தென்மாவட்டங்களில் குறிப்பாக, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் மட்டும் தொடர்ச்சியாக கொடூர கொலைகள் நடக்கின்றன. அதற்கு என்ன காரணம் என்பது குறித்து, திருநெல்வேலியில் டி.ஐ.ஜி.,யாக இருந்து ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங், தனக்கு பலராலும் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் தகவலை, போலீசாரிடம் எழுத்துப்பூர்வமாகவே அளித்திருக்கிறார். யாரால் ஆபத்து என்பதையும் சொல்லி இருக்கிறார்.தனிப்படை
அவர் கொடுத்த கடிதத்தின் வீரியத்தை சரியான முறையில் உணர்ந்து, உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், ஜெயகுமார் இறந்திருக்க மாட்டார். கொலை நடந்த பின், மூன்று தனிப்படை அமைத்திருக்கிறோம்; குற்றவாளிகளை விரைந்து பிடிப்போம் என்பதெல்லாம், நடந்த கொலையில் தொடர்பு உடையவர்களை தண்டிக்கும் நடைமுறை.கொலையோ, கொள்ளையோ நடந்து, சட்டம் ஒழுங்குக்கு அச்சுறுத்தல் ஏற்படாமல் இருக்க வேண்டியது தான், போலீசின் முக்கியமான பணி. இதை போலீஸ் அதிகாரிகளும், போலீசாரும் உணர வேண்டும்.சட்டம் ஒழுங்குக்கு சவால் விடும் சம்பவங்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க வேண்டும். இதற்கு தான் போலீசில் பல பிரிவுகளாகவும், அடுக்குகளாகவும் அதிகாரிகளும், போலீசாரும் பணியாற்றுகின்றனர்.தென்மாவட்டங்களில் இயற்கையாகவே சட்டம் - ஒழுங்குக்கு சவாலான காரியங்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன. மற்ற மாவட்டங்களை ஒப்பிடும் போது, கொலை, கொள்ளை, பழிக்குப் பழி, வியாபார மோதல், முன்விரோத கொலைகள் என நிறைய நடக்கின்றன. காரணம், அங்கு நிலவும் சமுதாய ஏற்றத்தாழ்வுகளோடு, மக்களிடையே மேலெழும்பி நிற்கும் ஜாதிய சிந்தனை.எந்த இடத்தில் ஜாதிக்கு இழுக்கு என்றாலும், உணர்வு மேலெழுந்து கத்தியை எடுக்கின்றனர்; ஒரு நாளும் புத்தியை தீட்டுவதில்லை. இப்படிப்பட்ட மாவட்டங்களில் பணியாற்றும் போலீசாரின் பணி சவாலானது தான். ஆனாலும், ஆர்வத்தோடு பணியாற்றிய பல அதிகாரிகள், சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருந்தனர்.குறிப்பாக, ஒரு எஸ்.பி., மாவட்ட காவல் துறையின் முதல் மனிதராக இருந்து நிர்வாகத்தை கவனிக்கிறார் என்றால், அவருக்கு களத்தில் என்ன நிலவரம் என்பதை, மூன்று வகைகளில் அறிய முடியும்.காவல் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் வரையிலான அதிகாரிகள், தாங்கள் சேகரிக்கும் தகவல்களை மேலதிகாரிகளுக்கு அனுப்புவர். காவல் நிலைய நடவடிக்கை உள்ளிட்ட காவல் நிலையத்துக்கு வெளியே நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் அன்றாடம் சேகரித்து எஸ்.பி., அந்தஸ்தில் இருக்கும் மேல் அதிகாரிகளுக்கு அனுப்பிக் கொண்டே இருக்க வேண்டும்.புறக்கணிக்கக் கூடாது
எஸ்.பி., அந்தஸ்தில் இருக்கும் அதிகாரி, கீழ் நிலையில் இருந்து அனுப்பப்படும் அனைத்து தகவல்களையும் படித்து அறிந்து, சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை உடனே எடுக்க வேண்டும்.உதாரணத்துக்கு, ஒரு ஏரியாவில் சிலர் சேர்ந்து, யாரையோ கொலை செய்ய திட்டம் போடுகின்றனர் என்றால், அதை முன்கூட்டியே அறிந்து, மேலிடத்துக்கு தகவல் சொல்லி, கொலை நடக்காமல் செய்ய வேண்டும். இந்த மாதிரியான அனைத்து தகவல்களையும் களத்தில் இருந்து சேகரித்து, உயர் அதிகாரிகளுக்குக் கொடுப்பதற்காக, மாவட்ட அளவில் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.இப்படி கிடைக்கும் தகவல்கள் மீது, உயர் அதிகாரிகள் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதைத் தவிரவும், பொது மக்கள் வாயிலாகவும் நேரடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல்கள் கிடைக்கும். அதற்கு பொது மக்களோடு அதிகாரிகள் தொடர்பில் இருக்க வேண்டும். தகவல்கள் வர வேண்டும் என்றால், எந்த நிலையிலும் அதிகாரிகள் யாரையும் புறக்கணிக்கக் கூடாது.