தமிழக பெண் போலீசார் பற்றி அவதுாறாக பேசியதாக, பிரபல யு டியூபர் சவுக்கு சங்கர், கோவை மாநகர போலீசாரால் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், திருச்சி மாவட்டம், முசிறி டி.எஸ்.பி., யாஸ்மின், பெண் போலீசார் பற்றி, சவுக்கு சங்கரின் பேட்டி, தனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும், பெண் போலீசாரை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க, திருச்சி மாவட்ட 'சைபர் கிரைம்' போலீசில் புகார் அளித்தார்.இதன்படி, போலீசார், சவுக்கு சங்கர் மீதும், அவரது பேட்டிக்கு துாண்டுதலாக இருந்த பெலிக்ஸ் ஜெரால்டு மீதும், ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட உத்தரவை, திருச்சி போலீசார், கோவை மத்திய சிறை நிர்வாகத்துக்கும், சவுக்கு சங்கரிடமும் நேற்று வழங்கினர். பெலிக்ஸ் ஜெரால்டை தேடி வருகின்றனர்.இதேபோல், திருச்சி மாநகர பெண் போலீஸ் ஒருவர், சைபர் கிரைம் போலீசில் சவுக்கு சங்கர் மீது அளித்த புகாரின்படி, மாநகர சைபர் கிரைம் போலீசாரும், அவர் மீது வழக்கு பதிவு செய்து, அதற்கான உத்தரவை நேற்று அவரிடம் வழங்கினர்.இதற்கிடையே, சவுக்கு சங்கர் கஞ்சா வழக்கில் தேனி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து, நேற்று காலை தேனி மாவட்ட போலீசார், கஞ்சா வழக்கில் மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்த, கோவை மத்திய சிறையில் இருந்து அவரை போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.மதுரை போதைப் பொருட்கள் சிறப்பு நீதிமன்ற நீதிபதி செங்கமலச்செல்வன் முன் ஆஜர்படுத்திய போது, சங்கர் வலது கையில் கட்டு போட்டிருந்தார். நீதிபதியிடம், 'இது பொய் வழக்கு. கோவை சிறையில் என்னை போலீசார் கடுமையான தாக்கினர்.இதில், எனக்கு கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். கோவை சிறையில் என் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. என்னை மதுரை சிறைக்கு மாற்ற வேண்டும்' என்றார். நீதிபதி, 'உங்கள் கோரிக்கை குறித்து மனு அளித்தால் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்' எனக்கூறி, மே 22 வரை நீதிமன்ற காவலில் சங்கரை அடைக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.
அறிக்கை தாக்கலுக்கு உத்தரவு
சிறையில் சங்கரை துன்புறுத்துவதாகவும், உரிய சிகிச்சை வழங்கவும் கோரி, உயர் நீதிமன்றத்தில் அவரது தாய் கமலா, ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். நீதி விசாரணையும் கோரியிருந்தார். இம்மனு, நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, கலைமதி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக், 'மனு விசாரணைக்கு ஏற்புடையதல்ல; அவர் நீதிமன்ற காவலில் உள்ளார். சங்கரை கோவை அழைத்து வந்தபோது தாராபுரம் அருகே விபத்து ஏற்பட்டதில், கையில் காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சட்டப்பணிகள் ஆணைக்குழு நியமித்த மூன்று வழக்கறிஞர்கள், டாக்டர் அடங்கிய குழு, கோவை சிறையில் சங்கரிடம் விசாரித்தது. 'மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரிடம், அவர்கள் அறிக்கை அளித்துள்ளனர். மதுரையில் போதைப் பொருள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், அவர் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். போலீஸ் விசாரணைக்கு எடுப்பதை தடுக்கவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது' என்றார்.நீதிபதிகள், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் அளித்த அறிக்கையை, இங்கு தாக்கல் செய்யும்படி, பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர். விசாரணையை இன்று தள்ளி வைத்தனர். இதற்கிடையே, சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தடை கோரி சவுக்கு மீடியா நிறுவன ஊழியர் விக்னேஷ் தொடர்ந்த மனுவை நீதிபதிகுமரேஷ்பாபு தள்ளுபடி செய்தார். - நமது நிருபர் குழு-