உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 3 மாத அரிசியை தர சொல்கிறது மத்திய அரசு; ஒரு மாதம் மட்டுமே கூடுதலாக தருகிறது தமிழகம்

3 மாத அரிசியை தர சொல்கிறது மத்திய அரசு; ஒரு மாதம் மட்டுமே கூடுதலாக தருகிறது தமிழகம்

சென்னை: தமிழக ரேஷன் கடைகளில், 2.25 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு மாதந்தோறும் இலவச அரிசி வழங்கப்படுகிறது. இதில், 1.11 கோடி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு வழங்க தேவைப்படும், 2.05 லட்சம் டன் அரிசியை, தமிழகத்திற்கு இலவசமாக மத்திய அரசு வழங்குகிறது. மீதமுள்ள, 1.13 கோடி முன்னுரிமை கார்டுதாரர்களுக்கான, 1.55 லட்சம் டன் அரிசியை, தமிழக அரசு வழங்குகிறது. நாடு முழுதும் கடந்த சீசனில் வேளாண் சாகுபடி நன்கு இருந்தது. இதனால், விவசாயிகளிடம் நெல், கோதுமை அதிகம் கொள்முதல் செய்யப்பட்டது. எனவே, அவற்றை கிடங்குகளில் பாதுகாப்பாக வைப்பதில், இந்திய உணவு கழகத்திற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், ரேஷன் கார்டுதாரர்களுக்கு மூன்று மாத அரிசி, கோதுமையை ஒரே தவணையில் வழங்க, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு, கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டது. இதற்கு சம்மதம் தெரிவித்த தமிழக அரசு, ஜூன் அல்லது ஜூலையில் வழங்க முடிவு செய்தது. ஆனால், ரேஷன் கடைகளில், மூன்று மாத அரிசியை ஒரே தவணையில் வழங்கவில்லை. இந்நிலையில், அடுத்த மாதத்திற்கான அரிசியை, இம்மாதம் வாங்கிக் கொள்ளலாம் என, அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மத்திய உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரே தவணையில் ஆறு மாத அரிசியை கூட வழங்கலாம் என, மாநில அரசுகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், கார்டுதாரர்களை கட்டாயப்படுத்த கூடாது என்ற, நிபந்தனை விதிக்கப்பட்டது. மூன்று மாத அரிசியை ஒரே தவணையில் வழங்க, ரேஷன் கடை விற்பனை முனைய கருவியில் மென்பொருள் உருவாக்க வேண்டும் என்ற காரணத்தை, தமிழக அரசு தெரிவித்தது. ஆனால், அதை செயல்படுத்தவில்லை. இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து, கார்டுதாரர்கள் கூறுகையில், 'நவம்பர், டிசம்பர் மழை காலம். இம்மாதம் தீபாவளியை கொண்டாட, சொந்த ஊர் செல்ல உள்ளனர். எனவே, மூன்று மாத ரேஷன் அரிசியை ஒரே தவணையில் வழங்கினால், தற்போது வாங்கலாம். இதனால், மழை காலங்களில் கடைக்கு போக வேண்டிய தில்லை' என்றனர். உணவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தமிழகத்தில்ரேஷன் கடைகளில் இடம் இல்லாதது, ஊழியர் பணிச்சுமை போன்றவற்றால், மூன்று மாத அரிசியை ஒரே தவணையில் வழங்குவது சிரமம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Gajageswari
அக் 18, 2025 15:49

ரேஷன் என்ற பற்றாகுறை கால 1950 நடைமுறை அதை தற்போது மிகுதி காலம் நடைமுறை பயன்பாடு தவறு. பொருளுக்கு பதில் பணமாக கொடுங்கள் பிரச்சினை முடியும்


ஆரூர் ரங்
அக் 18, 2025 18:07

ஏழைகளின் மாதாந்திர பட்ஜெட்டில் அரிசிதான் முக்கிய செலவு. ரேஷனால் மிச்சப்படும் பணத்தை மற்ற செலவுகளுக்கு பயன்படுத்தலாம். பணமாக கொடுத்தால் மதுக்கடைக்குதான் அதிகமாக செல்லும்.


அசோகன்
அக் 18, 2025 15:00

வந்த அரிசியை எல்லாம் கேரளாவுக்கு ஏத்தி அனுப்பியாச்சு அதுக்கான காசும் எங்க அக்கௌன்ட்க்கு வந்தாச்சி..... இனிமே இருந்தாதானே கொடுக்க..... வேணுமுன்னா கடிதம் எழுதி தாறோம் மக்களை வாங்கிக்க சொல்லுங்க


Indhuindian
அக் 18, 2025 07:00

ஞபாகம் இருக்கா முதலில் ஒரு படி படிப்படியாக மூன்று படி ஆனா ஒரு பிடி கூட குடுக்கமுடியலே அதே மாதிரிதான் முதலில் ஒரு மாதம் படிப்படியாக மூன்று மாதம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை