கோவை: நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணி கோவையில் கால் பதிக்க காரணமான அம்சங்களை பட்டியலிடுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.அவர்கள் கூறியதாவது:
கூட்டணி பலம் மட்டுமின்றி, கிராமப்புற மக்களின் ஆதரவால், கோவை தொகுதியை தி.மு.க., 28 ஆண்டுகளுக்கு பின், வசப்படுத்தி இருக்கிறது.கோவை லோக்சபா தொகுதியில், இதற்கு முன், தி.மு.க., நான்கு முறை போட்டியிட்டிருக்கிறது. அதில், 1980ல் இரா.மோகன், 1996ல் மு.ராமநாதன் ஆகியோர் வெற்றி பெற்றிருக்கின்றனர். 1998ல் போட்டியிட்ட சுப்பையன் இரண்டாமிடம், 2014ல் போட்டியிட்ட கணேஷ்குமார் மூன்றாமிடம் பெற்றனர்.தொடர்ச்சியாக இரு தேர்தல்களில் தோல்வியை சந்தித்ததால், 2019ல் கூட்டணி கட்சியான மா.கம்யூ.,வுக்கு தொகுதி தாரைவார்க்கப்பட்டது. 2021 சட்டசபை தொகுதிகளில் கோவை மாவட்டத்தில், 10 சட்டசபை தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்ததால், 10 ஆண்டுகளுக்கு பின், தி.மு.க., மீண்டும் களத்தில் இறங்கியது.கூட்டணி பலம் இருந்தாலும், 2021 சட்டசபை தேர்தலில் கோட்டை விட்டது போல், இம்முறை தவற விடக்கூடாது என்பதில், தி.மு.க., தலைமை உறுதியாக இருந்தது. அதிக ஓட்டுகள் பதிவு
தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அமைச்சர் டி.ஆர்.பி., ராஜா, கூட்டணி கட்சியினர் மட்டுமின்றி, சிறுபான்மையின அமைப்புகள், பட்டியலின அமைப்புகள், தொழில்துறை அமைப்புகள், வர்த்தக அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் தி.மு.க., பக்கம் கொண்டு வந்தார். இதன் காரணமாக, சட்டசபை தேர்தலில் பெற்ற ஓட்டுகளை காட்டிலும் அதிகமாக தி.மு.க.,வுக்கு பதிவாகியிருக்கிறது.மிக முக்கியமாக பல்லடம், கவுண்டம்பாளையம், சூலுார் தொகுதிகளில், பா.ஜ.,வை விட தி.மு.க.,வுக்கு அதிகமான ஓட்டு விழுந்திருக்கிறது. இம்மூன்று தொகுதிகளும் கிராமப்புறங்கள் நிறைந்தவை. உதயசூரியன், இரட்டை இலையை தவிர அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பரிச்சயம் இருப்பதில்லை. சட்டசபை தேர்தல் என்றால் இரட்டை இலை; லோக்சபா தேர்தல் என்றால் உதயசூரியன் என மாறி, மாறி ஓட்டளிக்கின்றனர்.இதில், பல்லடத்தில் மட்டும் தி.மு.க.,வுக்கு, ஒரு லட்சத்து, 14 ஆயிரத்து, 139 ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இது, பா.ஜ.,வை விட, 37 ஆயிரத்து, 806 ஓட்டுகள் அதிகம். ஓட்டு வித்தியாசம்
இதேபோல், கவுண்டம்பாளையத்தில், 24 ஆயிரத்து, 460 ஓட்டுகள், சூலுாரில் 20 ஆயிரத்து, 518 ஓட்டுகள் அதிகமாக தி.மு.க.,வுக்கு கிடைத்திருக்கிறது. இம்மூன்று தொகுதிகளில் மட்டும், 82 ஆயிரத்து, 784 ஓட்டுகள் வெற்றி வித்தியாசம் ஏற்பட்டிருக்கிறது.அதேநேரம் நகரப்பகுதியில் உள்ள கோவை வடக்கு, தெற்கு மற்றும் சிங்காநல்லுார் தொகுதிகளில், அ.தி.மு.க.,வுக்கு அதாவது இரட்டை இலைக்கு வழக்கமாக ஓட்டளிப்பவர்கள், இம்முறை பா.