கோவை: வெற்றி விழாவுக்கு வந்த எம்.பி.,க்கள், மாநில அமைச்சர்களால் கோவை விமான நிலையம் நெரிசலுக்குள்ளானது. பயணிகள் கடும் அவஸ்தைக்கு உள்ளானார்கள்.தமிழ்நாட்டில் தி.மு.க., கூட்டணி வெற்றி விழா, கோவையில் நேற்று நடந்தது. இதில், பங்கேற்க நேற்று முன்தினம் காலை முதலே, எம்.பி.,க்கள், அமைச்சர்கள் கோவைக்கு வரத்தொடங்கினர். இரண்டு நாட்களாக உதயநிதி, துரை வைகோ, செல்வபெருந்தகை, கனிமொழி, திருமாவளவன், விஜய்வசந்த் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், கீதாஜீவன், கணேசன், தென்னரசு, பெரிய கருப்பன், சேகர் பாபு என பல முக்கிய அமைச்சர்கள் கோவை வந்தனர். முதல்வர் ஸ்டாலின் நேற்று மதியம் வந்தார்.
கோவை வந்த அமைச்சர்கள், பெரும்பாலானோர் விமானத்தில் வந்தனர். இவர்களுக்காக, விமான நிலையத்தின் முன் வரிசையாக கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. ஒவ்வொரு காருக்கும் பைலட் கார்கள், பாதுகாப்பு ஜீப்புகள், அரசு அதிகாரிகள் என விமான நிலையத்தில், வி.ஐ.பி.,க்கான கார்கள் நிறைந்தன. ஒரு மணிநேரத்துக்கு முன்னதாகவே, இவை வந்து இடத்தை அடைத்துக் கொண்டதால், விமான நிலையத்துக்குள் பிற பயணிகளின் கார்கள் அனுமதிக்கப்படவில்லை. கார் பார்க்கிங் பகுதியில், ஏற்கனவே கார்கள் நிறுத்த இடம் இல்லாமல் நிரம்பியிருந்தது. பிற பயணிகளின் கார்களை, விமான நிலையம் அருகே நிறுத்தவும் அனுமதிக்கப்படவில்லை. முதல்வர் ஸ்டாலின் வந்ததால், ஒரு கி.மீ., சுற்றுப்பகுதியில் எந்த கார்களையும் நிறுத்த, போலீசார் அனுமதிக்கவில்லை.
இதனால், விமானத்தில் வந்த பயணிகள், விமானத்தை பிடிக்க சென்ற பயணிகள் அனைவரும் பெரும் அவதிக்கு உள்ளாயினர். நெரிசல் மிகுந்ததாக விமான நிலையம் மாறியது.
விரிவாக்கம் எப்போது?
எத்தனை எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள், முதல்வர் என வந்தாலும் கோவை விமான நிலையத்தின் விரிவாக்க பிரச்னை தீர்வதாக இல்லை. நிலம் கையகப்படுத்திய பின்னரும், பார்க்கிங் வசதிக்காக இடம் தரப்படவில்லை. விமான நிலையத்தின் முன் உள்ள பார்க்கிங் வசதிகள் போதவில்லை.தினமும் 10 ஆயிரம் பயணிகள் வந்து செல்லும் விமான நிலையத்தில் நெருக்கடி அதிகமாகி வருகிறது. கோவை வெற்றி விழா கொண்டாட வந்த முதல்வரும், அமைச்சர்களும், புதிதாக தேர்வான எம்.பி.,க்களும் கோவைக்கு நல்லது செய்ய நினைத்தால், விமான நிலையத்தை விரைவில் விரிவாக்கம் செய்யட்டும். அதுவரை பயணிகளை பாடாய்படுத்த, எந்த அதிகாரமும், உரிமையும் இல்லை என்பதை, அவர்கள் உணர வேண்டும்.