ஆனால், தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை, இந்த நடைமுறைகள் சமீப காலமாக நடப்பதாக தெரியவில்லை. காவல் நிலையங்களில் பணியாற்றும் போலீஸ்காரர்களும், இன்ஸ்பெக்டர்களும் சட்டம் - ஒழுங்கை காக்கக் கூடிய பணியில் தீவிரம் காட்டுவதில்லை. அதேபோலவே, தனிப் பிரிவு போலீசாரும், பணியை ஒழுங்காக செய்வதில்லை.மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்குக்கு சவால் விடும் காரியங்களை நிகழ்த்துவோருடன், இவர்களுக்கு தொடர்பு ஏற்பட்டு விடுவதால், அவர்களை கட்டுப்படுத்தாமல், காப்பாற்றும் வேலையை செய்கின்றனர். இதனால், உயர் அதிகாரிகளுக்கு கள நிலவரம் போய் சேருவதில்லை.கைகோர்ப்பு
எந்த போலீசும், ஒரு இடத்தில் மூன்றாண்டுகளுக்கு மேல் பணியாற்றினால், அவர்கள் குற்றவாளிகளோடு கைகோர்த்து விடுவர் என்பதாலேயே, அவர்களுக்கு மாறுதல் வழங்கும் முறை ஏற்படுத்தப்பட்டது. ஆனால், தென் மாவட்டங்களில் சென்சிட்டிவ்வான பதவியில் இருக்கும் போலீசார், 11 ஆண்டுகளை கடந்தும் ஒரே இடத்தில் பணியாற்றுகின்றனர்.அதோடு, தென்காசி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் பெரும்பான்மையாக இருக்கும் ஜாதியை சேர்ந்தோரை போலீசாராகவும், உயர் அதிகாரியாகவும் வைத்திருக்கக் கூடாது என, நிலை ஆணை உள்ளது. ஆனால், இங்கெல்லாம் அது பின்பற்றப்படுவதே கிடையாது.தென் மாவட்டங்களில் நடக்கும் பல்வேறு ஜாதிய மற்றும் அரசியல் கொலைகள், முன்விரோதக் கொலைகள், வியாபார கொலைகள், கொள்ளைகள், கலவரங்கள் எல்லாவற்றுக்கும் மிக முக்கிய காரணம் போலீஸ் துறை சரியாக செயல்படாதது தான்.தென்காசி மாவட்டத்துக்குள் இருக்கும் அம்பாசமுத்திரம் சப் டிவிஷனில் தான், அடிக்கடி சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படும். கொலை விழாத மாதமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பெயர் பெற்ற போலீஸ் சப் டிவிஷன். அங்கு ஏ.எஸ்.பி.,யாக பல்வீர் சிங் என்பவர் நியமிக்கப்பட்டார். அவரின் அதிரடியான செயல்பாடுகளால், சப் டிவிஷன் கொலை இல்லாததாக மாறியது.இதற்காக இவர் காட்டிய அதிரடியால் பாதிக்கப்பட்டவர்கள், வம்படியாக இவருக்கு எதிராக கிளம்பி போராட்டம் நடத்தி, டி.ஜி.பி., வரை புகார் கொடுத்தனர். நெருக்கடிக்கு அஞ்சிய உயர் அதிகாரிகள், அவரை சஸ்பெண்ட் செய்ததோடு, வழக்கும் போட்டனர்.இதையடுத்து, அம்பாசமுத்திரம் ஏரியா மீண்டும் கொலைக் களமாக மாறி விட்டது. இப்படி பல்வேறு காரணங்களால், தென் மாவட்டங்களில் அடிக்கடி நடக்கும் கொலைகளை தடுக்க முடியாததாகி இருக்கிறது.கூலிப்படை
படித்து முடித்து வேலையில்லாமல் இருக்கும் தென் மாவட்ட இளைஞர்கள், வாழ்வாதாரத்துக்கு கூலிப்படையாக செல்வதும் அதிகரித்திருக்கிறது. இந்நிலை மாற வேண்டும் என்றால், தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி பெருக வேண்டும். இளைஞர்கள் நல்ல வேலைக்கு சென்று விட்டால், கூலிப்படையாக மாறும் அவலம் இருக்காது.அதனால், தென் மாவட்டங்களில் சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் என்றால், பல்வேறு விதமான உத்திகள் வாயிலாகத் தான் அதை நிறைவேற்ற முடியும்.போலீஸ் என்பது பொழுதுபோக்கும் பணி அல்ல என்பதை, ஒவ்வொரு போலீசாரும் உணர்ந்து செயல்பட வேண்டும். எந்நேரமும் விழிப்பாக இருப்பதோடு, சமூக பொறுப்புணர்ச்சியுடன் பணியாற்ற வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே, தென் மாவட்டங்களில் கொலை, கொள்ளை, கலவரங்கள் குறையும்.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -