உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மாவட்டம் ஒன்று.. எம்.பி.,க்கள் ஐவர்.. மக்கள் பிரச்னைகளுக்கு கரம்கோர்த்து தீர்வு காண்பரா!

மாவட்டம் ஒன்று.. எம்.பி.,க்கள் ஐவர்.. மக்கள் பிரச்னைகளுக்கு கரம்கோர்த்து தீர்வு காண்பரா!

திருப்பூர்: கோவை மாவட்டத்துடன் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த திருப்பூர், கடந்த, 2008ல், தனி மாவட்டமாக உதயமானது.லோக்சபா தொகுதிக்கான சட்டசபை தொகுதி பிரிக்கப்பட்ட போது, மாவட்டத்தில் உள்ள, 8 சட்டசபை தொகுதியை சேர்ந்த வாக்காளர்கள், 5 எம்.பி.,க்களை தேர்வு செய்யும் நிலை ஏற்பட்டது.திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு சட்டமன்ற தொகுதிகள், திருப்பூர் லோக்சபா தொகுதியில் உள்ளன.திருப்பூர் மாவட்டத்திற்குள் உள்ள பல்லடம் தொகுதி, கோவை லோக்சபா தொகுதியிலும்; காங்கயம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகள், ஈரோடு லோக்சபா தொகுதியிலும்; அவிநாசி சட்டமன்ற தொகுதி, நீலகிரி லோக்சபா தொகுதியிலும்; மடத்துக்குளம், உடுமலை சட்டமன்ற தொகுதிகள், பொள்ளாச்சி லோக்சபா தொகுதியிலும் உள்ளன.அவ்வகையில், திருப்பூர் மாவட்ட மக்கள் திருப்பூர், நீலகிரி, ஈரோடு, பொள்ளாச்சி, கோவை என, 5 எம்.பி.,க்களுக்கு ஓட்டளித்துள்ளனர். தங்கள் தொகுதி பிரச்னை சார்ந்து திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கோவை என, நான்கு கலெக்டர்கள் மற்றும் துறை அதிகாரிகளுடன், எம்.பி.,க்கள் தொடர்பில் இருக்க வேண்டியுள்ளது.ஆயத்த ஆடை தொழில் என்பது, திருப்பூரை மட்டும் சார்ந்ததல்ல; மாறாக பல்லடம், அவிநாசி, காங்கயம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளையும் சார்ந்தது தான். அதே போன்று, ஒட்டு மொத்த மாவட்டத்தையும் உள்ளடக்கி தான் விசைத்தறி, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் உள்ளன.இத்தொழில்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அதற்கான தீர்வு தொடர்பாக, அந்தந்த தொகுதி எம்.பி.,க்களை மக்கள் தொடர்பு கொள்கின்றனர். இருப்பினும், அதற்கான தீர்வு என்பது, பல நேரங்களில் இல்லாமலே போய் விடுகிறது; அல்லது இழுபறியாகிறது. இதற்குஎம்.பி.,க்கள் ஒவ்வொருவரும் தனித்து செயல்படுவதும் ஒரு காரணம்.இதில், ஒவ்வொரு தொகுதியிலும், வெவ்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.பி.,க்கள் இருக்கும் பட்சத்தில், அவர்கள் இணைந்து பேசுவதற்கான வாய்ப்பு கூட இல்லாமல் போய் விடுகிறது.உதாரணமாக, நீலகிரி லோக்சபா தொகுதிக்குட்பட்ட அவிநாசி,திருமுருகன்பூண்டி பகுதியில் குடிநீர் வினியோகத்தில் பிரச்னை என்றால், நீலகிரி தொகுதி எம்.பி., அந்த விவகாரம் குறித்த விளக்கத்தை திருப்பூர் மாவட்ட நிர்வாகத்திடம் தான் கேட்டுப் பெற வேண்டும்.இதே விவகாரத்தை, அவிநாசி எம்.எல்.ஏ.,வும் அணுகும் போது, சில நேரங்களில் ஒருமித்த புரிதல் இல்லாமல் போகலாம்.எனவே, இம்மாவட்டம் சார்ந்தஎம்.பி., எல்.ஏ.,க்கள் அவ்வப்போது, தங்களுக்குள் ஒருமித்த கருத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்; குறைந்தது, மாதம் ஒரு முறையாவது, அனைவரும் இணைந்து மக்கள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

kulandai kannan
ஏப் 29, 2024 22:02

பூகோள அறிவு இல்லாதவர்கள் தொகுதி மறுசீரமைப்பு செய்ததன் விளைவு இது. கோவையின் மையப் பகுதியான ஆர்.எஸ்.புரம் பொள்ளாச்சி தொகுதியிலும், 40 கிமீ தொலைவில் உள்ள பல்லடம் கோவை தொகுதியிலும் இணைக்கப் பட்டிருப்பது ஒரு உதாரணம்.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை