காஞ்சிபுரம்: ஆன்மிக நகரமான காஞ்சிபுரத்திற்கு, விடுமுறை நாட்களில் அதிகளவில் பக்தர்கள் வரும் நிலையில், கோவில்களில் போதிய பாதுகாப்பு வசதிகள், முன்னேற்பாடுகள் இல்லாததால், பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி, தள்ளுமுள்ளு ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். பக்தர்கள் வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட திட்டங்களும் செயலற்று போனதால், வெளியூர் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இந்தியாவில் மிகவும் பழமையானதும், பாரம்பரியம் மிக்க நகரங்களில், காஞ்சிபுரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. 1,000 ஆண்டுகளை கடந்த கோவில்கள் இன்னமும் காஞ்சிபுரத்தில் வழிபாட்டில் உள்ளன.அதேபோல், 108 திவ்யதேசங்களில் 14 கோவில்கள், காஞ்சிபுரத்திலேயே உள்ளன. பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோவில், காமாட்சியம்மன் கோவில், வரதராஜ பெருமாள், கச்சபேஸ்வரர் கோவில்கள் என, பல கோவில்கள் உள்ளன.இதன் காரணமாகவே, தினமும் வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து, காஞ்சிபுரத்தில் உள்sள கோவில்களில் தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு தேவையான, அடிப்படை வசதிகள் கூட போதுமான அளவு இல்லாததால், பக்தர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.தள்ளுமுள்ளு
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, வெளியூர் பக்தர்கள் பலர், ஏகாம்பரநாதர் கோவிலுக்கு தரிசனத்திற்காக வந்தனர். கோவிலின் உட்பிரகாரத்தில், போதியளவில் கோவில் ஊழியர்கள் இல்லாததால், பக்தர்களை ஒழுங்குபடுத்த முடியாமல் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.மேலும், கோவிலில் முறையாக தரிசன டிக்கெட் விற்பனை செய்யாததால், பக்தர்கள் இலவச தரிசனத்தில் குவிந்தனர். இதனால், கடும் நெரிசல் ஏற்பட்டது.ஒழுங்குபடுத்த போதிய கோவில் ஊழியர்கள் இல்லாததால், வெளி மாநில பக்தர்கள், குடும்பத்துடன் வந்த உள்ளூர் பக்தர்கள் என, அனைத்து தரப்பினரும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். விடுமுறை நாட்களில் போதிய ஊழியர்கள், கோவில்களில் பணியாற்றுவது இல்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக உள்ளது.அதிக பக்தர்கள் வரும் விடுமுறை நாட்களில், கோவில் ஊழியர்கள் முழுமையாக பணியாற்றுவதை, ஹிந்து அறநிலையத் துறையினர் உறுதிப்படுத்த பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோவிலில் இதுபோன்ற சிரமங்களை தெரிவிக்க மொபைல்போன் எண், கட்டுப்பாட்டு அறை எண் உள்ளிட்ட முக்கிய தொலைபேசி எண்கள், பக்தர்கள் கண்ணில் படும்படி, முக்கிய கோவில்களில் இல்லை.காஞ்சிபுரத்தில் உள்ள முக்கிய கோவில்களில் வரிசையில் நின்று, அமைதியாகவும், அலைச்சலின்றியும் தரிசனம் செய்ய முடியவில்லை என, பக்தர்கள் புலம்புகின்றனர்.
