காட்டுத்தீயை கட்டுப்படுத்த ஆளில்லா தீயணைப்பு வாகனம்: தெர்மல் ட்ரோன் உருவாக்கும் வனத்துறை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: மனிதர்கள் எளிதில் செல்ல முடியாத இடங்களில் ஏற்படும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த, ஆளில்லா தீயணைப்பு வாகனம் மற்றும் தெர்மல் ட்ரோன்களை உருவாக்கும் பணிகளை, தமிழக வனத்துறை துவக்கி உள்ளது.தமிழகத்தில் பொதுவாக, பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான கால கட்டத்தில், பனிக்காலம் முடிந்து கோடை துவங்கும் சமயத்தில், வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படுகிறது. சில ஆண்டுகளாக, காட்டுத்தீ சம்பவங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது.உதாரணமாக, ஒரு மாதத்தில், அதிகபட்ச சம்பவங்களின் எண்ணிக்கை, 200 என்பதை கடந்து, 500 முதல், 1,000 வரை அதிகரிக்கிறது. அடர்ந்த வனப்பகுதிகளில், மனிதர்கள் எளிதில் செல்ல முடியாத இடங்களில், காட்டுத்தீ ஏற்படும் நிலையில், அதை கட்டுப்படுத்துவது வனத்துறைக்கு சவாலாக உள்ளது.இதுபோன்ற நேரங்களில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் விமானப்படையின் உதவியை வனத்துறை நாடுகிறது. இருப்பினும், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக, புதிய வழிமுறையை வனத்துறை கண்டுபிடித்துள்ளது. அதன்படி, அதிநவீன ட்ரோன்கள், ஆளில்லா தீயணைப்பு வாகனங்களை உருவாக்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, வனத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில் காட்டுத்தீ சம்பவங்களின் எண்ணிக்கை, ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது. அடர்ந்த வனப்பகுதிகளின் நடுவில் ஏற்படும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த, மனிதர்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதற்கு தீர்வாக, ஆளில்லாத சிறிய விமானம் போன்ற, 'இன்ப்ராரெட் தெர்மல் ட்ரோன்'கள், ஆளில்லாமல் தரையில் செல்லும் தீயணைப்பு வாகனம் போன்றவற்றை பயன்படுத்த முடிவு செய்து இருக்கிறோம்.தமிழக கள சூழலுக்கு ஏற்றபடி, இந்த வாகனங்களை உருவாக்கி வழங்குவதற்கான நிறுவனங்களை, தேர்வு செய்யும் பணி துவக்கப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில், நிறுவன தேர்வு முடிந்து, ட்ரோன் மற்றும் வாகனங்கள், விரைவில் பயன்பாட்டுக்கு வரும். இதனால், ஆட்கள் செல்ல முடியாத இடங்களில், காட்டுத்தீ ஏற்பட்டால், அதிநவீன கருவிகளை பயன்படுத்தி விரைவாக கட்டுப்படுத்தலாம். காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் போது, உயிரிழப்புகளை குறைக்கவும் வாய்ப்பு ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.