உச்ச நீதிமன்ற நுழைவாயில் அருகே வெறும் கைகளில் கழிவுகள் அகற்றம்: டில்லி அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
உச்ச நீதிமன்ற நுழைவாயில் அருகே ஊழியர் ஒருவர் வெறும் கைகளால் கழிவுகளை அகற்றிய விவகாரத்தில் டில்லி பொதுப் பணித்துறைக்கு, 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது. 'மனித கழிவுகளை, மனிதர்களே அள்ளக்கூடாது' என, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே ஒரு வழக்கில் உத்தரவு பிறப்பித்திருந்தது. கழிவுகளை அகற்றும் வேலைகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் உட்பட ஏராளமான வழிகாட்டுதல் நெறிமுறைகளும் பிறப்பிக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த மாதம் உச்ச நீதிமன்ற நுழைவாயில் ஒன்றின் அருகே உள்ள பாதாள சாக்கடையை, டில்லி பொதுப் பணித் துறையைச் சேர்ந்த பணியாளர் ஒருவர் வெறும் கைகளில் சுத்தம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்நிலையில், இது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், என்.வி.அஞ்சார்யா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டில்லி அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விளக்கம் அளித்தார். எனினும், அவரது விளக்கம் ஏற்புடையதாக இல்லை எனக் கூறிய நீதிபதிகள், பொதுப்பணித்துறையின் நடவடிக்கை மிகப்பெரிய தவறு என்று கூறி, 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர். இந்த அபராதத் தொகையை, அடுத்த நான்கு வாரங்களுக்குள் தேசிய துப்புரவு பணியாளர்கள் ஆணையத்திடம் செலுத்த வேண்டும் எனவும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும் எனவும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். - டில்லி சிறப்பு நிருபர் -