மத்தியில், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ள பா.ஜ., பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள கடும் சவால்களை சந்திக்குமா அல்லது அவற்றை முறியடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், 240 இடங்களில் பா.ஜ., வெற்றி பெற்றது. பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவை என்ற நிலையில் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தள கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.கடந்த, 10 ஆண்டுகளில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்திய பா.ஜ., பல முக்கியமான பொருளாதார சீர்திருத்த திட்டங்களை செயல்படுத்தியது. ஆதரவு தேவை
தற்போது கூட்டணி கட்சிகளின் தயவு தேவைப்படும் நிலையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் எந்த அளவில் மேற்கொள்ளப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.இதற்கு கூட்டணி கட்சிகள் ஒத்துழைப்பு தருமா என்ற கேள்வியும் முன் வைக்கப்படுகிறது.பொதுவாக பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும் மசோதாக்களை நிறைவேற்ற, லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு தேவை.ஆனாலும், கடந்த 40 ஆண்டுகளில் கூட்டணி ஆட்சி இருந்த காலங்களில், பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதை வரலாற்று சான்றுகள் எடுத்துரைக்கின்றன. பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையின் ஒரு அங்கமாக தாராளமயமாக்கல் கொள்கை, 1990களில் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. கூட்டணியில் இருந்த ஜனதா தள கட்சி அதற்கு ஆதரவு வழங்கியது. கடந்த 1991 முதல் 1996 வரையிலான முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் ஏகபோக வர்த்தக நடைமுறைகளை கட்டுப்படுத்தும் சட்டத்தின் கீழ் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அடுத்ததாக, 1996 முதல் 1998 வரையிலான காலக்கட்டத்தில் நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம் பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். அப்போது, காப்பீட்டுத் துறையை தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் முயற்சியில், வெளிநாட்டு நிறுவனங்கள் 26 சதவீதம் வரை பங்குகளை வாங்க அனுமதி அளிக்கப்பட்ட விவகாரம் கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பை சந்தித்தது.கடந்த, 1999 - 2004 வரையிலான பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில், 13 கட்சிகள் அங்கம் வகித்தன. இந்த அரசால் கொண்டுவரப்பட்ட தங்க நாற்கர திட்டத்தால் நாடு முழுதும் பல்வேறு நெடுஞ்சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.அதைத் தொடர்ந்து, 2004 - -2014 வரையில் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடந்தது. இறக்குமதி வரி குறைப்பு
மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில், இறக்குமதி வரி குறைப்பு தொடர்ந்தது; தொலைத்தொடர்பு துறையில் 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாகவும், விமானப் போக்குவரத்து துறையில் 26லிருந்து 49 சதவீதமாகவும் அந்நிய நேரடி முதலீடுக்கான நோக்கம் விரிவாக்கப்பட்டது. சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்ததாக, 2019ல் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த பா.ஜ., அன்னிய நேரடி முதலீட்டை ஈர்க்க ராணுவத் துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது. போதிய பெரும்பான்மை இருந்தும் பா.ஜ.,வின் பொருளாதார சீர்திருத்தங்கள் அனைத்து தரப்பிலும் கடும் எதிர்ப்பை சந்தித்தன.தொழில்துறை பாதுகாப்புச் சட்டம், சமூக பாதுகாப்பு சட்டம் உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்பட்டாலும், இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளன. விவசாயிகளுக்கான முக்கிய மூன்று சட்டங்களுக்கு நாடு முழுதும் பலத்த எதிர்ப்பு எழுந்தது.அதேசமயம் கொரோனா பரவல் காலக்கட்டத்தில் சவாலான பல பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.தற்போது, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் ஆட்சி அமைத்திருக்கும் பா.ஜ., வளர்ந்து வரும் உலகளாவிய மற்றும் உள்நாட்டு சவால்களுக்கு மத்தியில், அடுத்த தலைமுறைக்கான பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும்.வரும் காலங்களில் இது சாத்தியமாக, கூட்டணி கட்சிகளின் ஆதரவு அவசியம் என்பதால், பா.ஜ.,வின் நடவடிக்கைகள் அரசியல் ஆர்வலர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றன.- நமது சிறப்பு நிருபர் -