ஜ.,வை தேர்வு செய்திருக்கின்றனர். இதன் காரணமாக, நகர்ப்பகுதியில் உள்ள தொகுதிகளில் அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு குறைந்து, பா.ஜ.,வுக்கு அதிகரித்திருக்கிறது. அதாவது, கிராமப்புற அ.தி.மு.க., ஓட்டு தி.மு.க.,வுக்கும், நகர்ப்புற அ.தி.மு.க., ஓட்டு பா.ஜ.,வுக்கும் மாறியிருக்கிறது. இதன் காரணமாக, அ.தி.மு.க., ஓட்டு வங்கி இத்தேர்தலில் மிகப்பெரிய அளவில் சரிந்து, மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. கைகொடுத்த திட்டங்கள்
ஏனெனில், 2021 சட்ட சபை தேர்தலில் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், அ.தி.மு.க., கூட்டணிக்கு, ஐந்து லட்சத்து, 97 ஆயிரத்து, 447 ஓட்டுகள் கிடைத்தது. தற்போது, இரண்டு லட்சத்து, 36 ஆயிரத்து, 490 ஓட்டுகளே கிடைத்திருக்கின்றன. மூன்று லட்சத்து, 60 ஆயிரத்து, 957 ஓட்டுகளை அ.தி.மு.க., இழந்திருக்கிறது. இதை தி.மு.க.,வும், பா.ஜ.,வும் பங்கிட்டுள்ளன.மகளிர் உரிமைத்தொகை, இலவச பஸ், கல்லுாரி மாணவியருக்கு மாதாந்திர உதவித்தொகை, வரும் கல்வியாண்டு முதல் கல்லுாரி மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் காலை சிற்றுண்டி திட்டம் போன்றவை, கிராமப்புற பெண் வாக்காளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இதுவே, கிராமப்புறங்கள் அடங்கிய மூன்று தொகுதிகளில், அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க., முன்னேறியதற்கு காரணமாக அமைந்தது. மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் அதிருப்தியை போக்க, அமைச்சர் உதயநிதி பிரசாரத்துக்கு வந்தபோது, விடுபட்டோருக்கு தேர்தலுக்கு பின் வழங்கப்படும் என கூறிய உறுதிமொழி, கோவை மக்களிடம் நம்பிக்கையை பெற்றிருக்கிறது. இதுபோன்ற காரணங்களால், 28 ஆண்டுகளுக்கு பின், தி.மு.க.,வுக்கு கோவை மக்கள் வெற்றியை கொடுத்திருக்கின்றனர்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
அ.தி.மு.க., ஓட்டை விட குறைவு
தி.மு.க., வேட்பாளர் ராஜ்குமார், ஐந்து லட்சத்து, 68 ஆயிரத்து, 200 ஓட்டுகள் பெற்று, கோவை லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார். இத்தேர்தலில் அ.தி.மு.க., மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. என்றாலும் கூட, 2021 சட்டசபை தேர்தலில் ஒப்பிட்டால், அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்கள், ஆறு தொகுதிகளில் சேர்த்து, ஐந்து லட்சத்து, 97 ஆயிரத்து, 447 ஓட்டுகள் பெற்றிருக்கின்றனர். தற்போது தி.மு.க., வேட்பாளர் பெற்றுள்ள ஓட்டு, இதை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.அதே நேரம், கோவை தெற்கு தொகுதியில், 2021ல் பா.ஜ., சார்பில் போட்டியிட்ட வானதி சீனிவாசன், 53 ஆயிரத்து, 209 ஓட்டுகள் பெற்றார். இப்போது, அண்ணாமலை, இத்தொகுதியில் மட்டும், 53 ஆயிரத்து, 579 ஓட்டுகள் பெற்றிருக்கிறார்.