உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பாதுகாப்பு இல்லாத பகுதியா சென்னை கடற்கரை? இரவில் பொதுமக்களை விரட்டுவதால் விரக்தி!

பாதுகாப்பு இல்லாத பகுதியா சென்னை கடற்கரை? இரவில் பொதுமக்களை விரட்டுவதால் விரக்தி!

சென்னையின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக மெரினா கடற்கரை உள்ளது. உலகின் இரண்டாவது நீளமான நகர்ப்புற கடற்கரையான இங்கு, பண்டிகை மற்றும் வார விடுமுறை நாட்களில், மாலை வேளையில் குடும்பத்தினர் கூடி பொழுதை கழிக்கின்றனர்.காலையில் உடற்பயிற்சி செய்யவும், பலரும் வருகின்றனர். இவர்கள் மட்டுமின்றி, வெளியூரில் இருந்து வருவோரும், இரவு வரை மெரினாவிற்கு வருகின்றனர். வேலை பளு, மன அழுத்தத்தை குறைக்க கடற்காற்றும், அலைகளும் பெரிதும் உதவுகின்றன. வீடு, அலுவலகங்களில் ஏற்படும் பிரச்னைகளை மறந்து, இயல்புநிலைக்கு திரும்ப, சென்னைவாசிகளுக்கு கடற்கரை ஒரு வரப்பிரசாதமாக அமைந்து உள்ளது.ஆனால், இரவு 10:00 மணிக்கு மேல் கடற்கரையில் யாரும் இருக்கக்கூடாது என, போலீசார் தடை போட்டுள்ளனர். தப்பித்தவறி கடற்கரையில் இருப்போரையும் ரோந்து வாகன போலீசார் விரட்டியடிக்கின்றனர். பொழுதுபோக்குவதற்காக வருவோரையும், அவர்களை நம்பி கடை விரித்தவர்களையும் கட்டாயப்படுத்தி வெளியேற்றுகின்றனர். இதற்கு போலீசார் தரப்பில் கூறப்படும் காரணம் விநோதமாக இருக்கிறது. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய போலீசாரே, இரவு நேரத்தில் கடற்கரைக்கு வருவோருக்கு பாதுகாப்பு இருக்காது என, கைவிரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது சம்பந்தமாக, சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜலில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அதில், கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிப்பதற்காக, மெரினாவிற்கு வரும் மக்களை போலீசார் தாக்குவதையும், விரட்டி அடிப்பதையும் விளக்கியிருந்தார். இந்த வழக்கு விசாரணை, பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் முகமது சபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், வந்தது.அப்போது, 'நேர கட்டுப்பாடு இன்றி பொதுமக்களை அனுமதித்தால், சட்டவிரோத செயல்கள் நடக்கவும் வாய்ப்பு உள்ளது. மேலும், குற்றங்கள் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும், அதனால் பொது இடங்களில் ஒன்று கூட நேர கட்டுப்பாடு விதிக்கும் அதிகாரம், காவல் துறைக்கு உள்ளது' எனவும், போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.மனுதாரர் கோரிக்கையை பரீசிலித்து, காவல் துறை முடிவெடுக்கும்படி, நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் போலீசாரும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது : மெரினா கடற்கரையை ஒட்டி அண்ணா சதுக்கம், மெரினா, பட்டினப்பாக்கம் என, மூன்று காவல் நிலையங்கள் உள்ளன. அவற்றில் போதுமான போலீசாரும் உள்ளனர். கடற்கரை ரோந்து பணிக்கென போலீசார் ஒதுக்கப்படுகின்றனர். அதற்கு வாகன வசதியும் உள்ளது.மெரினாவில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை அடையாளம் காணும் விதமாக, ஆங்காங்கே சுழலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளன.மணற்பரப்பில் ரோந்து செல்ல ஆறு பிரத்யேக வாகனமும் உள்ளது. இப்படி, அனைத்து வசதிகளும் உள்ளன. தேவைப்பட்டால் ஆயுதப்படை போலீசாரையும், சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துகின்றனர்.முன்னர் நள்ளிரவு 12:00 மணி வரை, கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். பின், இரவு 10:00 மணி வரை மட்டுமே போலீசார் தொந்தரவின்றி, கடற்கரையில் இருக்க முடியும். அதன் பிறகு, சமூகவிரோதிகளின் தொந்தரவு இருப்பதாக கூறி, போலீசார் தொந்தரவு செய்து வெளியேற்றுகின்றனர். பாதுகாப்புக்கு அடையாளமான போலீசாரே, பாதுகாப்பு இல்லை எனக்கூறி மக்களை வெளியேற்றுவது விநோதம் தான்.சென்னை நகரமே இரவு முழுவதும் இயங்குகிறது. உணவகங்கள், கேளிக்கைகள் என குதுாகலிக்கிறது. ஆனால் எந்த செலவும் இல்லாமல் கிடைக்கும் இயற்கையான கடற்கரை அனுபவத்தை பெற, சாதாரணமான சாமானியர்களுக்கு அனுமதி இல்லை. விபரம் தெரியாமல் சிக்கிக் கொள்ளும் சுற்றுலா பயணியருக்கு, சமூக விரோதிகளிடம் இருந்து வரும் ஆபத்தை விட, போலீசாரின் கெடுபிடி கடுமையானதாக தெரிகிறது. உண்மையில், சமூகவிரோதிகளிடம் இருந்து வரும் ஆபத்தை தடுக்க வேண்டிய போலீசார், அதற்கு மாறாக அப்பாவிகளை விரட்டியடிப்பது அபத்தமானது. கடலில் குளிப்பதற்கு தடை விதிப்பதில் அர்த்தம் உள்ளது. இதில் விதிமீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கலாம் அல்லது எச்சரித்து அனுப்பலாம். ஆனால், வெறுமனே கடலை ரசிக்க வருவோரை போலீசார் கெடுபிடி செய்வது தவறு. மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய கடமையில் உள்ள போலீசார், சமூகவிரோத செயல்களை ஒடுக்குவதில் தான் முழு கவனத்தை செலுத்த வேண்டும். இதற்கு, கடற்கரை பகுதிகளில் தொடர் ரோந்து சென்று, பாதுகாப்பை உறுதி செய்வதை விடுத்து, அப்பாவிகளிடம் கெடுபிடி செய்வது நியாயமானது தானா என்பதற்கு அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் தான் விளக்கம் கூற வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து மீனவர்கள் கூறியதாவது:வீட்டில் உறங்க போதுமான இடவசதியும், காற்றோட்ட வசதிகள் இல்லாததால், அருகே உள்ள மெரினா மணற்பரப்பில் நுாற்றுக்கணக்கானோர் உறங்குவது வழக்கம். ஆட்டோ ஓட்டுனர்களும் மெரினாவை ஒட்டிய சாலையில் நிறுத்தி, அவற்றிலேயே உறங்குவர்.இங்கு, பணியில் உள்ள போலீசாருக்கு, அருகே வசிப்பவர் யார், வெளியில் இருந்து வந்தோர் யார் என்பது தெரியும். அதை விட சமூகவிரோதிகள் யார் என்பதும் தெரியும். போலீசார் மனது வைத்தால், இரவு முழுவதுமே கடற்கரையை மக்கள்அனுபவித்து மகிழ முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மக்கள் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம்

மக்களை மெரினாவில் அனுமதிப்பதை குறித்து, சென்னை கடலோர பாதுகாப்பு குழுமம், டி.எஸ்.பி., ஜி.பழனிசெல்வம் கூறியதாவது: மெரினா கடற்கரை முழுவதையும் கண்காணிக்கும் வகையில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. உப்பு காற்று காரணமாக, இந்த கேமராக்கள் சீக்கிரம் பழுதாகிவிடுகின்றன. இதனால், சமூக விரோத செயலில் ஈடுபடுவோரை கண்காணிப்பதில் சிரமம் உள்ளது.இரவு, 10:00 மணிக்கு 'டாஸ்மாக்' கடைகள் மூடப்பட்டவுடன், மது குடிப்போர், கடற்கரை அணுகு சாலையை ஆக்கிரமித்து விடுகின்றனர். மணல் பரப்பிலும் உட்கார்ந்து மது குடிக்கின்றனர். போதையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு கத்திக்குத்து சம்பவங்கள் நடந்துள்ளன. பாலியல் தொழில், பெண்கள் மானபங்கம் செய்யப்படுவது உள்ளிட்ட குற்றங்களும் நடக்கின்றன. செயின் பறிப்பு, குடிபோதையில் ஏற்பட்ட கொலைகள் என, பல்வேறு குற்ற சம்பவங்கள் நடந்துள்ளன. கடற்கரை போன்ற இடங்களில் இரவு நேரத்தில் சமூக விரோதிகளின் ஊடுருவல் அதிகமாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே, அங்கு நடமாட தடை செய்யப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பு கருதிதான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமூக விரோதிகளின் பிடியில் எவரும் சிக்கிக் கொள்ளாமல் இருக்க, இரவு, 10:00 மணிக்கு மேல் அலைகள் அருகிலோ, கடற்கரை மணல் பரப்பிலோ எவரும் இருக்க வேண்டாம் என, 'ட்ரோன்' வாயிலாகவும் அறிவிப்பு வெளியிடுகிறோம். அனைத்து நடவடிக்கைகளும் மக்கள் நலன் சார்ந்து தான் எடுக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

பல ஆண்டு கடைபிடிக்கும் நடைமுறை

மெரினாவில் இரவு நேரங்களில் அனுமதி அளிக்காமல் இருப்பது தற்போது மட்டுமல்ல, பல ஆண்டுகளாக கடைபிடிக்கும் நடைமுறைதான். இரவு நேரங்களில் அனுமதித்தால் சட்டவிரோத செயல்கள் நடப்பதற்கும், திருட்டு போன்ற குற்றங்கள் நடப்பதற்கும் வழிவகுக்கும்.அழகு, திருவல்லிக்கேணி உதவி கமிஷனர்

