சென்னை: நில அபகரிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சிவரக்கோட்டையில், மு.க.அழகிரி கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான பொறியியல் கல்லுாரி உள்ளது. இந்தக் கல்லுாரி, ஹிந்து அறநிலைய துறைக்கு சொந்தமான நிலத்தை அபகரித்ததாக, மதுரை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hzny6rkv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 குற்றச்சாட்டு
இப்புகாரில், அழகிரி உள்பட ஏழு பேர் மீது, 2014ல் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு வழக்கு பதிவு செய்தது. இதுதொடர்பான வழக்கு, மதுரை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக்கோரி, அழகிரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த, மதுரை மாவட்ட நீதிமன்றம், போலி ஆவணங்கள் தயாரித்தது, மோசடி, ஏமாற்றுதல், போலி ஆவணத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டுகளில் இருந்து மட்டும் அழகிரியை விடுவித்து, 2021ல் உத்தரவிட்டது.ஆனால், நம்பிக்கை மோசடி, கூட்டுச்சதி போன்ற குற்றச்சாட்டுகளை, அழகிரி எதிர்கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து, மதுரை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார், சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்தனர்.அதேபோல, மதுரை மாவட்ட நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும், வழக்கில் இருந்து தன்னை முழுமையாக விடுவிக்கக் கோரியும், அழகிரி மனுத்தாக்கல் செய்தார்.இந்த இரண்டு மனுக்களும், 2023ம் ஆண்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, விசாரணை நடந்து வந்தது. இரு தரப்பு வாதங்களை அடுத்து, இந்த மனுக்கள் மீதான உத்தரவை, உயர் நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் தள்ளிவைத்து இருந்தார். தள்ளுபடி
இந்நிலையில், இந்த மனுக்கள் மீதான உத்தரவை, நீதிபதி பி.வேல்முருகன் நேற்று பிறப்பித்தார். நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை ஏற்று, போலி ஆவணங்கள் தயாரித்தது, மோசடி, ஏமாற்றுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து அழகிரியை விடுவித்து, மதுரை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நீதிபதி ரத்து செய்தார்.அத்துடன் வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக்கோரி, அழகிரி தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தார்.