பீஹாரில் தீவிர மதுவிலக்கை அமல்படுத்தியதன் வாயிலாக, எட்டு ஆண்டுகளில் குடும்ப வன்முறைகள் தொடர்பான, 21 லட்சம் குற்றங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக, பிரபல மருத்துவ ஆய்வு இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பீஹாரில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, 2016 முதல் முழு மதுவிலக்கு அமலில் உள்ளது. ஆய்வு கட்டுரை
இதன் வாயிலாக ஏற்பட்ட நன்மைகள் பற்றி பிரபல மருத்துவ ஆய்வு இதழான, 'லான்செட்' ஆய்வுக் கட்டுரை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டு உள்ளது. இந்த ஆய்வில் முக்கிய புள்ளிவிபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.அதன் விபரம்: உலக சுகாதார அமைப்பு சார்பில் உலகளவில் மது பழக்கத்தால், மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் செயல்திட்டம் வகுக்கப்பட்டது. 2016ல் நடைமுறைப்படுத்தப்பட்ட இச்செயல்திட்டத்தின் வாயிலாக, 80 நாடுகளில் மதுவிற்கு எதிரான கொள்கைகள் வகுக்கப்பட்டன.தற்போது ஆப்கானிஸ்தான், சவுதி அரேபியா, லிபியா உள்ளிட்ட, 13 நாடுகளில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் நம் நாட்டில் பீஹார், குஜராத், நாகாலாந்து உள்ளிட்ட சில மாநிலங்களில் முழு மதுவிலக்கு அமலில் உள்ளது.இதன் வாயிலாக, மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில், மது அருந்துவோரின் விகிதம் 40 சதவீதமும், குடும்ப வன்முறை சம்பவங்கள் 50 சதவீதமும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 25 சதவீதமும் குறைந்துள்ளன. உடல் பருமன்
இதில், பீஹார் மாநிலமும் விதிவிலக்கல்ல. இதன் வாயிலாக அங்கு வசிக்கும் மக்களின் உடல்நலன் மிகவும் ஆரோக்கியமாக உள்ளது; மதுவிலக்கு அமல்படுத்தப்படுவதற்கு முன், அங்கு அடிக்கடி மது அருந்துவோர் எண்ணிக்கை 9.7 சதவீதம் முதல் 15 சதவீதமாக இருந்தது.ஆனால், மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட பின், பீஹாரில் அடிக்கடி மதுகுடிப்போரின் எண்ணிக்கை 7.8 சதவீதமாக குறைந்தது. அதாவது, 24 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இப்பழக்கத்தில் இருந்து விடுபட்டு உள்ளனர். இதுதவிர, 18 லட்சம் பேர் உடல் பருமன் குறைப்பாட்டில் இருந்து விடுபட்டுள்ளனர். வன்முறை குறைவு
இதேபோல, பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகளும் வெகுவாக குறைந்துள்ளன. மனைவி மீதான தாக்குதல் உள்ளிட்ட குடும்ப வன்முறைகள் தொடர்பான 21 லட்சம் குற்றங்கள் அல்லது வழக்குகள் தவிர்க்கப்பட்டுள்ளதுடன், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்செயல்கள் 3.6 சதவீதமும் குறைந்துள்ளன.எனவே, பீஹாரில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மதுவிலக்கு சட்டம், பிற மாநிலங்களிலும் அமல்படுத்தினால், மக்கள் உடல் நலம் சார்ந்த பிரச்னைகளுக்கு மட்டுமின்றி குடும்ப வன்முறைகளுக்கும் தீர்வாக அமையும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பூச்சாண்டி காட்டுகிறது தி.மு.க., அரசு
பீஹாரில் மதுவிலக்கால் ஏற்பட்ட நன்மைகள் குறித்து, உலகப் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்கள் குழு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 2016ல், பீஹாரில் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட பின், குடும்ப வன்முறைகள் தொடர்பான 21 லட்சம் வழக்குகள் தவிர்ப்பு, 18 லட்சம் இளைஞர்கள் உடல் பருமன் குறைபாட்டுக்கு ஆளாவது தவிர்ப்பு, பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறைவு, ஆண்களின் மது குடிக்கும் அளவு பெருமளவில் குறைவு உள்ளிட்ட ஏராளமான நன்மைகள் சாத்தியமாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.மதுவிலக்கால், 8 ஆண்டுகளில் 8 லட்சம் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதும், பீஹாரின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு கணிசமாக உயர்ந்திருப்பதும் நினைத்துப் பார்க்க முடியாத சாதனை.தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தும் போதெல்லாம், 'மதுவிலக்கை அமல்படுத்தினால் கள்ளச்சாராயம் பெருகும், அரசின் வருவாய் குறையும்' என்றெல்லாம், தமிழக ஆட்சியாளர்கள் பூச்சாண்டி காட்டுகின்றனர். அரசுக்கு கிடைக்கும் வருமானம், தனிப்பட்ட முறையில் தங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் ஆகியவற்றை மட்டும் கருத்தில் வைத்து, மது வணிகத்தை ஊக்குவித்து வருகின்றனர். இது சரியான பாதை அல்ல. மது வணிகத்தை விட, மதுவிலக்கு தான் மக்களுக்கும் மாநிலத்திற்கும் நன்மை அளிக்கும் என்பதை, பீஹாரிடமிருந்து, தமிழக அரசு கற்றுக்கொள்ள வேண்டும். - ராமதாஸ், நிறுவனர், பா.ம.க.,- நமது நிருபர் -