உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சிவகுமாருக்கு கொடுத்த வாக்கை சோனியா நிறைவேற்றுவாரா?

சிவகுமாருக்கு கொடுத்த வாக்கை சோனியா நிறைவேற்றுவாரா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு நடக்கிறது. கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பே, முதல்வர் பதவிக்கு சித்தராமையா, சிவகுமார் இடையில் போட்டி ஏற்பட்டது. தேர்தல் முடிவுகள் வெளியான கையோடு இருவரும் டில்லி பறந்தனர்.

இரண்டரை ஆண்டு

முதல்வர் பதவி வேண்டும் என்று, மேலிடம் முன் இருவரும் அடம் பிடித்தனர். சித்தராமையாவுக்கு முதல்வர் பதவி கிடைப்பதை எப்படியாவது தடுக்க வேண்டும் என சிவகுமார் முயற்சி செய்தார். சித்தராமையாவும் விடவில்லை. ஐந்து நாட்கள் நடந்த போராட்டத்திற்கு பின், ராகுல் ஆதரவுடன் சித்தராமையா முதல்வர் பதவியில் அமர்ந்தார்.இதனால் சிவகுமார் கடும் கோபம் அடைந்தார். அவரிடம் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, மொபைல் போனில் பேசி சமாதானம் செய்தார். 'இரண்டரை ஆண்டுகளுக்கு பின்பு, உங்களை முதல்வர் ஆக்குகிறோம்' என்று அவர் வாக்குறுதி அளித்ததாக தகவல்கள் வெளியாகின.இதனால், தனக்கு கிடைத்த துணை முதல்வர் பதவியை அவர் ஏற்றுக்கொண்டார். ஆட்சி அமைந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் ஒரு ஆண்டு தான் மீதம் உள்ளது. சோனியா அளித்த வாக்குறுதிப்படி முதல்வர் ஆகிவிடலாம் என சிவகுமார் நினைத்து இருந்தார். அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட ஆரம்பித்தார்.இந்நிலையில், 'மூடா' முறைகேடு வழக்கில் சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்ய கவர்னர் உத்தரவிட்டார். அவரை பதவி விலக கோரி, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், 'கட்சி மேலிடம் ஆதரவு எனக்கு உள்ளது; எக்காரணம் கொண்டும் பதவி விலக மாட்டேன்' என சித்தராமையா கூறி வருகிறார்.அவர் விசாரணையை எதிர்கொள்ள நேரிட்டால், அவருக்கு பதிலாக வேறு ஒருவரை முதல்வராக்கவும் கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. இதனால் உஷாரான சிவகுமார், அடிக்கடி டில்லி சென்று மேலிட தலைவர்களை சந்தித்து வருகிறார். ஆனால் அவருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிப்பது போன்று, காங்கிரஸ் மூத்த அமைச்சர்கள் தங்களுக்கு முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என வெளிப்படையாக கேட்க ஆரம்பித்து உள்ளனர். உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், பொதுப்பணி அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, தொழில் துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் ஆகிய மூன்று பேரும் முதல்வர் பதவிக்கான போட்டியில் தற்போதைக்கு உள்ளனர். இவர்கள் மூவருமே சித்தராமையாவின் ஆதரவாளர்கள்.

போர்க்கொடி

சிவகுமாருக்கு எக்காரணம் கொண்டும் முதல்வர் பதவி கிடைக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் இவர்கள், தங்களுக்கு முதல்வர் பதவி வேண்டும் என்று போர்க்கொடி துாக்கி உள்ளனர். இதனால், சிவகுமார் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த சூழலுக்கு மத்தியில், சிவகுமார் குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கிருந்தும் கர்நாடக அரசியலில் என்ன நடக்கிறது என தீவிரமாக கண்காணித்து வருகிறார். மேலிட தலைவர்களுடன் தொடர்ந்து தொடர்பிலும் உள்ளார்.தற்போது முதல்வர் பதவி கேட்கும் அமைச்சர்கள் அனைவருமே காங்கிரசுக்கு ஓட்டு வாங்கி தரும் சமூகங்களை சேர்ந்தவர்கள். இதனால் அடுத்த முதல்வராக யாரை நியமிக்கலாம் என்பதில் கட்சி மேலிடத்திற்கு இடியாப்ப சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ஆனால் சிவகுமாரோ, சோனியா தனக்கு அளித்த வாக்குறுதிப்படி முதல்வர் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார். சோனியா கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவாரா என்பது, வரும் நாட்களில் தெரியும்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sam Dev
செப் 17, 2024 22:19

மோடி அமித்ஷாவுக்கு பிரதமர் பதவியை விட்டுக்கொடுப்பாரா? இப்பொழுது இருவருக்கும் மற்றும் பிஜேபி கட்சியில் இருக்கும் மூத்த தலைவர்கள் இடையே மோதல் ஆரம்பித்திருக்கு.


முக்கிய வீடியோ