வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கோவையின் குடிநீர் தீர்வு குடிநீரில் மீட்டரை இணைத்து மின்சார வாரிய போல் கணக்கீடு செய்தால் போதும் மாநகராட்சிக்கு பண தேவை நிறைவு செய்யலாம்
கோவை மாநகராட்சிக்கு அணைகளில் இருந்து, பல கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்படும் நிலையில், குறிப்பிட்ட சில இணைப்புகளுக்கு தாராளமயமாகவும், பல குடியிருப்புப் பகுதிகளுக்கு மாதமிரு முறையும் குடிநீர் வினியோகிக்கும் பாரபட்சம் தொடர்கிறது.கோவை மாநகராட்சியிலுள்ள, 100 வார்டுகளில், 3 லட்சத்து 7274 குடிநீர் இணைப்புகள் உள்ளன. இவற்றைத் தவிர்த்து, 264 அரசு கட்டடங்களுக்கும் மாநகராட்சியால் குடிநீர் இணைப்பு தரப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சிக்கான குடிநீர், பில்லுார் மற்றும் சிறுவாணி அணைகளிலிருந்து பெருமளவில் எடுக்கப்படுகிறது.மாநகராட்சியின், 68 வார்டுகளுக்கு, பில்லுார் அணையிலிருந்து தினமும் 40 கோடி லிட்டர் தண்ணீரும், 32 வார்டுகளுக்கு சிறுவாணி அணையிலிருந்து 10 கோடி லிட்டர் தண்ணீரும் எடுக்கப்படுகிறது. ஆழியாறு அணையிலிருந்து தினமும், 70 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது. சிறுவாணி தண்ணீர், ஏழு பேரூராட்சிகள், 10 ஊராட்சிகள் உள்ளிட்ட 28 கிராமங்களுக்கும் குடிநீராக பகிர்ந்தளிக்கப்படுகிறது.பில்லுார் அணையிலிருந்து மூன்று குடிநீர்த் திட்டங்களில் தண்ணீர் எடுக்கப்படுவதில், மூன்றாவது திட்டத்தில் வரும் தண்ணீர் மட்டுமே, மாநகராட்சிக்கென முழுமையாக பயன்படுத்தப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி, பில்லுார் அணையில் 100 அடிக்கு 80 அடி அளவுக்கு நீர் மட்டம் உள்ளது; தினமும் 30 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது.மொத்தம் 50 அடி உயரமுள்ள சிறுவாணி அணையில், 9.75 அடிக்கு மட்டுமே தண்ணீர் நிற்கிறது. அதிலிருந்து மூன்று கோடி லிட்டர் மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது. ஒட்டு மொத்தமாக, வழக்கமாகக் கிடைக்கும் தண்ணீரில், 30 சதவீதம் வரை தண்ணீர் குறைவாகவுள்ளது.மாதம் இரு முறை
குடிநீர் வினியோகத்தைப் பொறுத்தவரை, நகருக்குள்ளேயே கடுமையான பாரபட்சம் காட்டப்படுகிறது.அதாவது பழைய மாநகராட்சிப் பகுதிகளுக்குள் வாரம் இரு முறையும், இணைப்புப் பகுதிகளுக்கு மாதம் இரு முறையும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதனால் அணையிலிருந்து வரும் பல கோடி லிட்டர் தண்ணீர் எங்கே போகிறது என்ற கேள்வி எழத்துவங்கியுள்ளது.நகரின் பல பகுதிகளில் குடிநீர் கிடைக்காமல் மக்கள், கேன் தண்ணீரை வாங்கிக் குடிக்கும் நிலையில், வணிக, கல்வி நிறுவனங்கள், கல்யாண மண்டபங்கள், ஓட்டல்களுக்கு எப்போதும் போல, தாராளமயமாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.அதேபோல, சில குடியிருப்புகளுக்குள்ளும் கழிப்பிடம் உட்பட அன்றாடத்தேவைக்கும் குடிநீரே பயன்படுத்தப்படுகிறது.விதிமீறல்கள்
நஞ்சுண்டாபுரம் ரோட்டிலுள்ள ஒரு 'கேட்டடு கம்யூனிட்டி' குடியிருப்பில், 30 தெருக்களுக்கு வினியோகம் செய்யப்பட வேண்டிய குடிநீர், 300 வீடுகளுக்கு 'பல்க் கனெக் ஷன்' என்ற பெயரில் வாரியிறைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேபோல, ரயில்வே ஸ்டேஷன், காந்திபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள ஓட்டல்களிலும் கழிப்பிடத்திலேயே நல்ல தண்ணீர் தான் உபயோகிக்கப்படுவது தெரிகிறது.வழக்கமாகக் கொடுக்க வேண்டிய குழாயின் அளவை விட, பெரிய சைஸ் குழாய்களில் இணைப்புக் கொடுப்பது, ஒன்றுக்கு இரண்டாக இணைப்பு தருவது என, ஏராளமான விதிமீறல்கள் நடந்துள்ளன.இவற்றுக்கு கடிவாளம் போடாவிட்டால், கோடிகளைக் கொட்டி, இன்னும் எத்தனை குடிநீர்த் திட்டங்களை அரசு நிறைவேற்றினாலும், கோவையில் உள்ள ஏழை மக்கள் குடத்துடன் குடிநீருக்காக அலையும் அவலம் என்றுமே தீராது!
கடந்த 20 ஆண்டுகளில், கோவை மாநகராட்சியில் குடிநீர் வினியோகத்தைக் கவனிக்கும் மாநகராட்சி இன்ஜினியர்கள் பலரும், பல்வேறு விதிமீறல்களைச் செய்து, கோடிகளில் சம்பாதித்துள்ளனர்.சூயஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்தபின்னும், இத்தகைய சட்டவிரோத இணைப்புகள், விதிமீறல்கள் களையப்படவில்லை. அது மட்டுமின்றி, சில இடங்களில் தரப்பட்டுள்ள திருட்டு இணைப்பால் குடிநீர் வியாபாரமும் கனஜோராக நடக்கிறது. இதை ஆய்வு செய்து, இத்தகைய இணைப்புகளைத் துண்டித்து, குடிநீர் வினியோகத்தை சீராக்குவது, அவசிய அவசரம்.-நமது நிருபர்-
கோவையின் குடிநீர் தீர்வு குடிநீரில் மீட்டரை இணைத்து மின்சார வாரிய போல் கணக்கீடு செய்தால் போதும் மாநகராட்சிக்கு பண தேவை நிறைவு செய்யலாம்