திருப்பூர்: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், அத்திக்கடவு - அவிநாசி நீர்செறிவூட்டும் திட்டம் சார்ந்த சட்டமன்ற தொகுதிகளில், அ.தி.மு.க.,வின் ஓட்டு சரிந்திருப்பது, அக்கட்சியினரை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது; அதே நேரம், பா.ஜ.,வின் ஓட்டு கணிசமாக உயர்ந்திருக்கிறது.திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட மக்களின், 60 ஆண்டு கால கோரிக்கை தான் அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம். இதன் வாயிலாக, 24 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம், 50 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர்' என கணக்கிடப்பட்டுள்ளது. திட்டப்பணி நிறைவு பெற்று, வெள்ளோட்டமும் பார்க்கப்பட்டு விட்டது.அ.தி.மு.க.,வின் கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலத்தில், 'அத்திக்கடவு திட்டம், நிரந்தர ஓட்டு வங்கியை ஏற்படுத்திக் கொடுக்கும்' என அ.தி.மு.க., தலைமை 'கணக்கு' போட்டது. அதன் அடிப்படையில் தான், முதல்வராக பழனிசாமி பதவி வகித்த போது, இத்திட்டத்திற்கென, 1,652 கோடி ரூபாயை முழுக்க முழுக்க மாநில அரசு நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்தார். நேரடி பயன்!
மேட்டுப்பாளையம், அவிநாசி, சூலுார், கவுண்டம்பாளையம், பெருந்துறை, கோபி, திருப்பூர் வடக்கு என, ஏழு சட்டசபை தொகுதிகள், இத்திட்டத்தின் கீழ் நேரடி பயன் பெறுகின்றன. கடந்த, 2021 சட்டபை தேர்தலில், இந்த ஏழு தொகுதிகளிலும் அ.தி.மு.க., வேட்பாளர்களே வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.,க்களாக உள்ளனர். இருப்பினும், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், இந்த தொகுதிகளில் அ.தி.மு.க.,வுக்கான ஓட்டு கணிசமாக குறைந்திருக்கிறது; ஆனால், பா.ஜ.,வுக்கான ஓட்டு அதிகரித்திருக்கிறது.* அவிநாசி சட்டமன்ற தொகுதியில், கடந்த, 2019 லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுக்கு, 94,594 ஓட்டு; அ.தி.மு.க.,வுக்கு, 76,824 ஓட்டு கிடைத்தது. இம்முறை (2024) தேர்தலில், தி.மு.க.,வுக்கு, 85,129; அ.தி.மு.க.,வுக்கு, 54,543 ஓட்டு கிடைத்தது; பா.ஜ., 48,206 ஓட்டுகளை பெற்றது.* மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில், கடந்த, 2019 லோக்சபா தேர்தலில், தி.மு.க., - 1.07 லட்சம்; அ.தி.மு.க., - 76,509 ஓட்டு கிடைத்தது. இம்முறை, (2024) தி.மு.க., - 95,737; அ.தி.மு.க., - 54,022 ஓட்டுகளை பெற்றன. பா.ஜ., வுக்கு, 52,324 ஓட்டு கிடைத்துள்ளது.* பெருந்துறை சட்டமன்ற தொகுதியில், 2019 தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட இ.கம்யூ.,வுக்கு, 76,788 ஓட்டு; அ.தி.மு.க.,வுக்கு, 72,136 ஓட்டு கிடைத்தது. இம்முறை தேர்தலில் இ.கம்யூ.,வுக்கு, 75,437; அ.தி.மு.க.,வுக்கு, 61,276 ஓட்டு கிடைத்தது. பா.ஜ.,வுக்கு, 24,464 ஓட்டு கிடைத்துள்ளது.* திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த, 2019 தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இ.கம்யூ.,வுக்கு, 78,514 ஓட்டு; அ.தி.மு.க.,வுக்கு, 72,136 ஓட்டு கிடைத்தது. இம்முறை (2024) தேர்தலில், இ.கம்யூ.,வுக்கு, 86,471; அ.தி.மு.க.,வுக்கு, 62,908 ஓட்டு கிடைத்துள்ளது. இந்த தொகுதியில், பா.ஜ., 45,824 ஓட்டுகளை பெற்றது.* கோபி சட்டமன்ற தொகுதியில், கடந்த, 2019 தேர்தலில், இ.கம்யூ.,வுக்கு, 88,789; அ.தி.மு.க.,வுக்கு, 78,830 ஓட்டு கிடைத்தது. இம்முறை தேர்தலில், இ.கம்யூ.,வுக்கு 86,471; அ.தி.மு.க.,வுக்கு, 62,908; பா.ஜ.,வுக்கு 27,388 ஓட்டு கிடைத்துள்ளது.* சூலுார் சட்டமன்ற தொகுதியில், கடந்த, 2019 லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் மா.கம்யூ., 94,603 ஓட்டு; அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., 74,883 ஓட்டு பெற்றன. இம்முறை தேர்தலில், தி.மு.க., 96,019; அ.தி.மு.க., 52,962 ஓட்டுகளை பெற்றன; பா.ஜ., 76,333 ஓட்டுகளை பெற்றுள்ளது.* கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில், கடந்த, 2019 தேர்தலில், மா.கம்யூ., 1.25 லட்சம்; பா.ஜ., 85,961 ஓட்டுகளை பெற்றன. இம்முறை தேர்தலில், தி.மு.க., 1.29 லட்சம்; அ.தி.மு.க., 52,051 ஓட்டுகளை பெற்றன. அதே நேரம், பா.ஜ.,வுக்கு, 1.05 லட்சம் ஓட்டு கிடைத்திருக்கிறது.
ஓட்டுகளை அள்ளிய பா.ஜ.,
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், இந்த ஏழு சட்டசபை தொகுதிகளிலும், மொத்தம் பதிவான ஓட்டுகள் அடிப்படையில், தி.மு.க., 42.14 சதவீதம்; அ.தி.மு.க. 25.47 சதவீத ஓட்டுகளை பெற்றது. பா.ஜ., 24.04 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது. கடந்த 2019 தேர்தலில், தி.மு.க., 45.74 சதவீதம்; அ.தி.மு.க., 36 சதவீத ஓட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.தேர்தல் முடிவுப்படி, அத்திக்கடவு திட்டம் தொடர்புடைய சட்டசபை தொகுதிகளில், அ.தி.மு.க.,வின் ஓட்டு கணிசமாக குறைந்திருக்கிறது. அ.தி.மு.க.,வின் ஓட்டுகளை, பா.ஜ., அறுவடை செய்துவிட்டது. அத்திக்கடவு - அவிநாசி திட்ட ஆதரவாளர்களும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு விட்டனரா என்ற கேள்வியையும், அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கின்றனர்.