வருத்தம் தெரிவித்த எம்.பி.க்கள்: பட்ஜெட் தொடரில் பங்கேற்க அனுமதி
குளிர்கால கூட்டத்தொடரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கை குழுவின் விசாரணைக்கு ஆளான லோக்சபா எம்.பி.,க்கள், பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரின் போது பார்வையாளர் மாடத்திலிருந்து இருவர் லோக்சபாவுக்குள் குதித்து, வண்ண புகை குண்டுகளை வீசி போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் சபைக்கு வந்து விளக்கம் தர வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். எல்லை மீறி அமளி
அவர்களது நடவடிக்கைகள் எல்லை மீறிப்போனதை அடுத்து, இதுவரை இல்லாத வகையில், 146 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இதில், 100 பேர் லோக்சபா எம்.பி.,க்கள். 46 பேர் ராஜ்யசபா எம்.பி.,க்கள். இவர்களில் பெரும்பாலானோர், காங்கிரஸ் எம்.பி.,க்கள். இந்த நடவடிக்கை, கூட்டத்தொடர் முழுமைக்குமா அல்லது நிரந்தரமாகவா என்ற குழப்பம் நிலவியது.அமளியில் இறங்கிய எம்.பி.,க்களில் ஒரு சிலர், சபை அதிகாரிகள் அமர்ந்துள்ள மேடை மீது ஏறி காகிதங்களை கிழித்து வீசி, விதிகளுக்கு மாறாக எல்லை மீறி அமளியில் ஈடுபட்டனர். அவர்களது பெயர்கள் மட்டும் ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டன. மற்றவர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை குளிர்கால கூட்டத் தொடருக்கு மட்டுமே என்றும், அடுத்து வரவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பொருந்தாது என்றும் தெரிய வந்தது.இதன்படி, மூன்று லோக்சபா எம்.பி.,க்களின் பெயர்கள் லோக்சபா ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கும், 11 ராஜ்யசபா எம்.பி.,க்களின் பெயர்கள் ராஜ்யசபா ஒழுங்கு நடவடிக்கைக்குழுவுக்கும் பட்டியலிடப்பட்டன. இந்நிலையில், லோக்சபா ஒழுங்கு நடவடிக்கைகுழு கூடி, இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியது. தமிழகத்தின் கன்னியாகுமரி லோக்சபா எம்.பி., விஜய் வசந்த், திருவள்ளூர் லோக்சபா எம்.பி., ஜெயகுமார், அசாம் மாநிலத்தின் பர்பெடா லோக்சபா எம்.பி., அப்துல் காலிக் ஆகியோரை அழைத்து விசாரித்தது.அப்போது, தங்களின் நடவடிக்கைக்கு நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிப்பதாக இந்த மூன்று எம்.பி.,க்களும் கூறினர். மேலும், ஒழுங்கு நடவடிக்கை குழுவில் இருந்த பா.ஜ., - எம்.பி.,க்களும், இவர்கள் மீதான நடவடிக்கையை கைவிடலாம் என கேட்டுக் கொண்டனர். தீர்மானம்
இதையடுத்து, பா.ஜ., - எம்.பி., சுனில் குமார் சிங் தலைமையிலான அந்த குழு, இந்த மூன்று எம்.பி.,க்களின் மீதான நடவடிக்கையை திரும்பப் பெறலாம் என்று பரிந்துரைத்து, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது.இதையடுத்து, ஓரிரு நாட்களில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சபாநாயகர் அலுவலகத்திலிருந்து வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதையடுத்து, சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு ஆளாகியிருந்த அனைத்து லோக்சபா எம்.பி.,க்களுமே, வரும் 31ல் துவங்கவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.
ராஜ்யசபாவில் நீடிக்கும் சஸ்பென்ஸ்
ராஜ்யசபா ஒழுங்கு நடவடிக்கை குழுவின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள எம்.பி.,க்கள் 11 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. கடந்த, 15ல் ராஜ்யசபா ஒழுங்கு நடவடிக்கை குழு கூடியது. விடுமுறை காரணமாக போதுமான உறுப்பினர்கள் வராததால், அலுவல்களை மேற்கொள்ள இயலவில்லை.ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கரின் உத்தரவு, குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஏற்கனவே வந்து சேர்ந்துவிட்டது. இதையடுத்து, சஸ்பெண்ட் செய்யப்பட்ட 11 பேரிடமும் விளக்கம் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இவர்களுக்கு குறைந்தபட்சம் 10 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும். அதற்குள், அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும். அந்த விளக்கமானது, ஏற்புடைதாகவும், திருப்தி அளிப்பதாகவும் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால், சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்ய பரிந்துரைத்து, ராஜ்யசபா தலைவருக்கு கடிதம் வழங்கப்படும்.- நமது டில்லி நிருபர் -