உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தொழிலாளர் பாடு திண்டாட்டம்: லாபத்தில் இயங்கிய நிறுவனம் நஷ்டத்துக்கு தள்ளப்பட்ட அவலம்

தொழிலாளர் பாடு திண்டாட்டம்: லாபத்தில் இயங்கிய நிறுவனம் நஷ்டத்துக்கு தள்ளப்பட்ட அவலம்

இந்தியா-- இலங்கை ஒப்பந்தப்படி, 1968ல், இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்காக, 11,000 ஏக்கர் வனப்பகுதி வனத்துறையிடம் பெற்று, தேயிலை தோட்டங்களாக மாற்றி, தமிழக அரசு தேயிலை தோட்ட கழகம் (டான்டீ) உருவாக்கப்பட்டது. அதில், நீலகிரி மாவட்டம் குன்னுாரை தலைமை இடமாக கொண்டு, குன்னுார், கோத்தகிரி, சேரம்பாடி, சேரங்கோடு, நெல்லியாளம், கொளப்பள்ளி, தேவாலா, மரப்பாலம், நாடுகாணி, உட்பட, 9 பிரிவுகள் செயல்பட்டன. 1990ல், கோவை மாவட்டத்தில் வால்பாறை; நீலகிரியில் நடுவட்டம் பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதற்கு அரசிடம் இருந்து பணம் பெறாமல் முழுமையாக டான்டீ லாபத்தின் நிதியில் செயல்படுத்தப்பட்டது.

வளர்ச்சியால் லாபம்

மேலும், மற்ற துறைகளுக்கும் லாப தொகை வழங்கி, அரசுக்கு முழு பயனாக இருந்தது. 1998ல் 30 கோடி ரூபாய் லாப ஈவு தொகையாக, தமிழக அரசுக்கு டான்டீ நிர்வாகம் வழங்கியது.அந்நேரத்தில், மாநில அரசு, மத்திய அரசுக்கு வருமான வரி கட்டுவதை தவிர்க்க, ஒரு எக்டருக்கு 1200 ரூபாய் என இருந்த குத்தகை தொகையை, 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியதால், டான்டீ நிதி சுமையில் சிக்கயதாக, தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன. இதே காலகட்டத்தில், தேயிலை விலை வீழ்ச்சி மற்றும், நிதியை கட்ட முடியாமல் திணறிய போது, குத்தகை பணத்தையும் அரசு, நஷ்ட கணக்கில் சேர்த்தது. குத்தகை தள்ளுபடி செய்ய தொழிற்சங்கங்கள் போராட்டங்கள் நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை.

ஆட்குறைப்பு நடவடிக்கை

இதன் காரணமாக, கடந்த 2000மாவது ஆண்டில் ஏற்பட்ட தேயிலை விலை வீழ்ச்சியால், சம்பளம் கொடுக்க முடியாமல் ஆட்குறைப்பு செய்ததால், உற்பத்தி வெகுவாக குறைந்து வருவாய் இழப்பு ஏற்பட்டது. ஆரம்பத்தில், 8000 நிரந்தர தொழிலாளர்கள்; 5000 தற்காலிக தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். தற்போது 3500 நிரந்தர தொழிலாளர்கள், 500 தற்காலிக தொழிலாளர்கள் மட்டுமே உள்ளனர். உற்பத்தி பணியில், 70 சதவீத பேரும், மற்றவர்கள் தோட்டம் மற்றும் நிர்வாக பணியில் உள்ளனர்.

கைவிடப்பட்ட சந்தை பணி

தரமான தேயிலையை சந்தைப்படுத்த, 2004ல் தமிழகத்தில் 'சென்னை, கோவை, மதுரை, திருச்சி,' என, 4 கோட்டம் ஏற்படுத்தி, அனுபவம் வாய்ந்த அலுவலர்கள் நியமித்து, குறியீடு இலக்கு ஊக்குவிக்கப்பட்டது.தகுதி வாய்ந்த முகவர்கள் நியமித்து, அரசு துறைகளுக்கு கடிதம் வழங்கி, போக்குவரத்து கழகம் உள்ளிட்ட துறை கேண்டீன்களுக்கு தேயிலை வழங்கப்பட்டது. 2008க்கு பிறகு இந்த முயற்சி திடீரென கைவிடப்பட்டது. மேலும், ஆளும் கட்சியினர் பரிந்துரை செய்யும் நபர்களுக்கு அதிக சம்பளத்தில் அலுவலக பணிகள் வழங்கி வந்தது. தொழிலாளர்களின் வாரிசுகள் நர்ஸ், மெக்கானிக் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை முடித்த போதும், அலுவலக பணிகளை தகுயானவர்களுக்கு வழங்கவில்லை. இதனால், தாயகம் திரும்பிய தமிழர்களுக்காக, டான்டீ திறக்கப்பட்டதன் நோக்கம் மறைந்து, தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பை தந்துள்ளது. மிகவும் குறைந்த சம்பளம் இங்கு தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதால் பலரும் மாற்று பணிகளுக்கு சென்று விட்டனர்.

வனத்துறையிடம் ஒப்படைப்பு

'டான்டீ' நிர்வாகம் ஆட்குறைப்பை மேற்கொண்டதால், காடுகளாக வளர்ந்த தேயிலை செடிகளால், வனவிலங்கு அச்சம் ஏற்பட்டு, தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணம் காட்டிய அரசு, இந்த இடத்தை மீண்டும் வனத்துறைக்கு ஒப்படைக்கும் முடிவை மேற்கொண்டுள்ளது. முதற்கட்டமாக, நீலகிரி மற்றும் வால்பாறை பகுதியில், 5,000 ஏக்கர் பரப்பளவு தேயிலை தோட்டம் மீண்டும் வனத்துறை வசம் ஒப்படைக்கும் முடிவை அரசு எடுத்துள்ளது. இதனால், தற்போதுள்ள தொழிலாளர்களின் அடிப்படை தேவைகளை கூட முழுமையாக செய்து கொடுக்காமல் அவர்கள் தானாக வெளியேறும் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இங்குள்ள எஸ்டேட் அலுவலகங்களில், 765 அலுவலர்கள், ஊழியர்கள் பணியாற்றி வந்த நிலையில், தற்போது, 165 பேர் மட்டுமே பணி புரிகின்றனர். அலுவலர்கள் குடியிருந்த பழமை வாய்ந்த கற்சுவர் வீடுகள் பாழடைந்து வருகிறது. இவற்றை பராமரித்து வாடகைக்கு கொடுத்தால் 'டான்டீ'க்கு வருமானம் கிடைக்கும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தொழிலாளர் நிலை பரிதாபம்

மறுபுறம், டான்டீ தோட்டங்களில் உள்ள குடியிருப்புகள், பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ளதால், குன்னுார், கோத்தகிரி, சேரம்பாடி, சேரங்கோடு, நெல்லியாளம், கொலப்பள்ளி, தேவாலா, மரப்பாலம், நாடுகாணி, மழை காலத்தில் வீடுகள் ஒழுகும் நிலையிலும், தடுப்பு சுவர் இல்லாமல் இடியும் நிலையிலும் உள்ளன. மேலும் பல இடங்களில் சாலைகள் மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளன. அப்பகுதிகளில் குப்பைகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படாததால், நோய் பரவும் அபாயம் உள்ளது. குளியல் அறை, கழிப்பிடங்கள் பராமரிப்பில்லாமல் உள்ளன.

தீர்வுக்கு என்ன வழி?

டான டீ ஓய்வு பெற்ற கள அலுவலர் சுப்ரமணி: டான்டீ தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொள்ளாமலும், போதிய பணி நியமனம் செய்யாமல் நிர்வாகம் செயல்பட்டது தான், நலிவடைய முக்கிய காரணம். நேரடி மார்க்கெட்டிங் செய்யாமல், 3வது நபர்கள் (புரோக்கர்) மூலம் விற்பனை பார்க்கும் வகையில் பலர் செயல்பட்டதால் நஷ்டம் ஏற்பட்டது. டான்டீ மேம்பாடுக்கு அரசு நடவடிக்கை எடுக்க கடன் வழங்கினாலும், முறையான திட்ட செயல்பாடுக்கு அதிகாரிகள் இல்லாததும், கால அவகாசம் கொடுக்காமல் இருந்ததும் மேம்பாடுக்கு தடையாக இருந்தன. கடந்த, 2022 ஏப்., மாதத்துக்கு பிறகு ஓய்வு பெற்றவர்களுக்கு இரண்டரை ஆண்டுகளாகியும் பண பலன்கள் வழங்கவில்லை. கல்வி, திருமணம் மருத்துவம் ஆகியவைக்கு பணம் இல்லாமல், விலைவாசி உயர்வில், தொழிலாளர்கள் வாழ்வாதாரத்திற்கு ஈடு கொடுக்க முடியாத நிலையில் உள்ளனர். பணி முடித்து வேர்வை காய்வதற்குள் தொழிலாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய வேண்டும் என்ற கூற்று தற்போது பொய்யாகி வருகிறது.

அதிகாரிகள் சொகுசு வாழ்க்கை...

சுப்ரமணியம், பொதுச் செயலாளர், பி.டபுள்யு.யு.சி., தொழிற்சங்கம்: தொழிலாளர் சட்டம் டான்டீயில் பின்பற்றப்படவில்லை. தொழிலாளர்களின் குடியிருப்புகள் ஆண்டிற்கு ஒருமுறை சீரமைக்க வேண்டிய நிலையில், அனைத்து குடியிருப்புகளும் விழும் நிலையில் உள்ளன. சாலை, சுகாதாரமற்ற குடிநீர், போதிய மருத்துவ வசதி மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லாதது மக்களின் உரிமைகளை பறிப்பதாகவே மாறி உள்ளது. அதிகாரிகள் சொகுசாக வாழும் நிலையில், தொழிலாளர்களின் பிரச்னை குறித்து எந்த அரசும் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது.

போதிய பாதுகாப்பு இல்லை...

வெற்றிவேல், தலைவர், சோசியலிச தொழிலாளர் முன்னேற்ற சங்கம்: கோத்தகிரி குயின் சோலை டான் டீ நிறுவனத்தில், குயின்சோலை, கூடக்கல் ஹாடா, கர்சன் வேலி, பறவை காடு மற்றும் தேனாடு கூப்பு ஆகிய, 6 மையங்களில், 200 நிரந்தர தொழிலாளர்கள் உள்ளனர். இங்குள்ள குடியிருப்பு போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளன. பராமரிப்பு என்ற பெயரில், சமீபத்தில் சில வீடுகளுக்கு மட்டும் மேற்கூரை அமைக்கப்பட்டன. தடுப்புச்சுவர் மற்றும் கம்பி வேலி இல்லாமல் வன விலங்கு நடமாட்டத்தால் தொழிலாளர்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையில், பாறை உருண்டு, குடியிருப்பு சேதம் அடைந்த சம்பவமும் நடந்துள்ளது.

வீடு வழங்க நடவடிக்கை அவசியம்

ஓய்வு பெற்ற 'டான்டீ' தொழிலாளி சத்தியசீலன்: தொழிலாளர்கள் தற்காலிகமாக தங்குவதற்காக, கட்டப்பட்ட லைன் வீடுகளில், 40 முதல் 50 ஆண்டுகள் வசித்து வருகிறோம். பழமையான இந்த வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. சம்பளம் மிகக் குறைவாக இருப்பதால், அவை குடும்ப செலவுக்கு கூட போதுமானதாக இல்லை. இதனால், குழந்தைகள் கல்வி, திருமணம் போன்ற செலவுகளுக்கு பெற்ற கடனை அடைக்க முடியாத நிலையில் உள்ளோம். இதனால், ஓய்வு பெற்ற பின் வீடுகள் இன்றி சிரமப்படும் நிலை ஏற்படுகிறது. எனவே, ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு, அவர்கள் வசித்து வரும் வீடுகளை சொந்தமாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொழிலாளர் உரிமைகள் மறுப்பு

ரமேஷ்-, சி.ஐ.டி.யு., மாவட்ட பொருளாளர்: அரசு கட்டுப்பாட்டில் உள்ள 'டான்டீ' யில் தொழிலாளர்கள் உரிமை கேட்டு பெற முடியாத நிலையில், போராடவும் முடியாத சூழலில், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. நல்ல நிலையில் வருவாய் ஈட்டி தந்த தேயிலை தோட்டங்கள் வனமாக மாற்றி வருவதுடன், தேயிலை தொழிற்சாலைகள் மூடும் நிலைக்கு மாறுவதற்கு அதிகாரிகள் முக்கிய காரணம். இங்கு தொழிலாளர்களின் பல்வேறு உரிமைகள் மறுக்கப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வரை தொழிலாளர் ஊதியம், 452 ரூபாய் என வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, 443.20 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதுவே சிறந்த உதாரணம். எனவே, தொழிலாளர்கள் மீது அக்கறை கொண்ட உயர் அதிகாரிகளை நியமித்தால் இந்த நிறுவனம் மீண்டு வரும். -நிருபர் குழு-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

aaruthirumalai
ஏப் 24, 2025 23:35

டாஸ்மாக்கிடம் ஒப்படைத்தால் லாபம் அடையலாம் ஹிஹிஹி


sri
ஏப் 24, 2025 06:36

டான் டீ இலங்கையில் இருந்து திருப்பி அனுப்ப்பட்ட அகதிகளுக்காக தொடங்கப்பட்டது. தேயிலை தோட்டத்தில் தலைமுறை தலைமுறையாக வேலை செய்தவர்கள் வேறு வேலை எதுவும் தெரியாதவர்கள் என்பதற்காக அவர்களுக்காக எம்ஜிஆர் தொடங்கினார். இன்று இடதுசாரிகள் பணம் தின்னும் அரசு அதிகாரிகள் கையில் இருக்கிறது மாமூல் வாங்கிக் கொண்டு அரசியல் வாதிகள் தூங்குகிறார்கள். இதை உங்கள் நிருபர் குழு மக்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டும்


புதிய வீடியோ