாகிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.வெளிநாட்டிலிருந்து மக்காச்சோளம் இறக்குமதி செய்யப்பட்டாலும், உள்நாட்டில் மக்காச்சோளம் விலை குறைய வாய்ப்பில்லை என்றும் வேளாண் நிபுணர்கள் உறுதிபடக்கூறுகின்றனர். தற்போது இறக்குமதி செய்யப்படும் மக்காச்சோளம் ஒரு டன் ரூ.23 ஆயிரத்திலிருந்து ரூ.23,500க்கு வாங்கப்படுகிறது. துறைமுகத்திலிருந்து இதைக் கொண்டு வருவதற்கான செலவைச் சேர்த்து, இது ரூ.25 ஆயிரமாகிவிடும்.உள்நாட்டிலும் இப்போது அதே விலைக்கே அதாவது ஒரு கிலோ ரூ.24.50லிருந்து ரூ.25 வரை, மக்காச்சோளம் விற்கப்படுகிறது. இன்றைய நிலையில், உள்ளூர் சந்தையிலும், உலகளாவிய சந்தையிலும் விலை ஒரே மாதிரியாக இருக்கிறது. எத்தனால் தயாரிப்புக்கான மக்காச்சோளத் தேவை அதிகமாகவுள்ளதால், உள் நாட்டில் உற்பத்தியாகும் மக்காச்சோளத்துக்கும், நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளது.தரத்தைப் பொறுத்தவரையிலும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மக்காச்சோளத்தில் ஈரப்பதம் நன்றாகவே இருப்பதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் மக்காச்சோளம் சீசன் முடிந்துவிட்டது. ஆந்திரா, தெலங்கானாவிலிருந்து தற்போது வந்து கொண்டிருக்கிறது; பீஹாரில் மக்காச்சோளம் அறுவடை துவங்கியுள்ளது; அக்டோபரில் கர்நாடகாவிலிருந்து வரத்துவங்கும்.அடுத்த ஆண்டுக்குள் தமிழகத்தில் மக்காச்சோளம் பயிரிடும் பரப்பு இரட்டிப்பானால், விவசாயிகளுக்கான லாபமும் இரட்டிப்பாகும்.-நமது சிறப்பு நிருபர்-