கோவையில் நடந்த செங்கோட்டையன் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலர்கள் பலரும், 'கட்சி ஒருங்கிணையா விட்டால் கட்சி காணாமல் போய் விடும்' என்று அவரிடம், புலம்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., படுதோல்வியைச் சந்தித்துள்ளது. மொத்தம் 11 தொகுதிகளில் மூன்றாமிடம் பிடித்துள்ளது. ஏழு தொகுதிகளில் டிபாசிட் இழந்திருப்பதுடன், கன்னியாகுமரி தொகுதியில் நான்காமிடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. விளவங்கோடு சட்டசபை தொகுதியிலும், அதே பரிதாப நிலைதான்.இரண்டு கோடி தொண்டர்களைக் கொண்ட பேரியக்கம் என்று, அ.தி.மு.க., தலைவர்கள் தொடர்ந்து கூறி வந்தாலும், இந்தத் தேர்தலில் ஒரு கோடி ஓட்டுக்கள் மட்டுமே கிடைத்துள்ளன. போட்டியிட்ட 34 தொகுதிகளில், 20.46 சதவீதம் ஓட்டுக்களை அக்கட்சி வேட்பாளர்கள் பெற்றுள்ளனர். இரு ஆண்டுகளில் சட்டசபைத் தேர்தல் வரவுள்ள நிலையில், இந்த சறுக்கல் கட்சிக்குள் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.லோக்சபா தேர்தலில்கிடைத்த தோல்வியை அடுத்து, மீண்டும் பா.ஜ., வுடன் மீண்டும் கூட்டணி அமைக்க கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த இரண்டு 'மாஜி'க்கள் தீவிர முயற்சி எடுத்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், பழனிசாமிக்கு அதில் உடன்பாடில்லை. பா.ஜ.,வுடன் இனி கூட்டணி கிடையாது என்று தெள்ளத் தெளிவாக அறிவித்து விட்டார். இதற்கிடையில், பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.,வை ஒன்று சேர்க்க வேண்டும் என்ற கோஷமும் அ.தி.மு.க., தொண்டர்களிடம் எழுந்துள்ளது. தலைவர்கள் சிலரும், இந்த கோஷத்தை வலியுறுத்தத் துவங்கி உள்ளனர். பழனிசாமி அதற்கும் மறுத்து வருவதாக கட்சி வட்டாரங்களில் கூறுகின்றனர். இதையடுத்து, கட்சின் மூத்த தலைவரான செங்கோட்டையன் வாயிலாக, இந்த விஷயத்தில் பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்க கட்சியின் மூத்த தலைவர்கள் முடிவெடுத்துள்ளனர். இதற்கேற்ப, செங்கோட்டையனின் பேரன் திருமணம், கோவையில் கடந்த வாரத்தில் நடந்தது. அதில் அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், பல்வேறு மாவட்டங்களின் செயலர்கள் என, கட்சியின் சீனியர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். அப்போது செங்கோட்டையனைச் சந்தித்து பேசிய சீனியர்கள் பலரும்,'பா.ஜ.,வுடன் கூட்டணி வைப்பதா, வேண்டாமா என்பதை தேர்தலின் போது பார்த்துக் கொள்ளலாம். கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும். இல்லையென்றால், கட்சி காணாமல் போய்விடும் என்று கூறியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக, விரைவில் பழனிசாமியை சந்தித்து செங்கோட்டையன் பேசக் கூடும் என கட்சி வட்டாரங்கள் கூறின. - நமது சிறப்பு நிருபர்-