- நிருபர் குழு -
பல்லடத்தில் நடந்த தி.மு.க. மாநாட்டுக்கு அரசு பஸ்கள் திருப்பி விடப்பட்டதால் பொள்ளாச்சி, உடுமலை பஸ் ஸ்டாண்டில் பயணியர் பல மணி நேரம் காத்திருந்து அதிருப்தியடைந்தனர்.பல்லடத்தில் தி.மு.க. மகளிரணி மாநாடு நேற்று நடந்தது. இதற்காக, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருந்து, கட்சியினர், பொதுமக்கள் அழைத்து செல்லப்பட்டனர். பெண்களுக்கு, சுடிதார், புடவை என தி.மு.க. கட்சி நிற உடையில் அழைத்துச் சென்றனர். இதற்காக, பெரும்பாலும் அரசு பஸ்களே பயன்படுத்தப்பட்டன. கிராமப்புறங்கள், புறநகர் செல்லும் பஸ்கள் திருப்பி விடப்பட்டன. இதனால், பஸ் ஸ்டாண்டில் பயணியர் பஸ் இல்லாமல், பல மணி நேரம் காத்திருந்து அதிருப்தியடைந்தனர்.காத்திருக்கும் நிலை
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ஆளுங்கட்சியாக தி.மு.க. இருப்பதால், மாநாடு, முதல்வர் பங்கேற்கும் விழா என்றால், அரசு பஸ்களை பயன்படுத்துவது வழக்கமாகிவிட்டது.நேற்று நடந்த மாநாட்டுக்கு அரசு பஸ்களில் கட்சி கொடியை கட்டி அழைத்து சென்றதால், பலர் பஸ்கள் கிடைக்காமல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.இதனால், பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. பஸ் வருகைக்காக மக்கள் பல மணி நேரம் காத்திருந்தனர். இதுபோன்று பொதுமக்களுக்கு நெருக்கடி தரும் வகையில் செயல்படாமல், அரசு பஸ்களை கட்சி நிகழ்ச்சிக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.நகரிலும் நெரிசல்
கோவை, திருப்பூர் மாவட்டங்களில், தமிழக முதல்வர், அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடந்தால், பொள்ளாச்சியில் உள்ள போலீசாருக்கு அங்கு பணி ஒதுக்கப்படுகிறது. இதனால், இங்கு விரல் விட்டு எண்ணும் அளவிலேயே போலீசார் பணியில் இருப்பதால், நெருக்கடி ஏற்படுகிறது. இந்நிலையில், நேற்று போக்குவரத்து போலீசார் இல்லாத நிலையில், நெரிசல் அதிகரித்து அவசர சிகிச்சைக்கு கூட வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.உடுமலை பல்லடத்தில் நடந்த தி.மு.க., மகளிர் மாநாட்டுக்கு, உடுமலை ஒன்றியம், கிளைக்கழகம் வாரியாக அனைத்து பகுதிகளிலிருந்தும், பெண்கள் அழைத்துச்செல்லப்பட்டனர். இதற்காக, நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு இயக்கப்பட்ட, அரசு மற்றும் தனியார் பஸ்கள் மாநாட்டிற்கு செல்லும் பெண்களை அழைத்துச்செல்ல அனுப்பி வைக்கப்பட்டன. இதனால், உடுமலையிலிருந்து கோவை, திருப்பூர் , பழநி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல குறைந்த பஸ்களே இயக்கப்பட்டதால், பல மணி நேரம் பயணியர் காத்திருந்தனர். வந்த ஒரு சில பஸ்களிலும், நெரிசலுடன் பயணிக்கும் நிலை ஏற்பட்டது.அதே போல், கிராமங்களுக்கு இயக்கப்பட்ட அரசு, தனியார் பஸ்களும் திடீரென நிறுத்தப்பட்டதால், கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தொடர் விடுமுறை, புத்தாண்டு காரணமாக, வெளியூருக்கு செல்ல ஆயிரக்கணக்கான மக்கள், உடுமலை பஸ் ஸ்டாண்ட்டில் நேற்று காலை முதல் காத்திருந்தனர்.நீலகிரியிலும் இதே நிலை!
நீலகிரியில் அரசு பஸ்கள், பல்லடம் தி.மு.க., மாநாட்டிற்காக அனுப்பப்பட்டதால், உள்ளூர் பயணிகள் 2:00 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து, அவதிக்குள்ளாகினர். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற, தி.மு.க., மேற்கு மண்டல மகளிர் அணி மாநாட்டில் மகளிரை அதிகளவில் பங்கெடுத்து வைப்பதற்காக, நேற்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பஸ்கள் திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.நீலகிரியில் திமுக கட்சியினர் மகளிரை அழைத்து செல்ல அதிக தனியார் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதும், அரசு பஸ்களும் அனுப்பப்பட்டதால் காலை நேரத்தில், பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். குறிப்பாக, கோத்தகிரியில் இருந்து பஸ்கள் இயக்காததால், காலை 8:30 மணியிலிருந்து 10: 40 மணி வரை எடப்பள்ளி உட்பட சுற்றுப்புறப் பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். அத்தியாவசிய பணிகளுக்கு செல்வோர் இவ்வழியாக வந்த வாகனங்களில் டிரிப் கேட்டு சென்றனர்.கிராம மக்கள் அவதி
இதே போல உட்லண்ட்ஸ் உட்பட பெரும்பாலான கிராமங்களுக்கு அரசு பஸ்கள் இல்லாததால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகினர். குன்னுார் பஸ் ஸ்டாண்டிலும் நீண்ட நேரம் பயணிகள் காத்திருந்தனர். குன்னூர் டவுன் பஸ் உட்லண்ட்ஸ் பகுதிக்கு மாற்றி இயக்கப்பட்டது. இது குறித்து, குன்னூர் மக்கள் பாதுகாப்பு சங்க தலைவர் மனோகரன் கூறுகையில், ''ஏற்கனவே நீலகிரி மாவட்டத்தில் 165 பஸ்கள் மட்டுமே இயக்கப்படும் நிலையில் 30-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள், தமிழக முதல்வரின் கட்சி நிகழ்ச்சிக்காக கட்சியினரை அழைத்து செல்ல கொண்டு செல்லப்பட்டுள்ளது.இது குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்ட போது, காலை 10:30 மணிக்கு இயக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர். மக்களின் நலனை காக்க வேண்டிய அரசு, மக்களுக்காக இயக்கப்படும் அரசு பஸ்களை கட்சியினரின் பயன்பாட்டிற்காக மாற்றியது அதிருப்தியை அளிக்கிறது,'' என்றார்.