வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Please bring pension scheme for Public
என்.பி.எஸ்., எனப்படும் புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு பா.ஜ., அல்லாத மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், யு.பி.எஸ்., எனப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அறிமுகம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் வாயிலாக, 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலன் பெறுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய அமைச்சரவை குழு கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளை ஏற்று, என்.பி.எஸ்., எனப்படும் புதிய ஓய்வூதிய திட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. தற்போது கேபினட் செயலராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் நிதிச் செயலர் டி.வி. சோமநாதன் தலைமையிலான குழு, 100 ஆய்வுக் கூட்டங்களை நடத்தியது. ரிசர்வ் வங்கி, உலக வங்கி உட்பட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டன.இதைத் தொடர்ந்து, யு.பி.எஸ்., திட்டத்தை அறிமுகம் செய்ய பரிந்துரை செய்துள்ளது. இதை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் வாயிலாக, 23 லட்சம் மத்திய அரசு பணியாளர்கள் பயன் பெறுவர்.மேலும் இந்த திட்டத்தை மாநில அரசுகளும் செயல்படுத்திக் கொள்ளலாம். அந்த வகையில், 90 லட்சம் பேர் பலன் பெறுவர். இந்த புதிய திட்டத்தை செயல்படுத்துவதன் வாயிலாக, மத்திய அரசுக்கு அரியர்ஸ் எனப்படும் நிலுவைத் தொகையாக மட்டும், 800 கோடி ரூபாய் செலவாகும். திட்டத்தை செயல்படுத்துவதன் வாயிலாக, முதல் ஆண்டில் மட்டும், 6,250 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.இந்த திட்டம், 2025 ஏப்., 1 முதல் அறிமுகம் செய்யப்படும். மத்திய அரசு ஊழியர்கள், என்.பி.எஸ்., அல்லது யு.பி.எஸ்., திட்டத்தில் எதை வேண்டுமானாலும் தங்களுடைய சுய விருப்பதில் தேர்வு செய்து கொள்ளலாம்.கடந்த, 2004 முதல் அமலில் இருந்து வரும், என்.பி.எஸ்., திட்டத்தின் கீழ் இருந்து, ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களும் புதிய திட்டத்துக்கு மாறிக் கொள்ளலாம். அதற்கேற்ப ஏற்கனவே கொடுக்கப்பட்ட தொகை ஈடு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.ஹரியானா மற்றும் ஜம்மு - காஷ்மீர் சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர, மஹாராஷ்டிராவுக்கும் இந்தாண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில், புதிய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக, பா.ஜ., ஆளாத பல மாநில அரசுகள், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இதைத் தொடர்ந்து, புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அறிமுகம் செய்ய தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ், ஐந்து வகை பலன்கள் கிடைக்கும்.1. உறுதியான ஓய்வூதியம்: பணி ஓய்வுக்கு முன், கடைசி 12 மாதங்களில் பெற்ற சம்பளத்தில், 50 சதவீதம் ஓய்வூதியம். இது, 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு கிடைக்கும். அதற்கு குறைவாக பணியாற்றியவர்களுக்கு அதற்கேற்ப மாறும். குறைந்தபட்சம், 10 ஆண்டுகள் பணி செய்திருக்க வேண்டும்.2. உறுதியான குடும்ப ஓய்வூதியம்: ஓய்வூதியதாரரின் மறைவுக்குப் பின், அவர் பெற்ற ஓய்வூதியத்தில், 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக, அவருடைய குடும்பத்துக்கு கிடைக்கும்.3. உறுதியான குறைந்தபட்ச ஓய்வூதியம்: குறைந்தபட்சம், 10 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு, மாதத்துக்கு, குறைந்தபட்சம் 10,000 ரூபாய் உறுதியான ஓய்வூதியமாக கிடைக்கும்.4. விலைவாசிக்கு ஏற்ப மாறும்: தற்போது அரசு ஊழியர்களுக்கு, தேசிய நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையில், டி.ஏ., எனப்படும் அகவிலைப்படி மாற்றி அமைக்கப்படுகிறது. புதிய திட்டத்தில், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் இதுபோல் அகவிலைப்படி மாற்றி அமைக்கப்படும்.5. மொத்த ஓய்வூதிய பலன்: ஓய்வு பெறும்போது, கிராஜுவிடி எனப்படும் பணிக் கொடையுடன், கூடுதலாக ரொக்கப் பலனும் கிடைக்கும். பணி ஓய்வின்போது பெற்ற மாத சம்பளத்தில், அடிப்படை ஊதியம் மற்றும் டி.ஏ., ஆகியவற்றில், 10ல் ஒரு பங்கு, ரொக்கப் பலனாக கிடைக்கும். நிறைவு செய்த ஒவ்வொரு ஆறு மாதப் பணியின் அடிப்படையில் இது வழங்கப்படும். இதனால், உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் குறையாது.- நமது சிறப்பு நிருபர் -
Please bring pension scheme for Public