ஆக்கிரமிப்பு
பக்தர்கள் வசதிக்காக, மத்திய அரசின், 'ஹெரிடே' திட்டத்தின் கீழ், 20 கோடி ரூபாயில் மழைநீர் வடிகால், தெருவிளக்கு, பொருட்கள் பாதுகாப்பு அறை உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.ஆனால், அவை முழுதும் மாநகராட்சி நிர்வாகத்தால் நாசமானது. அதேபோல், பிரசாத் திட்டத்தின் கீழ், 2019ல் 2 கோடி ரூபாய் செலவில் பக்தர்களுக்கு சில இடங்களில் நடைபாதைகள் அமைக்கப்பட்டன. ஆனால், அவை ஆக்கிரமிக்கப்பட்டும், வெளியூர் பக்தர்கள் பயன்படுத்த முடியாத நிலையிலும் உள்ளன.மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வகுத்தும், நிதி ஒதுக்கீடு செய்து கொடுத்த பின்னும், அவற்றை முறையாக பராமரிக்காததால், திட்டத்தின் நோக்கமே வீணாகிறது. அவ்வாறு, 'பிரசாத், ஹெரிடே' போன்ற திட்ட பணிகள் காஞ்சிபுரத்தில் வீணாகியுள்ளன.வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள், கைலாசநாதர் கோவில், வைகுண்ட பெருமாள் கோவில், காமாட்சியம்மன் கோவில், ஏகாம்பரநாதர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில்களுக்கு செல்ல விரும்புகின்றனர்.இவர்களுக்கு என, நிழற்குடையுடன் தனி நடைபாதை அமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாகவே திட்டமிடப்பட்டு வந்தது. ஆனால், அவை நடைமுறைக்கு வரவே இல்லை. முக்கிய கோவில்களில் பேட்டரி கார் வசதியும் இல்லை.ஏகாம்பரநாதர் கோவில் அருகே, மத்திய அரசு கட்டி கொடுத்த பொருட்கள் பாதுகாப்பு அறை, எட்டு ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. அதேபோல், இலவச கழிப்பறை கட்டண கழிப்பறையாக மாற்றப்பட்டுள்ளது.காமாட்சியம்மன் கோவிலை சுற்றி முளைத்துள்ள அனுமதியில்லாத விடுதிகளால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையிலேயே நிறுத்தும் கார்களால், அப்பகுதியில் வசிப்போர் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.பேட்டரி கார் வசதி
மாநகராட்சி நிர்வாகத்தால் சீர்படுத்த வேண்டிய இதுபோன்ற விஷயங்கள், பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளன. அனைத்து கோவில்களையும் ஒரே நாளில் தரிசிக்கும் வகையில், அனைத்து கோவில்களையும் இணைக்க பேட்டரி கார் வசதி கொண்டுவர வேண்டும் என்ற திட்டம் கிடப்பில் உள்ளது.பக்தர்களின் இதுபோன்ற வசதிகளை மேம்படுத்த வேண்டும் என, பல ஆண்டுகளாகவே கோரிக்கை இருந்து வருகிறது. ஆனால், ஒவ்வொரு முறையும் ஆட்சி மாறும்போதும், மாநகராட்சியின் அதிகாரிகள் மாறும்போதும், இந்த கோரிக்கைகள் கிடப்பில் போடப்படுகின்றன.
ஆட்டோக்களில் அடாவடி வசூல்
பக்தர்களுக்கு முக்கிய வசதியாக இருக்க வேண்டிய நகர பேருந்து சேவை இல்லாததால், ஒரே நாளில் பல கோவில்களுக்கு செல்ல முடிவதில்லை என, பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர். உதாரணமாக, பெருமாள் கோவிலை தரிசனம் செய்த பின், காமாட்சியம்மன் கோவிலுக்கு செல்ல விரும்பும் பக்தர்கள் ஆட்டோவை மட்டுமே நம்பியிருக்க வேண்டியுள்ளது.அதுவும், 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை அடாவடி கட்டணம் வசூலிக்கின்றனர். இவர்களிடம் வெளியூர் பக்தர்கள் மாட்டிக்கொண்டு அன்றாடம் அவதிப்படுகின்றனர். பக்தர்களின் வசதிக்கேற்ப, நகர பேருந்து இயக்கப்பட்டால், வெளியூர் பக்தர்கள் மட்டுமல்லாமல், உள்ளூர் வாசிகளும் பயனடைவர்.