மெரினா கடற்கரை பாதுகாப்பு விபரம்

கடற்கரையின் மொத்த பரப்பளவு, 6 கி.மீ., குதிரை ரோந்து: காலை, 5:30 - 8:00 மணி வரை, மாலை, 5:00 - 8:00 மணி வரை பீச் பேட்ரோல் கண்காணிப்பு கேமரா: நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை 98 இடங்களில் அமைப்பு; கடலோர காவல் படை சார்பில் 8 இடங்களில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.உயர் கோபு மின்விளக்கு: எம்.ஜி.ஆர்., சமாதி - கலங்கரை விளக்கம் வரை 16 அமைக்கப்பட்டுள்ளன.

மறுப்பது சரியல்ல

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் சென்னை முதல் இடத்தை பிடித்து உள்ளதாக சமீபத்திய ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது பெருமை அளிக்கிறது. இந்தியாவிலேயே, அதிகமான பெண் காவலர்கள் அடங்கிய மாநிலமாகவும் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. இப்படி பாதுகாப்பான நகரம் என பெயர் எடுத்துள்ள போதிலும், மெரினாவில் பொதுமக்களை இரவில் அனுமதிக்காமல் மறுத்து வருவது சரியல்ல என, சென்னைவாசிகள் தெரிவிக்கின்றனர்.

கடலோர பாதுகாப்பு செயல்பாடு எப்படி

தமிழக காவல் துறையின், கடலோர பாதுகாப்பு குழுமம், திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை, கடற்கரை மற்றும் கடல் சார்ந்த பகுதிகளை கண்காணிக்கிறது. கடலில், 12 - 600 நாட்டிக்கல் மைல் வரை கண்காணிக்கப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரையில் தினமும், 70 போலீசார், மீனவ சமூகத்தைச் சேர்ந்த எட்டு பேர், இரண்டு 'ஷிப்ட்'களில் பணிபுரிகின்றனர். மணல் மற்றும் சாலைகளில் செல்லும், ஏ.டி.வி., வாகனம், 'பொலிரோ கேம்பர்' ரோந்து வாகனம் கண்காணிப்பு பணியில் உள்ளது.கடலில் சிக்கித்தவிக்கும் மீனவர்கள் குறித்து கண்காணித்து, 30 நாட்டிக்கல் மைல் வேகத்தில் செல்லும் இரண்டு படகுகளும், ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன. மெரினாவில் கடல் அலையில் சிக்கித்தவிப்போரை மீட்க, மெரினா கடற்கரையில் உயிர் பாதுகாப்பு பிரிவும் செயல்படுகிறது. இதில் பணிபுரியும் போலீசார், 2023ல் மட்டும் கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய, 128 பேரை மீட்டுள்ளனர்.பெசன்ட் நகர், கலாஷேத்ரா காலனியைச் சேர்ந்த 60 வயது முதியவர், சில நாட்களுக்கு முன் இரவு 9:00 மணிக்கு மேல், பெசன்ட் நகர் கடற்கரைக்கு சென்றார்.அங்கு வந்த 20 முதல் 25 வயதுக்கு உட்பட்ட இருவர், முதியவரிடம் 10 ரூபாய் கேட்டுள்ளனர். பணத்தை கொடுத்த பின், மீண்டும் பணம் கேட்டுள்ளனர். அவர் மறுத்த போது, முதியவரை தாக்கி அவரிடம் இருந்து 2,000 ரூபாயை பறித்து தப்பினர். இதுகுறித்து அப்பகுதி ரோந்து போலீசாரிடம், நடந்த சம்பவத்தை முதியவர் கூறினார். இது அடிக்கடி நடக்கும் செயல்தான் எனக்கூறி, போலீசார் அங்கிருந்து சென்றுவிட்டனர்.பெசன்ட் நகர் கடற்கரையில், போலீசார் கண்காணிப்பு இல்லாததால், இரவு நேரத்தில் அடிக்கடி வழிப்பறி நடக்கிறது. கண்காணிப்பு கேமராக்களும் உடைக்கப்பட்டு உள்ளதால், அங்கு செல்லவே மக்கள் அச்சப்படுகின்றனர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

முருகன்
ஜூலை 01, 2024 16:55

இரவு பத்து மணிக்கு மேல் மெரினா வில் பொது மக்களுக்கு என்ன வேலை


subramanian
ஜூலை 01, 2024 13:55

மெரினாவில் பாதுகாப்பு தர முடியாது என்று அறிவிக்க வேண்டியதுதானே? காவல் துறை கைகள் கட்டப்பட்ட நிலையில் உள்ளது. சமூக விரோத கும்பல் செயல்பட, பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி