கோவை மாநகராட்சியை மீண்டும் விரிவாக்கம் செய்வது தொடர்பாக, மாவட்ட நிர்வாகத்திடம் தமிழக அரசு கருத்துரு கேட்டுள்ளது; இதற்காக உள்ளாட்சி அமைப்புகளிடம் கருத்துக் கேட்கப்படவுள்ளது.இந்தியாவில் நகரமயமாக்கல் அதிகமாக நடக்கும் மாநிலத்தில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அதிலும் சென்னை, கோவை, மதுரை போன்ற பெரிய நகரங்கள் அமைந்துள்ள மாவட்டங்களில், நகரமயமாக்கல் இன்னும் வேகமாக நடக்கிறது. பெருநகரங்களை ஒட்டியுள்ள மற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட பகுதிகளும், நகரத்துடன் இணையும் அளவுக்கு, குடியிருப்புகள் பெருகி வருகின்றன.நகர வளர்ச்சியின் காரணமாக, அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்புத் திட்டங்களை, பிற பகுதிகளுடன் ஒருங்கிணைத்து நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால்தான் விரிவாக்கம்
உதாரணமாக, புறவழிச்சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்புகள், மெட்ரோ ரயில் போன்ற போக்குவரத்துத் திட்டங்களை நிறைவேற்ற, மாநகரங்களின் மக்கள் தொகை, பரப்பளவு போன்றவற்றின் அடிப்படையில், நிதி ஒதுக்கப்படுகிறது.இதனால்தான், குறிப்பிட்ட கால இடைவெளியில் நகரங்கள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன. நுாறாண்டுகளுக்கும் மேலாக நகராட்சியாக இருந்த கோவை, 1981ல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 2011ல், மூன்று நகராட்சிகள், ஏழு பேரூராட்சிகள் மற்றும் ஒரு கிராம ஊராட்சி ஆகியவை இணைக்கப்பட்டு, 152 சதுர கி.மீ., பரப்பிலிருந்த மாநகராட்சி, 254 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு விரிந்தது.மண்டலங்களின் எண்ணிக்கை நான்கிலிருந்து ஐந்தாகவும், வார்டுகளின் எண்ணிக்கை 72 லிருந்து 100 ஆகவும் உயர்ந்தது; விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு, பாதாள சாக்கடை, குடிநீர்த் திட்டங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளே முழுமையாகக் கிடைக்கவில்லை. மத்திய அரசின் திட்டங்களான ஸ்மார்ட் சிட்டி, அம்ருட், ஸ்வச் பாரத் போன்ற திட்டங்கள், இணைப்புப் பகுதிகளில் செய்யப்படவில்லை. மாநகராட்சி விரிவாக்கம்
இந்நிலையில், கோவை மாநகராட்சியை விரிவாக்கம் செய்ய, மாவட்ட நிர்வாகத்திடம் தமிழக அரசால் கருத்துரு கோரப்பட்டுள்ளது. இதனால், கோவை மாநகராட்சிப் பகுதிகளை ஒட்டியுள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகள் ஆகிய உள்ளாட்சி அமைப்புகளின் கருத்துகளை கேட்டு, தீர்மானங்களை வாங்கி, அரசுக்குக் கருத்துரு அனுப்பும் பணியில், மாவட்ட நிர்வாகம் இறங்கியுள்ளது.ஏற்கனவே, மதுக்கரை நகராட்சி, வெள்ளலுார், ஒத்தக்கால் மண்டபம், இருகூர் உள்ளிட்ட பல்வேறு பேரூராட்சிகள் மற்றும் சில கிராம ஊராட்சிகள், கோவை மாநகருடன் இரண்டறக் கலந்து வளர்ந்து விட்டன. இவற்றில் ஒரு சில பகுதிகளைத் தவிர, மற்ற பகுதிகள் அனைத்தும் கோவை நகருடன் இணைந்து விட்ட நிலையில், அங்குள்ள மக்களுக்கு பல விதமான அடிப்படை வசதிகள் முழுமையாகக் கிடைப்பதில்லை.இந்த உள்ளாட்சிகளை கோவையுடன் இணைத்தால், பெருநகரங்களுக்கான பெரிய திட்டங்களில் இப்பகுதி மக்களும் பயன்பெறும் வாய்ப்புண்டு. இந்த முறையாவது அரசியல் தலையீடு, வர்த்தக நோக்கம், பாரபட்சமின்றி, மக்களின் கருத்துப்படி விரிவாக்கம் நடந்தால் நல்லது!
'அவகாசம் தேவைப்படுகிறது'
கோவை கலெக்டர் கிராந்திகுமார் கூறுகையில், ''அரசு கருத்துரு கேட்டுள்ளது; அதற்கு நிறைய பணிகள் செய்ய வேண்டியுள்ளதால், கால அவகாசம் அதிகம் தேவைப்படும்; நகரை ஒட்டியுள்ள உள்ளாட்சி அமைப்புகளில் கருத்துக் கேட்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றி வாங்கிய பின்பே, ஒருமித்த கருத்துருவை உருவாக்க முடியும். இதற்கு அரசு எந்த காலக்கெடுவும் விதிக்கவில்லை. விரிவாக்கத்தை அரசு இறுதி செய்தபின்பே, வார்டுகளின் எண்ணிக்கையை உயர்த்துவது பற்றி, முடிவு செய்யப்படும்,'' என்றார்.-நமது சிறப்பு நிருபர்-