புதுச்சேரி உட்பட, 7 தொகுதிகளை காங்கிரசுக்கு ஒதுக்க, தி.மு.க., திட்டமிட்டுள்ள நிலையில், முதல்வர் வெளிநாடு செல்லும் முன், தொகுதி உடன்பாடு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.தி.மு.க., கூட்டணியில், 15 தொகுதிகள் கேட்டு, தமிழக காங்கிரஸ் தரப்பில் பட்டியல் தரப்பட்டுள்ளது. புதுச்சேரி உட்பட, 6 தொகுதிகள் மட்டும் காங்கிரசுக்கு ஒதுக்கலாம் என ஏற்கனவே திட்டமிட்டிருந்த தி.மு.க., கொஞ்சம் இறங்கி வந்து, தற்போது 7 தொகுதிகளை ஒதுக்கும் முடிவுக்கு வந்துள்ளது. காங்கிரசிடம் இருந்து எடுக்கப்படும் மூன்று தொகுதிகளில் இரு தொகுதிகளை, மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வழங்கவும், தி.மு.க., நினைக்கிறது.மக்கள் நீதி மய்யமோ, மூன்று தொகுதிகளை தங்கள் கட்சி வழங்க வேண்டும் என எதிர்பார்க்கிறது. 'ஒரு சதவீத ஓட்டுக்களை வைத்துள்ள கம்யூனிஸ்ட்டுகள், விடுதலை சிறுத்தைகளுக்கு இரு தொகுதிகள் தரப்படும்போது, மூன்று சதவீத ஓட்டுக்கள் உள்ள நாங்கள், அந்த இயக்கங்களைக் காட்டிலும் பெரிய கட்சி தானே? அப்படியிருக்கும்போது, எங்களுக்கு மூன்று தருவதில் என்ன பிரச்னை' என, கமல் தரப்பில் கேட்கின்றனர்.இந்நிலையில், வரும் 28ம் தேதி, தொகுதி பங்கீடு தொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக் தலைமையில் அசோக் கெலட், பூபேஷ் பெகல், சல்மான் குர்ஷித் அடங்கிய குழுவினர், தி.மு.க., குழுவினரிடம் பேச்சு நடத்த உள்ளனர்.'முதல்வர் வெளிநாடு செல்வதற்கு முன்பாக, தொகுதி பங்கீட்டை முடிக்க, தி.மு.க., திட்டமிடுகிறது. காங்கிரஸ் விவகாரத்தில் அது நடக்குமா என்பது தெரியவில்லை' என்கிறது, அறிவாலய வட்டாரம்.- நமது நிருபர் -