கோவை : மக்களின் கருணையை, இரக்கத்தைச் சுரண்டிக் கொழுக்கும் தொழில் நிறுவனங்களாக மாறிவிட்டிருக்கின்றன, கோவையில் இயங்கும் ஒருசில குழந்தைக் காப்பகங்கள். எதிர்காலத்துக்காக ஏங்கி நிற்கும் குழந்தைகளை, பணம் காய்க்கும் மரங்களாக பார்க்கும் குழந்தைக் காப்பகங்களில் நடப்பவற்றைக் கேட்டால், நெஞ்சம் பதறுகிறது.நன்கொடையாளர்களின் பணம் தரும் சொகுசில், ருசி கண்டுவிட்டவர்கள், காப்பகம் என்ற பெயரில் நடத்துபவை, பணம் காய்க்கும் தொழிற்சாலைகள்தான். சரி, குழந்தைகளையாவது மனசாட்சிப்படி நடத்துகிறார்களா என்றால் இல்லை.குழந்தைகளிடம் கடினமான வேலை வாங்குவது, காலாவதியான உணவுப் பொருட்களை வழங்குவது, ஆய்வுக்கு வருவது தெரிந்தால், மொட்டை மாடியிலும், தண்ணீர்த் தொட்டிக்குள்ளும் குழந்தைகளை மறைத்து வைப்பது என, நடப்பவை அனைத்தும் படுபாதகச் செயல்கள். வருமானமே குறி
கோவை மாவட்டத்தில், 45 குழந்தைகள் காப்பகங்கள் செயல்படுகின்றன. இங்கு பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள், பராமரிக்கப்படுகின்றனர்.மனிதாபிமான அடிப்படையில் நடத்தப்பட வேண்டிய இந்த காப்பகங்கள், 'ஸ்பான்சர்'கள் அதிகம் கிடைப்பதால், வருமானம் ஈட்டும் தொழிலாக கொழுத்துப்போய் இருக்கின்றன. இதன் நிர்வாகிகள், அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிக குழந்தைகளை காப்பகங்களில் வைத்து அவர்கள் வாயிலாக வருமானம் பார்த்து வருவதாக, சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.இதனைத் தடுக்க வேண்டிய மாவட்ட குழந்தைகள் நல அலுவலகமும், கண்டு கொள்வதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பெயர் வெளியிட விரும்பாத குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் ஒருவர் கூறியதாவது: ஒவ்வொரு காப்பகத்திலும், 20 குழந்தைகளுக்கு ஒரு கழிவறை, அருகில் பள்ளி, அந்த பள்ளியில் உளவியல் நிபுணர், 24 மணி நேரமும் வார்டன், காவலாளி இருக்க வேண்டும். பெரும்பாலான காப்பகங்கள், இந்த நடைமுறையைப் பின்பற்றுவது இல்லை. விதி மீறும் காப்பகங்கள்
அப்படி நடத்தப்பட்ட ஆய்வில், மாதம்பட்டி, சிங்காநல்லுார், வடவள்ளியில் இரு காப்பகங்கள் என, 4 காப்பகங்கள் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்ததை கண்டுபிடித்தோம். போலீசார் உதவியுடன் அங்கிருந்த குழந்தைகளை மீட்டு, மற்ற காப்பகங்களில் பத்திரமாக ஒப்படைத்தோம்.அதேபோல சில காப்பகங்களில், உணவுப் பொருட்களை ஆய்வு செய்தபோது, காலாவதியான உணவு பொருட்களை வைத்திருந்தனர். காலாவதியான பொருட்கள் எனத் தெரிந்தும், அதையே குழந்தைகளுக்கு உண்பதற்குக் கொடுத்து வந்துள்ளனர்.காரமடை, வெள்ளலுார், சோமனுார், வடவள்ளி, மாதம்பட்டி போன்ற இடங்களில், 6 காப்பகங்கள், விடுதி என பெயர் மாற்றி, குழந்தைகளைப் பராமரித்து வருகின்றன. குழந்தைகளுக்கு சமையல் வேலை
சில காப்பகங்களில், சமையல் செய்வதற்கு, அங்குள்ள குழந்தைகளையே வேலை வாங்குகின்றனர். வேறு கடினமான வேலைகளையும் செய்யச் சொல்கின்றனர். ஒரு காப்பகத்தில் குழந்தை எங்கிருந்து வந்தது என்ற விவரம் கூட இல்லை.கோவை மாவட்டத்தில் உள்ள, 45 காப்பகங்களில், 20க்கும் மேற்பட்ட காப்பகங்கள் ஆள் நடமாட்டம் இல்லாத, அருகில் குடியிருப்புகளே இல்லாத இடங்களில் உள்ளன. எங்களது குழு ஆய்வு செய்யச் செல்லும்போது, நாங்கள் வருவதை முன்னரே கண்டுபிடித்து விடுகிறார்கள். அப்போது குழந்தைகளை தண்ணீர் தொட்டியிலும், மொட்டை மாடியிலும் மறைத்து வைக்கிறார்கள்.குழந்தைகள் படும் கஷ்டங்களை, துளியும் காப்பகம் நடத்துபவர்கள் கண்டுகொள்வது இல்லை. குழந்தைகளுக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் முன், இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, காப்பகங்களை ஆய்வு செய்து, குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும். பொறுப்பற்ற அதிகாரிகளுக்கு, உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.
சிறிதும் பாதுகாப்பில்லை
'அளவுக்கு அதிகமான குழந்தைகளை தங்க வைப்பது, பெண் குழந்தைகள் மட்டும் தங்க வைக்க வேண்டிய இடங்களில், ஆண் குழந்தைகளையும் சேர்த்து தங்க வைப்பது, காப்பகங்களின் அருகில் வசிக்கும் ஏழைப் பெற்றோரிடம், குழந்தைகளை நல்லபடியாக பார்த்துக் கொள்வதாகக் கூறி, அந்தக் குழந்தைகளையும் வரவழைத்து தங்க வைப்பது போன்ற, விதிமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.காப்பகங்களை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள குழந்தைகள் நல அலுவலகத்துக்கு உள்ளது. 12க்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஆய்வு மேற்கொள்ள தனி வாகனம் இருந்தும், அவர்கள் எதையும் கண்டு கொள்வதில்லை' என்கிறார் அந்த அதிகாரி.