உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அருந்ததியர் ஓட்டுகளை அள்ள தி.மு.க., வியூகம்

அருந்ததியர் ஓட்டுகளை அள்ள தி.மு.க., வியூகம்

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில், செங்குந்த முதலியார் சமுதாயம் பெரும்பான்மையாக உள்ளது. இவர்களுக்கு அடுத்தபடியாக, கொங்கு வேளாளர் மற்றும் சிறுபான்மையினர் ஓட்டுகளும் அதிகம் உள்ளன.இவர்களை தவிர, அருந்ததியர் சமுதாயத்திற்கு, 6 சதவீதம் ஓட்டுகளும், பிறமொழி பேசும் மாநிலங்களை சேர்ந்தோர் ஓட்டுகள், 3 சதவீதமும் உள்ளன.மேலும், பிராமணர், நாயுடு, நாயக்கர், செட்டியார், பிள்ளை, வன்னியர், முக்குலத்தோர், நாடார், தேவேந்திர குல வேளாளர் உள்ளிட்ட சமுதாயத்தினரின் ஓட்டுகள், 5 சதவீதம் வரை உள்ளன.இந்த ஓட்டுகளை மொத்தமாக அள்ள, தி.மு.க., தரப்பில் வியூகம் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மருத்துவம், இன்ஜினியரிங் படிப்பில் சேரும் அருந்ததியர் சமுதாய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, கருணாநிதி தலைமையிலான தி.மு.க., ஆட்சியில் வழங்கப்பட்ட 3 சதவீதம் உள்ஒதுக்கீடே காரணம் என்பதை, அச்சமுதாயத்தினர் வசிக்கும் பகுதிகளில் தனிக்குழு அமைத்து பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.'அருந்ததியர் சமுதாயத்தினர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்து வருகிறார். அவர் அப்படி பேசி வரும் நிலையில், அச்சமுதாயத்தினர் ஓட்டுகளை கவரும் வகையில், அருந்ததியருக்கான இட ஒதுக்கீடு வழங்கியதையும், மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததையும் புள்ளி விபரங்களோடு பிரசாரம் செய்ய, தி.மு.க.,வினர் திட்டமிட்டுள்ளனர்.

'மருத்துவம், பொறியியல் படிப்புகளில், அருந்ததியர் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது' என, அமைச்சர் மதிவேந்தன் கூறியுள்ளார். அவரது அறிக்கை:பட்டியலின மக்களில், மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த அருந்ததியர் சமூக மக்களுக்கான 3 சதவீத உள்ஒதுக்கீடு, தி.மு.க., ஆட்சியில் வழங்கப்பட்டது. இதன் வாயிலாக மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில், அருந்ததியர் மாணவர்களின் சேர்க்கை உயர்ந்துள்ளது.கடந்த 2018 - 1-9ம் ஆண்டில், எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கையில், மொத்தம் உள்ள 3,600 இடங்களில், 107 அருந்ததியர் மாணவர்கள் சேர்ந்தனர்.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், 2023 - 2024ம் ஆண்டில், எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான மொத்த இடங்கள் 6,553 ஆக உயர்த்தப்பட்டன. இதில், 193 அருந்ததியர் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். பல் மருத்துவ படிப்பில், 2018 - 19ல் அருந்ததியர் மாணவர்கள் சேர்க்கை 16 ஆக இருந்த நிலையில், 2023 - 24ல், 54 ஆக உயர்ந்துஉள்ளது. பொறியியல் படிப்பை பொறுத்தவரை, 2009 - 10ம் கல்வியாண்டில், 1,193 அருந்ததியர் மாணவர்கள் சேர்ந்தனர். இது, 2023 - 24ல் 3,944 ஆக அதிகரித்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில், 2016 - 17ம் கல்வியாண்டில், பொறியியல் படிப்புகளில், அருந்ததியர் மாணவர்களின் சேர்க்கை 8.7 சதவீதமாக இருந்தது. தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், 2023 - 2024ல் இது 16 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும், இதர பட்டியலின மக்களும், 84சதவீதம் பயனடைந்து வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.இது போன்ற நிறைய புள்ளி விபரங்களை அரசு தரப்பில் வெளியிட உள்ளனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