--நமது சிறப்பு நிருபர்-மின் இணைப்பு வழங்குவதில் ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்க, மின் மீட்டரை நுகர்வோரே வாங்கித் தரலாம் என்று அறிவித்த தமிழக அரசு, அதற்குரிய குறிப்புகளை அனுப்பாததால், தாமதம் மேலும் தொடர்கிறது.தமிழகத்தில்தினமும் பல ஆயிரம் பேர், புதிய மின் இணைப்புக்காகவிண்ணப்பித்து வருகின்றனர். விண்ணப்பித்த ஏழு நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்க வேண்டும்; ஆனால், தமிழகத்தில் இப்போது விண்ணப்பித்து பல மாதங்கள் ஆகியும் பலருக்கு மின்இணைப்பு தரப்படவில்லை. மின்சார மீட்டர் பற்றாக்குறையே இதற்கு காரணமாக கூறப்பட்டு வருகிறது.அதேபோல, ஏராளமான மின்சார மீட்டர்கள் பழுதாகி இருக்கும் நிலையில், அவற்றை மாற்றிக் கொடுப்பதும் தாமதமாகி வருகிறது. உண்மையில், விநியோக விதிகள் 7(3)ன்படி, மின் இணைப்புக்கான மின்சார மீட்டர்களை நுகர்வோரே வாங்கித் தரலாம்; அவர்களால் வாங்கித்தர இயலாதபட்சத்தில், மின் வாரியம் வாங்கிப் பொருத்த வேண்டும்.ஆனால், மீட்டர்களை நுகர்வோர் வாங்கித்தர மின்வாரிய அலுவலர்கள் ஒப்புக் கொள்வதேயில்லை. ஏற்கனவே, இந்த தாமதம் குறித்து, மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் கோயம்புத்துார் கன்ஸ்யூமர் காஸ் புகார் அளித்து, தாமதமாகும் காலத்துக்கேற்ப அபராதம் விதிக்க வேண்டுமென்று கோரியது. ஆணையமும் ஏற்றுக் கொண்டு, மின் வாரியத் தலைவருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்தது.மின்சார மீட்டர்களை நுகர்வோரே வாங்கிக் கொள்ள அனுமதிக்குமாறு, மின் வாரியத்துக்கு ஆணையம் அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில், கடந்த மாதத்தில், இதற்கான அறிவிப்பை மின் வாரியம் வெளியிட்டது.ஒரு முனை மின் இணைப்பு மீட்டர் ரூ.970, மும்முனை மின் இணைப்பு ரூ.2610 என்று விலையும் குறிப்பிடப்பட்டது. ஆனால் நேற்று வரையிலும் இதுகுறித்த சுற்றறிக்கை மற்றும் குறிப்புகள் எதுவும் மின் வாரிய அலுவலகங்களுக்கு அனுப்பப்படவில்லை. எந்தெந்த நிறுவனத்திடம், எந்த சீரியல் எண்களில் இதை வாங்க வேண்டுமென்று எந்தக் குறிப்பும் தரப்படவில்லை.மின் இணைப்புக்கு விண்ணப்பித்து, பல மாதங்களாகக் காத்திருக்கும் நுகர்வோர் பலரும், இந்த அறிவிப்பால் மகிழ்ச்சி அடைந்திருந்தனர். அறிவித்து பல நாளாகியும், இப்போது வரை தாமதம் ஏற்படுவதால் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் பல்லாயிரக்கணக்கான விண்ணப்பதாரர்கள், மின் இணைப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.அறிவிப்பை வெளியிடும் அரசுக்கு, அதை நடைமுறைப்படுத்துவதற்கு ஏன் இத்தனை தாமதமென்பது தான் புரியவில்லை.
டிரான்ஸ்பார்மருக்கும் பற்றாக்குறை!
மின்சார மீட்டர் பற்றாக்குறையால்வீடுகள் மற்றும் கடைகளுக்கான மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்படுவது போல, 63/11 கே.வி.ஏ., 100/11 கே.வி.ஏ., மற்றும் 250/11 கே.வி.ஏ., ஆகிய டிரான்ஸ்பார்மர்கள் பற்றாக்குறையால் வணிகக் கட்டடங்களுக்கு மின் இணைப்பு வழங்குவதிலும் பெரும் தாமதம் ஏற்படுவதாக புகார்கள் குவிந்துள்ளன.இவற்றையும் நுகர்வோரே வாங்கித்தரலாம் என்று கூறப்பட்டாலும், அதைப் பெரும்பாலான மின் வாரிய அலுவலர்கள் ஏற்றுக் கொள்வதில்லை என்று புகார் எழுந்துள்ளது. ஆனால் நுகர்வோர் தான் வாங்கித்தருவதில்லை என்று மின் வாரிய அதிகாரிகள் தரப்பில் பதில் தரப்படுகிறது.