உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இளவரசி குடும்பம் மீது சசிகலா கோபம்: போயஸ் கார்டனில் குடியேறினார் திவாகரன்

இளவரசி குடும்பம் மீது சசிகலா கோபம்: போயஸ் கார்டனில் குடியேறினார் திவாகரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னையில் போயஸ் தோட்டத்தில் உள்ள சசிகலா வீட்டில், அவரது தம்பி திவாகரன் குடும்பத்துடன் குடியேறியுள்ளார். குடும்பத்திற்கு சொந்தமான மதுபான ஆலை மற்றும் 'டிவி' நிறுவனங்களை, தன் கட்டுப்பாட்டில் அவர் கொண்டு வந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக, சசிகலா ஆதரவு வட்டாரங்கள் கூறியதாவது:

மதுபான ஆலை, காற்றாலைகள், சினிமா தியேட்டர் மால்கள், தொலைக்காட்சி, பத்திரிகை என, பல்வேறு தொழில் நிறுவனங்கள், சசிகலா குடும்பத்தினர் வசம் உள்ளன.

ஒப்படைப்பு

அவற்றில் ஒரு சில நிறுவனங்கள், முழுமையாக நிர்வாகம் செய்யும் நோக்குடன் சசிகலாவின் அண்ணி இளவரசி மகன் உள்ளிட்டோரிடம் ஒப்படைக்கப்பட்டன. சகிகலாவின் கணவரான மறைந்த நடராஜனின் தம்பிகள் குடும்பத்தினர் வசமும், சில தொழில்கள் ஒப்படைக்கப்பட்டன.வருமான வரி பாக்கி பல கோடி ரூபாய் கட்ட வேண்டிய வழக்கில், சசிகலா கட்ட வேண்டிய பணத்தை, சினிமா தியேட்டர், மால் உள்ளிட்ட சில சொத்துக்களை விற்று அடைத்துள்ளதாக சமீபத்தில் சசிகலா தரப்பில் இருந்தே தகவல் பரவியுள்ளது. சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதா வசித்த வேதா இல்லத்தின் எதிரில் சசிகலா, பல கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக பிரமாண்ட பங்களா கட்டியுள்ளார். அந்த வீட்டில் இளவரசி குடும்பத்தினரை தங்க வைக்க சசிகலா ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், திடுமென அந்த முடிவை சசிகலா மாற்றிக் கொண்டு விட்டார். தற்போது அந்த வீட்டில் திவாகரன், அவரது மனைவி, மகன் ஜெய் ஆனந்த் குடியேறியுள்ளனர். சசிகலாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனி அமைப்பு நடத்தி வந்த திவாகரன் திடீரென சமரசமாகி, சசிகலாவுடன் மீண்டும் வந்து சேர்ந்துள்ளார்.

அ.தி.மு.க., ஒன்றுபட்ட பின், தன் மகன் ஜெய் ஆனந்த், முக்கிய பதவிக்கு வர வேண்டும் என, திவாகரன் விரும்புகிறார். இதற்காகவே, அவர் மன்னார்குடியில் இருந்து சென்னைக்கு வந்து நிரந்தரமாக தங்கி விட்டார்.

வரவு - செலவு

சசிகலா தொடர்புடைய சொத்துக்களாக அறியப்படும் தமிழகம் முழுதும் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளும், நிலங்களும், தொழில் நிறுவனங்களும் மன்னார்குடி குடும்பத்தினர் சிலரிடமும், வேண்டப்பட்டவர்கள் சிலரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.சில தொழில் நிறுவனங்களில் லாபத்தை காட்டாமல், சொத்துக்களை திரும்ப ஒப்படைக்காமல் அவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த சொத்துக்களை மீட்கும் பொறுப்பை திவாகரன் ஏற்றுக் கொண்டுள்ளார்.கூடவே, மதுபான ஆலை, 'டிவி' நிறுவன வரவு - செலவு கணக்குகளை கவனிக்கும் பொறுப்பிலும் களம் இறங்கி இருக்கிறார். இதனால், திவாகரன் மீது இளவரசி குடும்பத்தினர் கோபத்தில் உள்ளனர். இதற்கிடையில், சசிகலாவுக்கு அரசியல் ஆலோசனைகளையும் திவாகரன் வழங்கி வருகிறார். அண்ணாதுரை பிறந்த நாள் விழாவை ஒட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில், சசிகலா மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்.பின், சசிகலாவை தீவிர அரசியல் செயல்பாடுகளில் மீண்டும் களம் இறக்கி, அ.தி.மு.க.,வை ஒன்றிணைக்கவும் பாடுபட திட்டமிட்டுள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்களில் கூறப்படுகிறது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

subramanian
செப் 13, 2024 14:29

இன்னும் பல காமெடி இருக்கும்


s sambath kumar
செப் 13, 2024 12:25

இந்த குடும்பம் கட்சிக்குள் நுழைந்தால் ஆமை வீட்டிற்குள் நுழைந்ததுக்கு சமம். கட்சி உருப்படாது. தொண்ணூற்றி ஆறு நினைவுக்கு வருகிறது. கொஞ்ச ஆட்டமா இந்தக் குடும்பம் ஆடியது. பழனிச்சாமி எவ்வளவோ மேல்.


புதிய வீடியோ