சென்னை: வீடுகளுக்கு நேரடி குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல் ஜீவன் திட்ட இலக்கை முடிப்பதற்கு, மத்திய அரசிடம் 1,700 கோடி ரூபாய் எதிர்பார்த்து, தமிழக குடிநீர் வாரியம் காத்திருக்கிறது.தரமற்ற குடிநீரை பயன்படுத்துவதால், உடல் உறுப்புகள் பாதிப்பு பிரச்னைகளுக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர். எனவே, நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் தினமும் 55 லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் ஒரு கோடி குடியிருப்புகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், கடந்த ஏப்., மாதத்திற்குள் வழங்க திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்கான பணிகளை, தமிழக குடிநீர் வடிகால் வாரியம் மேற்கொண்டது. தற்போது வரை, 80 சதவீத கிராமப்புற குடியிருப்புகளுக்கு, குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.இத்திட்டத்திற்கு மத்திய அரசு, 4,900 கோடி ரூபாய் வழங்குவதாக உறுதியளித்து உள்ளது. அதில், 1,700 கோடி ரூபாய், மத்திய அரசிடம் இருந்து வர வேண்டி உள்ளது. கடந்த ஆண்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில், புயல் மற்றும் அதி கனமழை காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதற்கான சீரமைப்பு பணிகளுக்கு, அதிக நிதியை தமிழக அரசு செலவிட்டு உள்ளது. இதனால், நிதி பற்றாக்குறை காரணமாக, ஜல் ஜீவன் திட்ட இலக்கை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இத்திட்டத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவை தொகை, 1,700 கோடி ரூபாயை பெற, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நிலுவை தொகையை வழங்குவதுடன் பணிகளை முடிக்க, 2028 வரை கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது.இதுகுறித்து, தமிழக குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: மற்ற மாநிலங்களை காட்டிலும், ஜல் ஜீவன் திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. குழாய் இணைப்புகள் வழங்கப்பட்ட அனைத்து வீடுகளுக்கும், குடிநீர் வினியோகம் நடந்து வருகிறது. நிதி பற்றாக்குறையால் பணிகள் தாமதமாகின்றன. மத்திய அரசு நிதி வழங்கினால், நிலுவையில் உள்ள கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை முடித்து, ஜல் ஜீவன் திட்டத்திற்கான நிரந்தர குடிநீர் ஆதாரங்களை உருவாக்க முடியும். அப்போது தான், தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் வழங்க முடியும். இதற்காகவே, 2028 வரை கால அவகாசம் கோரப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.