உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மருந்தின் பிராண்ட் பெயர் எழுத டாக்டர்களுக்கு தடை!: ஜெனரிக் மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க உத்தரவு

மருந்தின் பிராண்ட் பெயர் எழுத டாக்டர்களுக்கு தடை!: ஜெனரிக் மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க உத்தரவு

புதுடில்லி: 'டாக்டர்கள் மருந்துகளை பரிந்துரைக்கும் போது, 'பிராண்ட்' பெயர்களை குறிப்பிடாமல், 'ஜெனரிக்' மருந்துகளின் பெயர்களை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.நாம் அன்றாடம் பயன்படுத்தும் மருந்துகளில், 'பிராண்டட்' மருந்துகள், 'ஜெனரிக்' மருந்துகள் என இரு வகைகள் உள்ளன. இந்த, 'பிராண்டட்' வகை மருந்துகள், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பெரு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்படுகின்றன.அதே, பிராண்டட் மருந்துகளில் உள்ள மருத்துவ மூலப்பொருட்களை உடைய மருந்துகள், பல்வேறு சிறு நிறுவனங்களால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு, வேறு பெயர்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இவை, ஜெனரிக் மருந்துகள் என்று அழைக்கப்படுகின்றன. மருத்துவ செலவுஉதாரணத்திற்கு, 'பாராசிட்டமால்' என்பது, பிராண்ட் பெயர் அல்ல. அது, மருத்துவ மூலப்பொருளை குறிக்கும் பொதுவான பெயர். ஆனால், 'டோலோ 650, குரோசின், மெடாசின்' போன்றவை, பிராண்ட்களின் பெயர்கள். பிராண்டட் மருந்துகளை விட, ஜெனரிக் மருந்துகள் பன்மடங்கு விலை குறைவாக விற்கப்படுகின்றன. ஒருசில உடல்நலக் கோளாறுகளுக்கு, குறிப்பாக புற்றுநோய் போன்ற தீவிரமான நோய்களுக்கு சந்தையில் விற்கப்படும் மருந்துகள் அதிக விலை உடையவை.அதுவே, ஜெனரிக் மருந்தாக வாங்கினால், அவை குறைவான விலையில் கிடைக்கின்றன. இதனால், ஜெனரிக் மருந்துகளை மக்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. மேலும், பல கோடி முதலீடு செய்யும் மருத்துவ பெரு நிறுவனங்கள், தங்கள் பிராண்ட்களை சந்தைப்படுத்த அதிரடியான மார்க்கெட்டிங் உத்திகளை செயல்படுத்துகின்றன. மருந்து நிறுவனங்களின் நெறிமுறையற்ற சந்தைப்படுத்துதல் நடைமுறைகளை ஒழுங்குபடுத்தக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில், 'டாக்டர்களுக்கு மருந்து நிறுவனங்கள் லஞ்சம் கொடுத்து, அதிகப்படியான மருந்துகளை எழுத அழுத்தம் கொடுக்கின்றன. அதிக விலை உடைய மருந்து பிராண்ட்களை பரிந்துரைக்கவும் வலியுறுத்துகின்றன. இது சாதாரண மக்களுக்கு மருத்துவ செலவுகளை அதிகரிக்கின்றன. 'அதுமட்டுமின்றி அவர்களுக்கு எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. எனவே, மருந்து நிறுவனங்களில் சந்தைப்படுத்துதல் நடைமுறைகளை ஒழுங்குபடுத்த வேண்டும்' என, குறிப்பிடப்பட்டு இருந்தது.இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத், சஞ்சய் கரோல் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.மனுதாரர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், 'பிரபல காய்ச்சல் மருந்தான டோலோ 650ஐ, டாக்டர்களுக்கு இலவசமாக வினியோகிக்க, மருந்து தயாரிப்பு நிறுவனம் 1,000 கோடி ரூபாய் செலவிட்டதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது' என, குறிப்பிட்டார். ஒத்தி வைப்புஇதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:ஜெனரிக் மருந்துகளை டாக்டர்கள் பரிந்துரைக்க ஓர் சட்டப்பூர்வ ஆணை அவசியம். அது இருந்தால், டாக்டர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் மருந்து நிறுவனங்கள் தொடர்பான பிரச்னை தீர்க்கப்படும். அது மட்டுமின்றி, மருந்துகளின் பிராண்ட் பெயர்களை குறிப்பிடாமல், ஜெனரிக் மருந்துகளின் பெயர்களை மட்டுமே டாக்டர்கள் பரிந்துரைக்க வேண்டும்.ராஜஸ்தானில், ஒவ்வொரு டாக்டரும், ஜெனரிக் மருந்தை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும் என்ற நிர்வாக உத்தரவு அமலில் உள்ளது. அவர்கள் எந்த நிறுவனத்தின் பெயர்களையும் பரிந்துரைக்க முடியாது. இந்த உத்தரவு நாடு முழுதும் செயல்படுத்தப்பட்டால், மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். இந்த விவகாரத்தில் மேலும் பல கருத்துகள் கேட்கப்பட உள்ளதால், விசாரணை ஜூலை மாதத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Kulandai kannan
மே 03, 2025 22:12

இதிலெல்லாம் தலையிட வேண்டியதில்லை. இனி மருந்து கம்பெனிகள், மருந்துக் கடைகளுக்கு லஞ்சம் தராது என்பது என்ன நிச்சயம்?


அப்பாவி
மே 03, 2025 18:41

நோயாளிகளுக்கு ஜெனரிக்கா சுகர் டேப்லெட், பிரஷர் டேப்லெட், வயிற்றுப் போக்கு டேப்லெட்னு சீட்டில் எழுதிக்குடுத்தலாம். ஆயுசு இருக்கறவன் பொழச்சுப்பான்.


ஆரூர் ரங்
மே 03, 2025 15:29

ஒரு மருந்து சீட்டில் ஆறு ஏழு மருந்துகள் எழுதப்பட்டிருந்தால் ஒன்றிரண்டு தவிர மற்றவை பெரும்பாலும் அவசியமற்றவையே. காசுக்காக தேவையற்ற மருந்துகளை பரிந்துரைக்கும் டாக்டர்களை தேசிய மருத்துவக் கமிஷன் தண்டிக்காமல் விட்டால் நோயாளிகள் பாடு திண்டாட்டம்தான். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கோடிகளைக் கொட்டி மருத்துவம் படித்து வெளிவரும் டாக்டர்கள் போட்ட பணத்தை வட்டியுடன் சம்பாதிக்கதான் நினைப்பார்கள். கல்வியும் மருத்துவமும் விலைக்கு விற்கப்படும் நாடு உருப்படாது.


பாமரன்
மே 03, 2025 19:27

ராங்கிடு இஸ் ரைட் திஸ் டைம்


Chandra Bose
மே 03, 2025 09:44

பல மருந்துகளில் மூன்றுக்கும் மேற்பட்ட மருந்துகள் காம்பினேசன் கொண்டவை உண்டு, அப்படிப்பட்ட தருணங்களில் ஜெனிரிக் பெயர்களை எழுதுவது சாத்தியமில்லாதது அதுவே சில நேரங்களில் நோயாளிக்கே எமனாக முடியும் வாய்ப்புகள் உண்டு. நீதிபதிகள் மருத்துவ நிபுணர்களிடம் கேட்டு தெரிந்து தீர்ப்பளிப்பது நலம்.


ஆரூர் ரங்
மே 03, 2025 15:21

காம்பினேஷன் மருந்துகளில் அடங்கியுள்ள மருந்துகள் தனித்தனியாகவும் கிடைக்கின்றன. ஆன்லைன் மற்றும் மக்கள் மருந்தகங்களில் மிகப்பெரும்பாலான கூட்டு( காம்பினேஷன்) மருந்துகளும் ஒன்றாகவும் தனித்தனியாகவும் கிடைக்கின்றன. பெரும்பாலான கூட்டு மருந்துகள் நியாயமற்ற ( IRRATIONAL)காம்பினேஷன்கள்தான். எப்பாடுபட்டாவது இந்த மருந்துக்கம்பெனி டாக்டர் கூட்டு மாஃபியாவை வேரோடு அழிக்கவேண்டும்.


பாமரன்
மே 03, 2025 08:52

ஒரு மாநிலத்தில் மட்டுமே அமலில் இருப்பதாக நிதிபதிகளே சொல்லிட்டு வழக்கை ஜூலைக்கு ஒத்தி வச்சதா தானே நியூஸ்... தலைப்பு ஏன் ஏதோ நாட்டுக்கு நல்லது நடந்த மாதிரி போட்ருக்காய்ங்க...??? ஒரு கவலையும் வாணாம்... கார்ப்பரேட் கம்பெனிக்கு ஒரு ப்ராப்ளம்னா ராத்திரியோட ராத்திரியா அவசர சட்டம் போட்ரலாம்... மக்களுக்கு நல்லதுன்னா நடக்க விட்ருவோமா என்ன...???


அப்பாவி
மே 03, 2025 08:27

காமெடியான தீர்ப்பு. டாக்டர்களோ, மருந்து கம்பெனிகளோ லஞ்சம் வாங்கும்போதோ குடுக்கும்போதோ புடிச்சி தண்டனை குடுக்க துப்பில்லை. பிஸ்கிரிப்ஷன் இல்லாமல் கேட்டாலே மருந்துகளை அள்ளி விக்கிற மருந்து கடைகள் புற்றீசல் மாதிரி பெருகி விட்டன. அதுக்கு போட்டியா மக்கள் மருந்தகங்களும் கெளம்பிட்டு. அங்கே மட்டும் மெட்ஃபார்மின்னு பொதுவா விக்கிறாங்களா? ஏதோ ஒரு ப்ராண்டு தானே வெக்கிறாங்க? உச்சநீதி மன்ற நீதிபதிகள் எப்போ மருத்துவ , மருந்து நிபுணர்கள் ஆனார்களோ? எம்.பி.பி.எஸ், எம்.டி படிச்சிட்டு ஜட்ஜ் ஆயிருப்பாங்களோ?


கூறமுதலி
மே 03, 2025 07:57

அப்போ ஜெனரிக் மெடிசன் எழுதிக் கொடுத்தா நோயாளி என்ன பண்ணுவாரு ஸ்ட்ரெயிட்டா மெடிக்கல் ஷாப்புக்கு போவாரு மெடிக்கல் ஷாப்ல அந்த ஜெனரிக் மெடிசன்ல எந்த பிராண்ட் இருக்கோ அதுதான் வாங்குவாரு அப்போ என்ன ஆகும் இந்த மெடிக்கல் ஷாப்புகாரன் என்ன வியாபாரம் பண்றானோ அந்த மெடிசின் தான் வாங்குவீங்க அப்போ இதுல இருந்து என்ன ப்ரோ ஆகும் மெடிக்கல் ஷாப் காரன்கிட்ட இந்த பணம் முதல பெரிய பெரிய பணம் முதல கம்பெனி எல்லாம் வியாபாரம் வைப்பான் அவ்வளவு பெரிய டாக்டர் அவரு சொல்றதை கேட்க கூடாது மெடிக்கல் ஷாப் காரன் சொல்றத கேக்கணும் என்னய்யா உங்க நியாயம் நீங்க எல்லாம் படிச்சு வந்துட்டீங்களா உங்களுக்கெல்லாம் ஜட்ஜ் ஆக இருக்கிறது தகுதி இதுக்கு பதில் மெடிக்கல் கவுன்சில் அவங்க பரிந்துரை பண்ணட்டும் அந்த மெடிசின் டாக்டர் பரிந்துரை பண்ணட்டும் என்ன நான் சொல்றது புரிஞ்சவன் பிஸ்தா


பாமரன்
மே 03, 2025 08:58

டாக்டர் தானே எழுதி குடுக்க போறார்... அப்புறம் என்ன. இதுவரை மானத்தை மறைக்க ரேமண்ட் ப்ராண்ட் காட்டன் சட்டை போடுன்னு எழுதினதுக்கு பதிலாக காட்டன் சட்டை போடுன்னு எழுத சொல்றாங்க... அவ்ளோதான்... அடஜீஸ் பண்ணிட்டு மக்களை முழு அளவில் கொள்ளையடிக்கும் டாக்டர்கள் மற்றும் நஷ்டமே டிக்ளேர் பண்ணியிறாத மருந்து கார்பொரேட்களுக்கு தான் கோபம் வரனும்... மக்களுக்கு நல்லதுதான்... எழுதி கொடுத்ததை எடுத்து குடுக்க பார்மஸி படிச்ச வர்களுக்கு உண்மையான வேலைவாய்ப்பு பெருகும்


கூறமுதலீ
மே 03, 2025 07:56

அப்போ ஜெனரிக் மெடிசன் எழுதிக் கொடுத்தா நோயாளி என்ன பண்ணுவாரு ஸ்ட்ரெயிட்டா மெடிக்கல் ஷாப்புக்கு போவாரு மெடிக்கல் ஷாப்ல அந்த ஜெனரிக் மெடிசன்ல எந்த பிராண்ட் இருக்கோ அதுதான் வாங்குவாரு அப்போ என்ன ஆகும் இந்த மெடிக்கல் ஷாப்புகாரன் என்ன வியாபாரம் பண்றானோ அந்த மெடிசின் தான் வாங்குவீங்க அப்போ இதுல இருந்து என்ன ப்ரோ ஆகும் மெடிக்கல் ஷாப் காரன்கிட்ட இந்த பணம் முதல பெரிய பெரிய பணம் முதல கம்பெனி எல்லாம் வியாபாரம் வைப்பான் அவ்வளவு பெரிய டாக்டர் அவரு சொல்றதை கேட்க கூடாது மெடிக்கல் கவுன்சில் அவங்க பரிந்துரை பண்ணட்டும் அந்த மெடிசின் டாக்டர் பரிந்துரை பண்ணட்டும் என்ன நான் சொல்றது புரிஞ்சவன் பிஸ்தா


முக்கிய வீடியோ