கோவை;புதிய மேயர் யாரென்பதை, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, 2ம் தேதி கோவை வரும்போது, தெரியும் என்ற எதிர்பார்ப்பு தி.மு.க.,வினர் மத்தியில் எழுந்திருக்கிறது.கோவை மாநகராட்சி மேயராக இருந்த, 19வது வார்டு கவுன்சிலர் கல்பனா, தனது உடல்நிலை மற்றும் மருத்துவ காரணங்களை கூறி, மேயர் பதவியை மட்டும் ராஜினாமா செய்தார். புதிய மேயர் தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல், ஆக., 6ல் நடக்கிறது. இச்சூழலில், ஆக., 1ல் திருச்சியில் நடைபெறும் விழாக்களுக்கு வரும், தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, அன்றிரவு ஈரோடு வருகிறார். மறுநாள் 2ம் தேதி ஈரோட்டில் நடக்கும் அரசு விழாக்களில் பங்கேற்கிறார். ஈரோட்டில் இருந்து கோவை வந்து, விமானம் மூலம் சென்னை செல்லும் வகையில் பயணத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. உதயநிதியுடன் அமைச்சர் நேருவும் உடன் வருகிறார். அதனால், புதிய மேயரை, இவ்விருவரும் இணைந்து கோவையில் தேர்வு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:கோவை மேயர் பதவியை கைப்பற்ற, தி.மு.க., பெண் கவுன்சிலர்கள் மத்தியில் கடுமையான போட்டி நிலவுகிறது. மண்டல தலைவர்கள் லக்குமி இளஞ்செல்வி, மீனா, தெய்வானை, பணிகள் குழு தலைவர் சாந்தி, கல்விக்குழு தலைவர் மாலதி, கவுன்சிலர்கள் அம்பிகா, ரங்கநாயகி ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன. இவர்களது செயல்பாடுகள் மற்றும் குடும்ப பின்னணி பற்றிய தகவல் உளவுத்துறை மூலமாகவும், அரசு துறை அதிகாரிகள் மூலமாகவும் கட்சி தலைமைக்கு சென்றிருக்கிறது.வரும், 2026 சட்டசபை தேர்தலில், மேயர் மற்றும் கவுன்சிலர்களின் செயல்பாடுகள் எதிரொலிக்கும். அதனால், ஆளுமைமிக்கவரை தேர்வு செய்ய, தலைமை யோசிக்கிறது. கடந்த முறை, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தலையீடு இருந்தது.இந்த முறை அத்தகைய சூழல் வந்து விடக் கூடாது என்பதற்காக, அமைச்சர் உதயநிதி கோவை வரும்போது, அமைச்சர் நேருவும் உடன் வருகிறார். ஏற்கனவே 'டிக்' செய்து வைத்திருக்கும் கவுன்சிலர்களில் ஒருவரை, உதயநிதி தேர்வு செய்வார். மேயர் வேட்பாளராக மறுநாள் - 3ம் தேதியோ அல்லது, 4ம் தேதியோ அறிவிக்க வாய்ப்பிருக்கிறது.மேயர் போட்டியில் மிக முக்கியமானவர் மு.ம.சண்முகசுந்தரத்தின் மருமகள் சாந்தி. நீதிக்கட்சி காலத்தில் இருந்து கட்சியில் இருந்தவர் சண்முகசுந்தரம். அண்ணாதுரை கதை வசனத்தில், உதயசூரியன் பிக்சர்ஸ் சார்பில் 'எதையும் தாங்கும் இதயம்' என்கிற படத்தை தயாரித்தவர்; தி.மு.க.,வின் முதல் தேர்தலில் சூலுார் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர். கருணாநிதியின் நெருங்கிய நண்பராக இருந்தவர். மு.ம.ச., அறக்கட்டளை என்கிற பெயரில் நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர்.இதில், லக்குமி இளஞ்செல்வி மாவட்ட செயலாளர் கார்த்திக் மனைவி; மேயர் பதவி கோரினால், கணவரிடம் இருந்து கட்சி பதவி பறிபோகுமோ என்கிற அச்சத்தில், பதவியை விரும்பாமல் இருக்கிறார்.மீனா, கட்சியில் சீனியர்; அ.தி.மு.க., ஆட்சியில் கவுன்சிலராக இருந்து, பல்வேறு சிரமங்களுக்கு உள்ளானவர்; தற்போது மண்டல தலைவராக இருக்கிறார். தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியின் மனைவி தெய்வானை, மேற்கு மண்டல தலைவராக உள்ளார். இளைஞரணி நிர்வாகி தனபால் மனைவி அம்பிகா, வார்டு பொறுப்பாளர் மனைவி ரங்கநாயகி. கல்விக்குழு தலைவர் மாலதி, எம்.பி., கனிமொழி ஆதரவாளர். மேயர் பதவிக்கு ஆசைப்படும் ஒவ்வொருவரும், மேலிட தலைவர்கள் மூலம் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.