உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஸ்டீம் வாஷ் செய்யாமல் பயன்படுத்தப்படும் கன்டெய்னர்கள்; சரக்குகள் தரம் குறையும் ஆபத்து

ஸ்டீம் வாஷ் செய்யாமல் பயன்படுத்தப்படும் கன்டெய்னர்கள்; சரக்குகள் தரம் குறையும் ஆபத்து

இறக்குமதி பொருட்களை கொண்டு வரும் கன்டெய்னர்களை, முறையாக சுத்தம் செய்யாமல், ஏற்றுமதி சரக்கை ஏற்றி அனுப்பக்கூடாதென, எச்சரிக்கை விடுக்கப்பட்டுஉள்ளது.பல்வேறு நாடுகளில் இருந்து, தமிழகத்தில் இறக்குமதியாகும் பொருட்கள், துறைமுகங்கள் வழியாக, நேரடியாக அந்தந்த இடங்களில் இறக்கப்படுகிறது. பொருட்களை இறக்கி விட்டு, மீண்டும் துறைமுகம் சென்று, அங்குள்ள அங்கீகரிக்கப்பட்ட நிலையங்களில், 'ஸ்டீம் வாஷ்' எனும், நுண்ணுயிர் கிருமி அழிப்பு தொழில்நுட்பத்தில் துாய்மைப்படுத்த வேண்டும்.அதன்பின்னரே, துறைமுக சரக்கு முனையங்களில் உள்ள ஏற்றுமதி சரக்குகளை ஏற்ற, கன்டெய்னர்கள் அனுமதிக்கப்படுகின்றன. தமிழகத்துக்கு இறக்குமதி பொருட்களை கொண்டு வரும், கன்டெய்னர்கள், காலியாக திரும்பி செல்வதில்லை; டிரைவர்கள், சில நிறுவனங்களுடன் பேரம் பேசி, மிகக்குறைந்த கட்டணத்தில், ஏற்றுமதி சரக்கை துறைமுகம் வரை கொண்டு செல்கின்றன.இறக்குமதி பொருட்களை கொண்டுவரும் கன்டெய்னர்கள், சுத்தம் செய்யப்படாத நிலையில், ஏற்றுமதி சரக்குகளை கொண்டு செல்லும் போது, அதன் தரம் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. இதையறியாமல், சில ஏற்றுமதி நிறுவனங்கள், குறைந்த கட்டணம் என்று, விதிமுறைகளை மீறி சரக்கை அனுப்புவதாக, தொழில்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர். 'எக்ஸ்போர்ட் கன்டெய்னர்' லாரி உரிமையாளர்கள் கூறுகையில், 'இறக்குமதி சரக்கை இறக்கி செல்லும் கன்டெய்னர்களை, பாக்டீரியா உள்ளிட்ட கிருமிகளை அழிக்கும் வகையில், 'ஸ்டீம் வாஷ்' செய்ய வேண்டும். அதன்பின், ஏற்றுமதி சரக்கை ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்படும். இதனை கண்காணிக்க, துறைமுக அதிகாரிகளும் உள்ளனர்.

ஜவுளி ஏற்றுமதி

'மாறாக, இறக்குமதி சரக்கை கொண்டு வரும் கன்டெய்னர்கள், முறையாக சுத்தம் செய்யாமல், ஏற்றுமதி சரக்கை கையாளுவது விபரீத விளையாட்டு. கட்டுப்படுத்த வேண்டும்' என்றனர்.இதுகுறித்து அனைத்து ஜவுளி ஏற்றுமதி முகமைகள் கூட்டமைப்பு (அபாட்) தலைவர் இளங்கோவன் கூறுகையில்,''ஏற்றுமதி நிறுவனங்கள், இறக்குமதி சரக்கை எடுத்துவரும் கன்டெய்னர்களில், முறைகேடாக சரக்கை அனுப்பக்கூடாது. ''திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் அவ்வாறு அனுப்புவதில்லை. போகும் வழியில் பாதிப்பு ஏற்பட்டாலும், அதற்கு காப்பீடு பெற முடியாது. சுத்தம் செய்யாத கன்டெய்னர்களில், ஏற்றுமதி பொருட்களை அனுப்பினால், பொருட்களின் தரம் குறைந்ததாக, இழப்பீடு கோரவும் வாய்ப்புள்ளது. ''இந்திய நிறுவனங்கள் மீதும் நம்பிக்கை இழப்பு ஏற்படும். இதுதொடர்பாக, உரிய எச்சரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என்றார். -- - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

கண்ணா
ஜன 30, 2025 08:01

கோமியத்தை ஸ்ப்ரே பண்ணலாம்.. எல்லா கிருமிகளும் ஒழிஞ்சுரும்.


அப்பாவி
ஜன 30, 2025 07:59

இந்தியாவுல எல்லாம் மிகக் குறைந்த விலை. டீ கிளாசைகூட சரியா கழுவமாட்டாங்க. கழுவுனா 10 ரூவாய்க்கு டீ கட்டுப்படியாகாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை