உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஏழு தி.மு.க., மேயர்களுக்கு ஏழரை ஆரம்பம்

ஏழு தி.மு.க., மேயர்களுக்கு ஏழரை ஆரம்பம்

தி.மு.க., மேயர்கள் ஏழு பேரின் செயல்பாடு குறித்த புகார்கள் அடிப்படையில், அவர்கள் தங்களை திருத்திக் கொள்ளவில்லை என்றால், மேயர் மாற்றத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என, தி.மு.க., தலைமை எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.லோக்சபா தேர்தலில், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, தமிழகம் முழுதும் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அவரை சந்தித்த பொதுமக்கள் பல்வேறு மனுக்களை வழங்கினர். அதில், சில மாநகராட்சிகளில் மக்கள் நலப்பணிகளை மேயர்கள் நிறைவேற்றவில்லை என்ற குறைகளை தெரிவித்து உள்ளனர்.மேலும் லோக்சபா தேர்தல் பணிகளில், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றாமல், கட்சி நிர்வாகிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படாமல், ஏழு மேயர்கள் இருந்துள்ளனர்.

எச்சரிக்கை

அதனால், இந்த ஆண்டின் இறுதியில் நடக்கவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்குள், ஏழு மேயர்களும், தங்களின் செயல்பாடுகளை திருத்தி கொள்ளவில்லை என்றால், மேயர் மாற்றத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என, தி.மு.க., தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதுகுறித்து தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:தமிழகத்தில் மொத்தமுள்ள, 21 மேயர்களில், ஏழு மேயர்களுக்கு மட்டும், 'ஏழரை' ஆரம்பமாகி விட்டது. லோக்சபா தேர்தல் முடிவு தெரிந்த பின், மாநகராட்சி வார்டுகளில், தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களின் ஓட்டு சதவீத கணக்கு குறையும் பட்சத்தில், மேயர் மாற்றமும் உறுதியாகி விட்டது.தேர்தலுக்கு முன், மேயர்களுக்கும், கவுன்சிலர்களுக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்ததால், அவர்களுக்குள் புரிந்துணர்வு இல்லாமல், கட்சியை வளர்க்காமல் கோஷ்டியை மட்டும் வளர்த்துள்ளனர். தென்மண்டலத்தில் திருநெல்வேலி மாநகராட்சியில் மேயர் சரவணனை மாற்றுவதற்கு பெரும்பான்மையான கவுன்சிலர்கள் போர்க்கொடி துாக்கி, தீர்மானமும் நிறைவேற்றி விட்டனர்.கொங்கு மண்டலத்தில், கோவை மாநகராட்சியில் மேயர் கல்பனா, தி.மு.க., கவுன்சிலர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளை மதிக்கவில்லை. வட்ட நிர்வாகிகளுடன் இணைந்து செயல்படவில்லை.

பறிக்கப்படும்

சேலம் மாநகராட்சியில், மக்கள் பணிகளை நிறைவேற்றவில்லை என்ற புகாரின் அடிப்படையில், மேயர் ராமச்சந்திரன் தன் பதவியை தக்க வைக்க, கவுன்சிலர்களை இன்ப சுற்றுலாவுக்கு அழைத்து சென்று வளைத்து வைத்துள்ளார்.தஞ்சாவூர் மேயர் ராமநாதன், மக்கள் பிரச்னையை நிறைவேற்றவில்லை என, ஆளுங்கட்சி கவுன்சிலர் தெரிவித்த புகாரை ஏற்க மறுத்து, மன்றத்தை விட்டு வெளிநடப்பு செய்யும் அளவிற்கு அவருடைய செயல்பாடு இருந்து வருகிறது.மதுரை மேயர் இந்திராணியின் செயல்பாட்டினால், நான்கு கமிஷனர்கள் மாறியுள்ளனர். மதுரை மாநகராட்சி தி.மு.க., கவுன்சிலர்களுடன் உட்கட்சி மோதலும், மாநகராட்சி நிர்வாகத்தில் குளறுபடியும் நீடிக்கிறது.வேலுார் மாநகராட்சி பணிகள் சரி வர நிறைவேற்றப்படவில்லை. தெருவிளக்குகள், குடிநீர், சாலை வசதிகளை நிறைவேற்றி கொடுக்கும் நிர்வாக திறமை இல்லை என்ற குற்றச்சாட்டு மேலோங்கி நிற்கிறது.பல்வேறு குற்றச்சாட்டுக்களில் சிக்கியுள்ள மேயர்கள், தங்களை திருத்திக்கொள்ள வேண்டும். அப்படியே அவர்களின் செயல்பாடு நீடித்தால், மேயர் பதவி பறிக்கப்படும் என, தி.மு.க., தலைமை எச்சரித்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை