உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தமிழகத்தில் மட்டும் தான் தாய் மொழியை கொல்கின்றனர்

தமிழகத்தில் மட்டும் தான் தாய் மொழியை கொல்கின்றனர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சங்கம் வைத்து தங்கத்தமிழ் வளர்த்த மதுரை மண்ணில், மதுரை மேற்கு சட்டசபைத் தொகுதியில் என் மண்; என் மக்கள் பாதயாத்திரைக்கு நான் சென்றபோது, பொதுமக்கள் பேரன்புடன் திரளாகச் சூழ, பாரம்பரியக் கலைகளான மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், தப்பாட்டம் என, தாரை தப்பட்டை முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சுட்டெரிக்கும் வெயிலை சற்றும் பொருட்படுத்தாமல் சுற்றிலும் மக்கள் வெள்ளம். பொற்றாமரை குளம் அமைந்திருக்கும் ஊரிலே, தாமரை மலர்வது; குறிப்பாக தங்கத்தாமரையாக மலர்வது உறுதியாகி விட்டது.

மலிவான அரசியல் அகற்றம்

அனைத்து கட்சிகளும், தங்கள் முதல் மாநாட்டை நடத்தும் மதுரை மண், அரசியல் மாற்றத்திற்கான மண். தமிழக அரசியலின் திருப்புமுனை அனைத்தும், மதுரையில் இருந்தே துவங்கின. தமிழக மக்கள் பல ஆண்டுகளாக, நேர்மையான அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்து வருகின்றனர். ஊழலை, அடாவடி, குடும்ப அரசியல், ஓட்டு வங்கியாக மக்களை பார்க்கும் மலிவான அரசியலை, தமிழகத்தில் இருந்து அகற்றும் முதற்படியாக, லோக்சபா தேர்தலை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.சங்கம் வளர்த்து தமிழ் வளர்த்த பெருமைக்குரியவர்கள் நாம். முதல் மூன்று தமிழ்ச் சங்கம் நமக்குத் தெரியும். நான்காவது சங்கத்தை, அய்யா பாண்டித்துரை தேவர் சிறப்பாக நடத்திக் காட்டினார். இன்று, பிரதமர் மோடி உலகெங்கும் தமிழ் மொழியின் பெருமைகளைக் கொண்டுசென்று, ஐந்தாவது தமிழ்ச் சங்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.இதுவரை தமிழகத்துக்குள் மட்டுமே திராவிடக் கட்சிகள் வைத்திருந்த நம் தமிழ் மொழியின் தொன்மையையும், செழுமையையும், கலாசாரத்தையும், 10 ஆண்டுகளில், பிரதமர் மோடி, உலகெங்கும் கொண்டு சென்றிருக்கிறார். திருக்குறள் இன்று 39 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. ஐ.நா., சபையில் நம் தமிழ்ப் புலவர் கணியன் பூங்குன்றனாரின் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' வரிகளை மேற்கோள் காட்டி, பிரதமர் பேசியுள்ளார். கடந்த 2021ல், சென்னை மெட்ரோ ரயில் துவக்க விழாவின்போது, அவ்வையாரின் வரிகளை மேற்கோள் காட்டிப் பேசினார். டில்லியில், கல்வியின் மதிப்பைப் பற்றிப் பேச, திருக்குறளை மேற்கோள் காட்டினார். சென்னை தரமணியில், 74 கோடி ரூபாயில் செம்மொழி ஆய்வு நிறுவனத்தை மேம்படுத்தி உள்ளார்.

தமிழில் தேர்ச்சி இல்லை

இனி தமிழ்ச் சங்கம் என்றால், உலகம் முழுதும் பிரதமர் மோடி பெயர்தான் நினைவுக்கு வரும். இதெல்லாம் பிரதமராக இருந்து மோடி தமிழுக்கு ஆற்றிய தொண்டு.ஆனால், தமிழகத்தில் உள்ள தமிழ் பேசும் தலைவர்கள் செய்தவைகளைப் பார்ப்போம். தமிழகத்தில், திராவிட மாடல் ஆட்சி நடத்துவதாகச் சொல்லும் தி.மு.க., ஆட்சியில், 2022ல் நடந்த 10ம் வகுப்பு தமிழ் மொழித் தேர்வில், 55,000 குழந்தைகள் தேர்ச்சி பெறவில்லை. இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்திலும், அம்மாநிலத்தோரும்; மாநிலத்தை ஆளுவோரும் தாய்மொழியை மறந்ததில்லை. தமிழகத்தில் மட்டும் தான் தாய் மொழியை கொன்று கொண்டிருக்கின்றனர். தமிழ் மொழியை வைத்து, 70 ஆண்டு காலமாக மேடை போட்டு வியாபாரம் செய்து, அரசியல் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் தி.மு.க., ஆட்சி அதிகாரத்தையும் கையில் வைத்துக் கொண்டு, தமிழ் மொழிக்கு செய்த நன்மையின் லட்சணம் இது தான். ஒரு ஆட்சி எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு இலக்கணமாக, தி.மு.க., ஆட்சி உள்ளது.

ரத்த உறவு நிறுவனம்

கடன் வாங்கிய மாநிலங்களில், இந்தியாவில் முதல் இடம். மது விற்பனை வாயிலாக ஆண்டு வருமானம் 44,000 கோடி ரூபாய். இப்படி ஆட்சி நடத்துவோரால், தமிழகத்துக்கு எந்த விதத்திலும்பிரயோஜனம் இல்லை.தேர்தலில், 511 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்தனர். இதுவரை முழுமையாக, 20 வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. மொழியை மட்டும் மூலதனமாக வைத்து, தி.மு.க., இங்கு அரசியல் நடத்தி வருகிறது.மதுரை அமைச்சர், மேலிடத்தின் ரத்த உறவுக்காரர் நிறுவனத்துக்காக, பதிவுத்துறை முடுக்கிவிட்டு, வேலை செய்ய வைத்துள்ளார்.அந்த துறையில் பணி நீக்கம், இடமாற்றம் என ஒவ்வொன்றுக்கும் ஒரு கட்டணம் என வசூல் நடக்கிறது. இந்த ஊழல் பெருச்சாளிகள் அனைவரையும், மக்கள் ஒழித்துக் கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தாண்டு மத்தியில் மோடியை மீண்டும் பிரதமராக்க, தமிழக மக்கள் முடிவெடுத்திருப்பது போல, வரும் 2026 சட்டசபை தேர்தல் வாயிலாக, பா.ஜ.,வுக்கு வாய்ப்பளிக்க முடிவெடுத்துவிட்டதை, பாதயாத்திரையின் ஒவ்வொரு கட்டத்திலும் மக்கள் காட்டும் அன்பால் உணர முடிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை