- நமது நிருபர் - 'தி.மு.க., மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மகளிர் அணியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். தேர்தலில், இளைஞரணிக்கு போட்டியாக 20 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும்' என, கட்சி தலைமையிடம் மகளிர் அணி நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆட்சியை இரண்டாம் முறையாக தக்க வைத்துக்கொள்ளும் இலக்குடன், தேர்தல் பணிகளில் தி.மு.க., முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில், தி.மு.க.,வின் இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் மாநாடு, திருவண்ணாமலையில் பிரமாண்டமாக நடந்தது. அதைத் தொடர்ந்து, வருவாய் மாவட்டத்திற்கு ஒரு தொகுதி என்ற அடிப்படையில் 40 தொகுதிகளை, கட்சி தலைமையிடம் இளைஞர் அணி நிர்வாகிகள் ஏற்கனவே கேட்டுள்ளனர். இதற்கிடையில், 'வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற தலைப்பில் மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு, அக்கட்சியின் துணைப் பொதுச்செயலர் கனிமொழி தலைமையில் நேற்று முன்தினம் பல்லடத்தில் மிகப் பிரமாண்டமாக நடந்தது. இம்மாநாட்டுக்கு எதிர்பார்த்ததை விட கூடுதலாக மகளிர் கூடியதால் உற்சாகம் அடைந்த மகளிர் அணி நிர்வாகிகள், வரும் சட்டசபைத் தேர்தலில் இளைஞரணிக்கு ஈடாக 20 சீட்டுகளில் போட்டியிட வேண்டும் என, கனிமொழியிடம் விருப்பம் தெரிவித்துள்ளனர். இது குறித்து தி.மு.க., மகளிர் அணி நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகத்தில் மொத்தமுள்ள வாக்காளர்களில், ஆண்களை விட பெண்கள் அதிகம் உள்ளனர். பெண் வாக்காளர்களில் 60 சதவீதம் பேர், நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க.,விற்கு ஆதரவாக செல்வர் என சர்வே வாயிலாக தெரிய வந்துள்ளது. எனவே, பெண்களின் ஓட்டுகளை தி.மு.க.,விடமிருந்து த.வெ.க.,விற்கு செல்ல விடாமல் தடுக்க, மகளிர் அணிக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். குறிப்பாக, தென் மண்டல தி.மு.க., பொறுப்பாளராக இருக்கும் கனிமொழி தேர்வு செய்யும் பெண் வேட்பாளர்களுக்கு, கட்சி தலைமை 'சீட்' ஒதுக்க வேண்டும். பெண் வேட்பாளர் விரும்பும் தொகுதியை கூட்டணி கட்சிகள் எடுத்துக் கொண்டால், வேறு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும். ஒருவேளை மகளிர் அணி நிர்வாகிக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனால், அவருக்கு பதிலாக அவருடைய கணவருக்காவது வாய்ப்பு வழங்க வேண்டும். மொத்தத்தில், கனிமொழி ஆதரவாளர்களுக்கு முன்னுரிமை வழங்கி சீட்டுகளை வழங்க வேண்டும். கடந்த சட்டசபை தேர்தலில், மகளிர் அணிக்கு ஐந்து தொகுதிகள் மட்டும் ஒதுக்கப்பட்டன. இது மிகவும் குறைவு. இந்த முறை, த.வெ.க., களம் இறங்கி இருப்பதால், மகளிர் அணிக்கு 20 தொகுதிகள் வரை கண்டிப்பாக ஒதுக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த மகளிர் அணியினரின் எதிர்பார்ப்பு. இதை, பல்லடம் மாநாட்டுக்கு வந்த கனிமொழியிடம் சொல்லி இருக்கிறோம். அவரும், இது தொடர்பாக கட்சித் தலைவரான ஸ்டாலினிடம் பேசுவதாக கூறியிருக்கிறார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.