உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  தி.மு.க.,வின் ஏட்டிக்கு போட்டி அரசியல்: சிக்கி தவிக்கும் கடலுார் பஸ் நிலையம்

 தி.மு.க.,வின் ஏட்டிக்கு போட்டி அரசியல்: சிக்கி தவிக்கும் கடலுார் பஸ் நிலையம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கடலுார்: கடலுாரில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது, அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில், புதிய பஸ் நிலையம் வந்து விடக்கூடாது என்பதற்காக, அந்த இடத்தில் பூங்கா அமைக்கும் பணியை தி.மு.க., அரசு அவசர அவசரமாக மேற்கொண்டுள்ளது. கடலுாரில், மக்கள் தொகையும், பஸ் போக்குவரத்தும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தற்போதைய பஸ் நிலையம் நெரிசலில் சிக்கி தவிக்கிறது. பஸ் நிலையத்தை விசாலமான வேறு இடத்திற்கு மாற்ற, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் முடிவு செய்து, கலெக்டர் அலுவலகம் அருகே, 20 ஏக்கரில், புதிய பஸ் நிலையம் அமைக்க, அப்போதைய அ.தி.மு.க., அமைச்சர் சம்பத் அடிக்கல் நாட்டினார். பஸ் நிலைய பணிகள் துவங்கியபோது, 2021 சட்டசபை தேர்தல் நடந்து, தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. இதையடுத்து, கடலுார் கலெக்டர் அலுவலகம் அருகில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டது. தி.மு.க., அமைச்சர் பன்னீர் செல்வம், தன் குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட எம்.புதுாரில் புதிய பஸ் நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டினார். ஆனால், நகரில் இருந்து 10 கி.மீ., தொலைவில் பஸ் நிலையம் அமைப்பதற்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியது. அ.தி.மு.க., உள்ளிட்ட எதிர்கட்சியினர் மட்டுமன்றி, தி.மு.க., கூட்டணியில் இருக்கும் வி.சி., கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க., போன்ற கட்சிகளும், நகர் நல சங்கங்களும் போர்க்கொடி உயர்த்தின. அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. இருந்தபோதும், சட்டசபை தேர்தலுக்கு முன், எம்.புதுாரில், புதிய பஸ் நிலையத்தை கொண்டு வந்தே தீர வேண்டும் என அமைச்சர் பன்னீர்செல்வம் தீவிரமாக களம் இறங்கி உள்ளார். எம்.புதுாரில், யாரும் பார்க்காத வகையில் தகரங்களால் தடுப்புகள் அமைத்து, கடலுார் புதிய பஸ் நிலையத்துக்கான கட்டுமான பணிகள் முடுக்கி விடப்பட்டு படுவேகமாக நடந்து வருகிறது. அதே நேரத்தில், வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்து விட்டால், ஏற்கனவே திட்டமிட்டபடி, கலெக்டர் அலுவலகம் அருகில் அடிக்கல் நாட்டிய 20 ஏக்கர் இடத்தில் பஸ் நிலையம் அமைந்து விடக் கூடாது என்பதற்காக, புது வித திட்டத்திலும், அமைச்சர் பன்னீர் செல்வம் அதிரடியாக இறங்கி உள்ளார். அதன்படி, அ.தி.மு.க., ஆட்சியின்போது முன்னாள் அமைச்சர் சம்பத், கலெக்டர் அலுவலகம் அருகே அடிக்கல் நாட்டிய இடத்தில், தற்போது 10 கோடி ரூபாயில், 'மருதம் பூங்கா' அமைக்க அவசர அவசரமாக பூமி பூஜை நடத்தப்பட்டுள்ளது. அதற்கான பணிகளும் உடனடியாக துவங்கப்பட்டுள்ளது. என்.எல்.சி., நிறுவனத்தின், 'சமூக பொறுப்புணர்வு நிதி' வாயிலாக, பணம் பெறப்பட்டு, பூங்கா அமைப்பதற்காக கிராவல் மண் கொட்டப்பட்டு வருகிறது. கடலுார் மக்களுக்கு அடிப்படை வசதிகள் தொடர்பாக எத்தனையோ பிரச்னைகள் இருக்க, 10 கோடி ரூபாயில் பூங்கா அமைப்பது தேவைதானா என அ.தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், கடலுார் நகரில் இருந்து 10 கி.மீ., தொலைவில் புதிய பஸ் நிலையத்தை அமைத்தால் எப்படி செல்வது என பொதுமக்களும் குமுறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்