உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  நிலச்சரிவில் பலியானோர் உடல்களை மீட்பதில் சவால்!: கனரக உபகரணங்கள் இல்லாமல் தவிப்பு

 நிலச்சரிவில் பலியானோர் உடல்களை மீட்பதில் சவால்!: கனரக உபகரணங்கள் இல்லாமல் தவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வயநாடு: நிலச்சரிவு ஏற்பட்ட முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் மழை தொடர்வதால், மீட்புப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், வீடுகளை முற்றிலுமாக மூடியுள்ள செம்மண் குவியல்கள், பாறைகள், ராட்சத மரங்களை அகற்றுவதற்கான கனரக உபகரணங்கள் தேவையான எண்ணிக்கையில் இல்லை. இதனால் உடல்களை மீட்பதும், காணாமல் போனவர்களை தேடுவதும் பெரும் சவாலாக உள்ளது. கேரளாவின் வயநாடில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஜூலை 30ம் தேதி அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவுகளில் முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நுால்புழா கிராமங்கள் மண்ணில் புதைந்தன.மழை வெள்ளத்துடன் சேறும் சகதியும், பாறைகளும், மரங்களும் அடித்து வந்து குடியிருப்பு பகுதி களை முற்றிலுமாக மூடின. அதிகாலை ஆழ்ந்த துாக்கத்தில் இருந்தவர்கள் மண்ணுக்குள் புதைந்தனர். மழை வெள்ளத்தில் பலர் அடித்து செல்லப்பட்டனர். இதுவரை, 280க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது.

ராட்சத மரங்கள்

சாலியாறு கரையோரப் பகுதிகளில் மட்டும், 151 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 200 பேரை காணவில்லை என கூறப்பட்டாலும் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து வரும் கேரள வருவாய் துறை அமைச்சர் ராஜன் கூறுகையில், ''காணாமல் போனவர்கள் பற்றி விபரங்களை ரேஷன் அட்டைகள், ஆஷா மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் வாயிலாக சேகரித்து வருகிறோம்,'' என்றார்.நிலச்சரிவில் அடித்து வரப்பட்ட செம்மண், பாறைகள், ராட்சத மரங்கள் வீடுகளை மூடியுள்ளன. அவற்றை அகற்றுவதில் பெரும் சவால் நிலவுகிறது.மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள வீரர் ஒருவர் கூறியதாவது:நாங்கள் வீட்டின் மொட்டை மாடியில் நின்றுகொண்டிருக்கிறோம். கீழ் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. அங்கே உடல்கள் இருப்பது உறுதியாக தெரிகிறது. ஆனால், இந்த மண் குவியல்கள், மரங்களை அகற்றுவது சவாலாக உள்ளது. அதற்கு கனரக உபகரணங்கள் தேவை. அவை போதிய எண்ணிக்கையில் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.அமைச்சர் ராஜன் கூறுகையில், ''இதுபோன்ற நிலச்சரிவுகள் 2கி.மீ., பரப்பளவுக்கு ஏற்படுவது வழக்கம். இந்த முறை மிகப் பெரிய பரப்பளவு மண்ணுக்குள் புதைந்துள்ளன. ''முண்டக்கல்லில் இருந்து 8 கி.மீ., தொலைவில் உள்ள மலப்புரம் மாவட்டத்தின் சாலியார் ஆற்றில் ஒதுங்கிய உடல்கள் மீட்கப்பட்டுஉள்ளன,'' என்றார்.முண்டக்கல் அருகே உள்ள தேயிலை தோட்டத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் பலர் வேலையில் இருந்தனர். அவர்கள் தங்கிய குடியிருப்புகள் அடித்து செல்லப்பட்டுஉள்ளன.அவர்கள் வேறு இடத்துக்கு மாறினரா அல்லது நிலச்சரிவில் சிக்கினரா என்பது தெரியவில்லை. தேயிலை தோட்ட மேலாளரையும் காணவில்லை என, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

தாமதம்

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், ''காலை 7:00 மணி வரை 256 பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அனைத்தும் முழு உடல்கள் அல்ல. ''கிடைத்த உடல் பாகங்களும் அடங்கும். 154 உடல்களை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளோம். நேற்று முன் தினம் இரவு மட்டும் 100 பிரேத பரிசோதனைகளை டாக்டர்கள் செய்துஉள்ளனர்,'' என்றார்.பிரேத பரிசோதனைகளில் ஈடுபட்டுள்ள அரசு பெண் டாக்டர் ஒருவர் கூறுகையில், ''என் அனுபவத்தில் எத்தனையோ பிரேத பரிசோதனை செய்துள்ளேன். இது போல வாழ்நாளில் கண்டதில்லை. ''எங்கள் கண் முன் உடல்கள் குவிக்கப்பட்டு கொண்டே உள்ளன. சிறிய குழந்தைகளின் உடல்களை காணும் போது இந்த வேலையை விட்டே ஓடிவிடலாம் என தோன்றும். ''மனதை கல்லாக்கிக் கொண்டு பணியை தொடர்கிறோம். பிரேத பரிசோதனை பணியை மேற்கொள்ள வேண்டியிருப்பதால், காயம் அடைந்தோருக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுகிறது,'' என்றார்.தாளவாடியைச் சேர்ந்த மூவர் பலி: ஈரோடு மாவட்டம் தாளவாடி, காமயன்புரம் கிராமத்தைச் சேர்ந்த ரங்கசாமி, அவரின் மனைவி புட்டு சித்தம்மா, மகன் மகேஷ் ஆகியோர் முண்டக்கையில் நிலச்சரிவில் சிக்கி பலியாகினர்.

தாய்ப்பால் கொடுத்த இடுக்கி பெண்

மிகப் பெரிய பேரழிவுக்கும், இருளுக்கும் இடையே, இடுக்கியைச் சேர்ந்த பெண்ணின் செயல், நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு 4 வயது மற்றும் 4 மாத குழந்தைகள் உள்ளனர். நிலச்சரிவு குறித்து அறிந்ததும் குடும்பத்துடன் புறப்பட்டு வயநாடு வந்துள்ளார். ''பல குழந்தைகள் தாய் - தந்தையை இழந்துள்ளதை கேள்விப்பட்டோம். இரண்டு குழந்தைக்கு தாயான எனக்கு மனது கேட்கவில்லை. கைக்குழந்தைகளுக்கு தாய்ப்பால் எவ்வளவு முக்கியம் என்பது தெரியும். அதை கொடுக்கத் தான் வந்துள்ளேன்,'' என்றார்.

வேண்டாம்

உலகின் பல்வேறு பகுதிகளிலும் போர், பேரழிவுகள், விபத்துகள், மரணங்கள், பெருங்குற்றங்கள் நடந்த பகுதிகளுக்கு சென்று பார்ப்பது, 'டார்க் டூரிஸம்' என்ற பெயரில் உலக அளவில் அதிகரித்து வருகிறது. இந்த அடிப்படையில், வயநாடு பகுதிக்கு பயணியர் யாரும் வரவேண்டாம் என, போலீசார் எச்சரித்துள்ளனர்.மீட்புப் பணிகள் பாதிக்கப்படும் என்பதால், தகவல் அறிய 112 என்ற அவசர எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்பே எச்சரித்தோம் வானிலை ஆய்வு மையம்

'கேரளாவுக்கு ஏழு நாள் முன்பே எச்சரிக்கை விடுத்தோம்' என்றார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. இல்லை என்றார் கேரள முதல்வர் பினராயி.இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மைய தலைவர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறியதாவது:ஜூலை 25 முதல் ஆக., 1 வரை, மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் மத்திய பகுதியில் கடும் மழை பொழிவு இருக்கும் என எச்சரித்து இருந்தோம். இந்த காலகட்டத்தில் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டது. ஜூலை 30 காலையில் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டது. 20 செ.மீ., வரை மழை பெய்யும் என கூறியிருந்தோம்.ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டாலே செயலில் இறங்கிவிட வேண்டும். ரெட் அலெர்ட் வரும் வரை காத்திருக்க கூடாது. ஹிமாச்சல் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களுக்கும் இதே எச்சரிக்கை தான் விடுத்தோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ram pollachi
ஆக 02, 2024 14:07

நோயாளியை கையால் தொடாமல் வைத்தியம் பார்க்கும் டாக்டரா பிணத்தை அறுத்து தைக்கிறார்கள்? விபத்தில் இறந்த நபரை பிணவறைக்குள் பார்க்க செல்லும் முன்னரே அங்குள்ள ஊழியர்கள் சொல்வார்கள் வேண்டாம் சார் நல்ல நினைவாக அவர் இருக்கட்டும் என்று. இவர்களும் வேலை செய்ய மாட்டார்கள் பிறரையும் செய்ய விடாமல் செய்வது பி... குணம்.


Ram pollachi
ஆக 02, 2024 13:55

தமிழ்நாட்டில் இருந்து கொண்டு போகும் கனிம வளங்களை கடப்பாரையால் வெட்டி எடுக்கிறார்களா? அதிநவீன இயந்திரங்கள் மற்றும் கனரக வாகனங்களை பார்க்கும் போது வல்லரசு நாடுகளுக்கே சவால் என நினைக்க தோன்றுகிறது. பலா மரத்துக்கு தேவை என்றால் வேரிலும் காய் விடும் என்ற பழமொழி சரியாய் போச்சு.


Ramesh Sargam
ஆக 02, 2024 12:44

வீண் அரசியல் செய்ய கேரளா முதல்வரை சந்திக்க செல்லும் தமிழக முதல்வர், இந்த நேரத்தில் ஏன் அவரை சந்திக்க செல்லவில்லை? மேலும் அவரை சந்திக்காவிட்டாலும் பரவாயில்லை, ஒரு மனிதாபிமானத்துக்காகவாவது வயநாடு சென்று அங்கு பாதிப்புக்குள் உள்ளாகிய தமிழக, கேரளா, மற்றும் மற்ற மாநில மக்களை சந்தித்து ஆறுதல் கூறவாவது சென்றிருக்க வேண்டும். வெறும் ரூ. 5 கோடி நிவாரணம் கொடுத்து கைகழுவுவது ஒரு தலைவனுக்கு சிறப்பா...?


அப்புசாமி
ஆக 02, 2024 07:53

பேரு பெத்த பேருங்கற மாதிரி... நாமதான் வல்லரசு.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