திருப்பூர் : திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக பணியில் சேர்ந்த லட்சுமி, ஐந்தே மாதத்துக்குள் இடம் மாற்றப்பட்டுள்ளார். மக்கள் நலனையொட்டிய தனது அதிரடி செயல்பாடுகளுக்குப் பெயர் பெற்ற இவரது சேவைக்குக் கிடைத்த பரிசு இதுதானா என்று பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக லட்சுமி கடந்த ஆக., மாதம் பொறுப்பேற்றதும், பல அதிரடி நடவடிக்கைகள் மூலம் மக்களை எளிதாக கவர்ந்தார். மக்களை அலைக்கழிக்காமல் மனுக்களை விசாரித்தல், குற்றங்களை தடுத்தல், குறைத்தல், பழைய குற்றவாளிகளைக் கண்காணித்தல், போதைப்பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்துதல் போன்றவற்றுக்கு தனித்தனியாக போலீஸ் குழுக்களை அமைத்தார்.சட்டவிரோத மது விற்பனைக்கு கிடுக்கிப்பிடி போட்டார். 'பார்'களில் விற்பது தெரிந்தால், இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை பாயும் என்று எச்சரிக்கை செய்திருந்தார். ரோந்து பணியில் போலீசாரை பம்பரமாக சுழலவிட்டார். கமிஷனர் வாகனத்தை பின்தொடர்ந்து வரும், அதிவிரைவு படையினரை நிறுத்தினார்.மக்களுக்கான திட்டங்கள்
'டெடிகேட்டடு பீட்' திட்டத்தை அமல்படுத்தி, மக்கள் எளிதாக போலீசாரை அணுக வழிவகுத்தார். பள்ளி, கல்லுாரிகள், குடியிருப்புகளில் போலீசார் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'ஆபரேஷன் ஜீரோ கிரைம்' திட்டம் கொண்டு வரப்பட்டது. குடியிருப்பு பகுதியில் இளம் சிறார்களை நல்வழிப்படுத்த 'கிளப்'கள் திறக்கப்பட்டன. தனியே வசிக்கும் முதியவர்களை வாரம் ஒரு முறை சந்தித்து, அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்யப்பட்டு வந்தது. பணியில் ஒழுங்கீனமாக இருந்த போலீசார் மீது 'சஸ்பெண்ட்' நடவடிக்கை, இடமாற்றம் போன்றவற்றை எடுக்கவும் கமிஷனர் தயங்கியதில்லை. சிறப்பாக பணியாற்ற போலீசாருக்கு பாராட்டுகள் கிடைத்தன.போக்குவரத்து மாற்றங்கள்
மாநகரில் போக்குவரத்து நெரிசல், விபத்துக்களை குறைக்கவும், சில ரோடுகளில் ஒரு வழிப்பாதை, போக்குவரத்து மாற்றம் போன்றவற்றை செய்தார். ஸ்டேஷனில் நிலுவையில் உள்ள மனுக்களை விசாரிக்க, மாதம்தோறும் முகாம் ஏற்படுத்தப்பட்டு, உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் மூலம் விசாரித்து தீர்வு செய்யப்பட்டது.கேள்வி எழுப்பும் மக்கள்
ஒவ்வொரு அதிரடி நடவடிக்கை மூலமும் மக்களை ஈர்த்து வந்த கமிஷனர் லட்சுமி, திடீரென நேற்று முன்தினம் சென்னைக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார். பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சிறப்பாக பணியாற்றிய இவருக்கு இடமாற்றம்தான் பரிசா என்று பொதுமக்களில் பலரும் கேள்வி எழுப்புகின்றனர். நேர்மையான அதிகாரிகள் குறைந்தது, ஒரு ஆண்டாவது பணியாற்றினால் தான், குற்றம் உள்ளிட்ட அனைத்தையும் கட்டுப்படுத்த முடியும். பின்னலாடை ஏற்றுமதியில் கோலோச்சி வரும் திருப்பூரில் நன்றாகப் பணி செய்யக்கூடிய அதிகாரியை, ஆறு மாதங்களுக்குள்ளாக இடமாற்றம் செய்தால், போலீசாருக்கு மட்டுமல்லாமல், மக்களுக்கும் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உருவாகின்றன. அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.அரசியல் தலையீடு காரணமா?
மதுக்கடைகளில், முறைகேடான மது விற்பனை, சட்டவிரோத 'பார்'களை போலீஸ் கமிஷனர் லட்சுமி முற்றிலும் முடக்கினார். இதற்காக, ஆளுங்கட்சி மக்கள் பிரதிநிதிகளின் 'சிபாரிசை' முற்றிலும் புறக்கணித்தார். ஆளுங்கட்சியினர் மட்டுமின்றி, பிற கட்சியினரும் அவரிடம், அவ்வளவு எளிதில் அணுகமுடியாதபடி 'சிம்ம சொப்பனமாக' விளங்கினார். இரவு ரோந்தில் 'பீட்' போலீசார், தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று அதிரடி காட்டிய கமிஷனர் நடவடிக்கை சமூக விரோதிகளுக்கு நெருக்கடியாக அமைந்தது. கடந்த சில நாட்களாகவே, லட்சுமியை 'டிரான்ஸ்பர்' செய்வதற்கான நடவடிக்கைகளை, ஆளுங்கட்சியை சேர்ந்த சில முக்கியப்புள்ளிகள் தீவிரமாக மேற்கொண்டதாக கூறுகின்றனர் போலீசார்.புதிய போலீஸ் கமிஷனர் மீது நம்பிக்கை
திருப்பூர் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள ராஜேந்திரனும், கண்டிப்புக்குப் பெயர் போனவர்; இதனால், இவரும், பணியில் உள்ள போலீஸ் கமிஷனர் லட்சுமி போலவே திறம்படச் செயல்புரிவார் என்ற கருத்து, போலீஸ் வட்டாரங்களில் எழுந்துள்ளது.